'போரும் அமைதியும்' போன்ற, காலத்தை வென்ற பெரும்படைப்புகளின் ஆசிரியராகிய ருஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், நான் வழிபடும் ஞானி. அவர் 'தேசியம் என்பது ஒரு கற்பிதமே' என்று சொல்லியிருக்கிறார். இந்திய தேசியம் பற்றிய எனது கருத்துக்களை மறுப்பவர்கள் எப்போதும் இவ்வரியைச் சுட்டிக் காட்டி எனக்கு கடிதம் எழுதுவதுண்டு.
எனது பதில் எப்போதும் ஒன்றுதான். தேசியம் மட்டுமல்ல, பண்பாட்டின் அடித்தளமாக நாம் கொண்டுள்ள அனைத்து அமைப்புகளுமே கற்பிதங்கள்தான். குடும்பம், அரசு, மதம் எல்லாமே. ஏன் நீதி, கடவுள் போன்றவைகூட. எவையுமே புனிதமானவையோ, மனிதனுக்கு முந்தையவையோ அல்ல. ஆனால் இவை ஒவ்வொன்றுக்கும் அவற்றுக்கான பயனும் பங்களிப்பும் உண்டு.
சிந்திப்பவருக்கு தேசியம் என்னும் கற்பிதத்தின் வரலாறென்ன என்பது எளிதில் அறிந்து கொள்ளக் கூடியதாகவே இருக்கும். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல்வேறு காரணங்களினால் தங்களை ஒரு மக்கள் கூட்டம் என்று நினைக்கையில் தேசம் என்னும் கருத்து உருவாகிவருகிறது.
உண்மையில் பயணங்கள் மிக அரிதாக இருந்த பழங்காலத்தில் மிகச்சிறிய பழங்குடித் தேசங்களே உருவாகியிருக்கும். பின்னர், வணிகத்தின் மூலமும், படையெடுப்புகள் மூலமும், அச்சிறு நாடுகளிலிருந்து இன்னும் சற்று பெரிய நாடுகள் உருவாயின. அப்பெரிய அரசுகள் மேலும் இணைந்து பேரரசுகள் உருவாயின.
இந்தியப் பெருநிலத்தில் அவ்வாறு பல்லாயிரம் பழங்குடி அரசுகள் இருந்துள்ளன. பலநுாறு அரசுகள் அமைந்துள்ளன. புகழ்பெற்ற பேரரசுகளும் உருவாகி வந்தன. தேசியம் என்பது பல்வேறு சிறிய தேசியங்கள் இணைந்து தொகுப்பாக உருவாகி வருவதுதான். இது அரசியல் வரலாறு. இன்னொரு பக்கம் பண்பாட்டு தேசியம் என்று ஒன்று உண்டு. அரசுகளும், பொருளியலும் வெவ்வேறாக இருந்தும் கூட ஒரு நிலப்பரப்பின் மக்கள் தங்களை ஒரே பண்பாடு கொண்டவர்களாக உணர்வது அது. எப்போது தமிழில் எழுதப்பட்ட இலக்கியம் என்று ஒன்று நமக்குக் கிடைக்கிறதோ அப்போதே இந்தியா என்னும் பண்பாட்டுத் தேசியம் உருவாகிவிட்டிருப்பதை நாம் காண்கிறோம்.புறநானுாற்றில் உள்ள முதல் பதினாறு பாடல்கள் தான் தமிழிலேயே (கிடைத்த, எழுதப்பட்ட) மிகத்தொன்மையானவை. அவற்றின் மொழிநடையே அதற்குச் சான்று. ஆறாவது பாடலிலேயே 'வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்' என்று காரிக்கிழார் எழுதிய பாடல் வந்துவிடுகிறது.
வடக்கே பனி படர்ந்த இமயமலை முதல் தெற்கே குமரி வரை ஒரு நிலத்தை அது தங்களுக்குரியதாக உருவகிப்பதைக் காணலாம். நெடுங்காலம் கழித்துதான் சிலப்பதிகாரத்திலும், தொல்காப்பியத்திற்கு பனம்பாரனார் எழுதிய பாயிரத்திலும் குமரி முதல் வேங்கடம் வரையிலான தமிழகம் பற்றிய ஒரு சித்திரம் வருகிறது.
