ராணிப்பேட்டை;தி.மு.க., வேட்பாளர் மாற்றத்தை கண்டித்து, இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, கத்தியை காட்டி விரட்டி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரக்கோணம் தனி தொகுதி தி.மு.க., வேட்பாளராக, பவானி அறிவிக்கப்பட்டார்; இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பவானி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக ராஜ்குமார் நியமிக்கப்பட்டார்.
இதை கண்டித்து, பவானியின் ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் மாலை, ராணிப்பேட்டையில் உள்ள வேலுார் கிழக்கு மாவட்ட செயலர் காந்தி வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.அப்போது காந்தி இல்லாததால், கிளம்பிச் சென்றனர். நேற்று காலை, 10:00 மணிக்கு மீண்டும் காந்தி வீட்டுக்கு வந்த பவானியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, காந்தி வீட்டில் இருந்தார்; ஆனால், வெளியில் வரவில்லை.
ஆர்ப்பாட்டம் செய்தவர்களை வெளியே செல்லும்படி காந்தியின் ஆதரவாளர்கள் கூறினர். 'காந்தி வந்து பதில் சொன்னால் தான் போவோம்' என, பவானியின் ஆதரவாளர்கள் கூறினர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காந்தியின் அடியாட்கள் சிலர், கத்தியை காட்டி அவர்களை விரட்டினர். அவர்களை, பவானியின் ஆதரவாளர்கள் மடக்கி பிடித்து தாக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதை அடுத்து, இரு தரப்பினரையும் போலீசார் அடித்து விரட்டினர்.