அதற்கும் முன் 'ஆசேது ஹிமாசலம்' என்று சமஸ்கிருத நுால்கள் இந்திய நிலத்தை உருவகிக்கின்றன. சேதுமுனை முதல் இமையம் வரை என பொருள். தொன்மையான நுால்கள் பாரதவர்ஷம் என்று இந்த நிலத்தை சொல்கின்றன. இந்து மத சடங்குகள் முழுக்க, இந்த ஒட்டுமொத்த நிலத்தையும் கருத்தில் கொண்டுதான் உள்ளன.இந்தியாவில் உள்ள அனைத்து தென்னக மன்னர்களும் இமயத்தையும், கங்கையையும் வெற்றி கொள்ள விழைவதைக் காணலாம். இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன், கங்கை கொண்ட சோழன் போன்றவர்கள் உதாரணம். வடஇந்திய மன்னர்கள் குமரி வரை வந்து திரும்ப விரும்புவதையும் காணலாம். பண்பாட்டு தேசமாக அறியப்பட்ட இந்நிலத்தை, அரசியல் தேசமாகவும் ஆக்கிக் கொள்ளும் விழைவுதான் அது.இவ்வாறு பண்பாட்டு அடிப்படையில் ஒன்றாக இருந்த தேசம், அரசியல் அடிப்படையில் ஒன்றாக ஆனது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் என்பதில் ஐயமில்லை. நாம் இன்று பேசிக் கொண்டிருக்கும் நவீன தேசியம் என்பதுதான், ஐரோப்பாவில் பதினேழாம் நுாற்றாண்டுக்கு பிறகு உருவானது. ஐரோப்பாவை ஒட்டுமொத்தமாக ஆட்சி செய்த போப்பாண்டவரின் புனித ரோம பேரரசுக்கு எதிராக, ஐரோப்பாவிலிருந்த பல பகுதிகள் தங்களை தனி நாடுகளாக உருவகித்துக் கொண்டன. அவ்வாறு உருவானதே இன்றைய அரசியல் தேசியம் பற்றிய கருத்துக்கள்.
நவீன தேசியத்திற்கு மூன்று அடிப்படைகள். ஒன்று, பண்பாட்டு ரீதியாக ஒன்றாக இருத்தல். இரண்டு, பொருளியல் ரீதியாக ஒன்றாக இருத்தல். மூன்று, அரசியல் மற்றும் அரசு நிர்வாகம் சார்ந்து ஒன்றாக இருத்தல். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இத்தகைய ஒரு நவீன தேசியத்தை அடையவே நாம் போராடினோம். 1947க்குப் பின் அதை நாம் அடைந்தோம்.ஆக, நவீன தேசியம் என்பது, இங்கு தொன்மையான காலம் முதலே இருந்து வந்த பண்பாட்டு தேசியத்தின் ஒரு வளர்ச்சி வடிவமே ஆகும். ஐரோப்பாவில் இந்த நவீன தேசிய உருவகங்கள் மொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாயின.
ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் துணைமொழிகள் இருந்தன. அவை அந்த மொழிவாத தேசியத்துக்கு எதிராகப் போராடின. ஃப்ரான்ஸில் கார்ஸிகா போன்ற பகுதிகள் தனிநாடு கோரிப் போராடின. இத்தாலியில் சார்டினியா போன்ற பகுதிகள் தனிநாடாக பிரிய விரும்பின. பிரிட்டனில் ஸ்காட்லாந்தும் அயர்லாந்தும் தனிநாடுகளாக பிரியும் பொருட்டு போரிட்டன.ஆனால், காலப்போக்கில், ஐரோப்பா இந்த உபதேசியங்களை இயல்பாக தன்னுள் ஒருங்கிணைத்துக் கொண்டது. ஆகவே தான் அது பொருளியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வெற்றியின் பாதையில் செல்கிறது. மிக விரைவிலேயே அவர்கள் மொழிவழி தேசியம் சார்ந்த மனநிலையை விட்டுவிட்டு எதிர்காலத்தை மட்டுமே கருத்தில் கொண்டு ஒரு நவீன தேசியத்தை வகித்துக் கொண்டார்கள். அந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கு இணையான உரிமை கொண்ட ஒரு ஜனநாயக தேசியம் அது. குடியேறியவர்களுக்கும் அது சமமான இடம் அளிக்கிறது.அதாவது அந்த தேசியத்தின் வேர்கள் இறந்த காலத்தில் இல்லை. எதிர்கால லட்சியத்தில் உள்ளன.
ஆகவே தான் அதன் அடுத்த படியாக இன்று ஒரு சோதனை முயற்சியாக ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் இணைந்து ஒரு பொருளியல் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியிருக்கின்றன.இன்னும் சில காலத்தில், அவை ஒரே தேசமாக மாறக்கூடும். இதுதான் இயல்பான பரிணாமம்.மாறாக இந்தியாவில் தேசியம் பற்றி பேசும் முற்போக்காளர்கள் கூட நேர் எதிரான ஒரு பாதையை வளர்ச்சியாக சுட்டிக் காட்டுகிறார்கள். அதாவது ஐரோப்பா எந்தெந்த உள்முரண்பாடுகளை கடந்து வந்துவிட்டதோ அதையெல்லாம் இங்கே கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.தேசியம் என்பது ஒரு கற்பிதமே. ஆனால் அந்த கற்பிதத்திற்கு ஒரு பயன்பாடு உண்டு. ஒரு நிலப்பரப்பின் மக்கள், தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு, இணைந்து, வணிகத்தையும் தொழிலையும் வளர்த்து, தங்கள் மீதான தாக்குதலை எதிர்த்து நின்று, வளர்ச்சியடைவதற்கான ஒரு வழி அது.
அப்படி ஓர் ஒற்றுமை தேவை என்பதனால் அதை உணர்ச்சி ரீதியாக ஆக்கிக்கொள்கிறோம். குடும்ப உறவையும் திருமண உறவையும் அப்படித்தான் உணர்ச்சிகரமாக ஆக்கியிருக்கிறோம் இல்லையா? திருமணம் என்பது ஓர் ஒப்பந்தமே என நம் அனைவருக்குமே தெரியும். ஆனாலும், அது ஏழு பிறவியாக வரும் உறவு என்று சொல்கிறோம்.இந்த நவீன தேசியத்திலிருந்து, மேலே சற்று சென்றால், நாமும் ஐரோப்பா போல இன்னும் பெரிய தேசியத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். என்றோ ஒரு நாள் இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கையும், வங்காள தேசமும் இணைந்து ஒற்றை தேசமாக ஆகுமென்றால் அதுதான் வளர்ச்சி. அப்போது ஒரு பயனுள்ள கற்பிதம் மேலும் பயனுள்ள கற்பிதமாக ஆகிறது. இந்தியா உடைந்து ஒவ்வொரு துண்டும் ஒன்றுக்கொன்று பூசலிடுமென்றால் அது வீழ்ச்சி.இந்தியா சுதந்திரம் பெற்றபோது, பத்தாண்டு காலம் இந்தியாவின் ஒற்றுமை நீடிக்காதென்று வின்ஸ்டன் சர்ச்சில் சொன்னார். இதை 'காந்திக்குப்பின் இந்தியா' என்ற நுாலில் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார்.
அடுத்த ஒவ்வொரு பத்தாண்டுக்கும், ஒரு ஐரோப்பிய நிபுணர், இந்தியா துண்டு துண்டாக உடையுமென்று ஆரூடம் சொல்லியிருப்பதை சுட்டிக் காட்டுகிறார். ஆனால், அறுபது ஆண்டுகளாக இந்தியா மேலும் மேலும் ஒருங்கிணைந்து, தன் பிரச்னைகளை வென்று முன்னகர்ந்தே வருகிறது.வளர்ச்சியை நோக்கமாக கொண்ட ஒரு மாநில அரசு, இந்தியா என்னும் ஒட்டுமொத்தத்தில் தன் இடத்தை அறிந்ததாக இருக்கும். பேரங்கள் மூலமும் நிர்பந்தங்கள் மூலமும் தனக்கான அனைத்தையும் பெற்று, முன்னேறவே அது முயலும். ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் ஒரிசாவின் நவீன் பட்நாயக்கும் மிகச்சிறந்த உதாரணங்கள். மாறாக, ஊழலாலும் செயலின்மையாலும் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளே இந்தியா என்னும் தேசிய அமைப்பை எதிரியாக நமக்கு சுட்டிக்காட்டுகிறார்கள்.
-ஜெயமோகன்-கட்டுரையாளர், எழுத்தாளர், தொடர்புக்கு jeyamohan.writer @gmail.com, www.jeyamohan.in
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE