ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் - அறிவுறுத்துகிறார் ராஜேஷ் லக்கானி
ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் - அறிவுறுத்துகிறார் ராஜேஷ் லக்கானி

ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் - அறிவுறுத்துகிறார் ராஜேஷ் லக்கானி

Updated : ஏப் 24, 2016 | Added : ஏப் 24, 2016 | கருத்துகள் (5) | |
Advertisement
'பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும், தேர்தலில் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி: தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, முதல் சட்டசபை தேர்தலை சந்திக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக, எனக்கு இது முதல் சட்டசபை தேர்தல் தான். ஆனால்,
ஓட்டுக்கு பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம் - அறிவுறுத்துகிறார் ராஜேஷ் லக்கானி

'பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என அனைவரும், தேர்தலில் மனசாட்சியோடு செயல்பட வேண்டும்' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, முதல் சட்டசபை தேர்தலை சந்திக்கிறீர்கள். எப்படி உணருகிறீர்கள்?

தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக, எனக்கு இது முதல் சட்டசபை தேர்தல் தான். ஆனால், 1996 சட்டசபை, 1998 லோக்சபா தேர்தல், 2001, 2006 சட்டசபை, 2009 லோக்சபா தேர்தல்களில், மாவட்ட தேர்தல் அதிகாரியாக பணியாற்றி உள்ளேன். எனவே, தேர்தல் பணி பழக்கமானதே.


பொதுமக்களிடம் இருந்து எந்த மாதிரியான புகார்கள் அதிக அளவில் வருகின்றன?

முதலில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் தொடர்பாக விளக்கம் கேட்டு போன் செய்தனர். இது தொடர்பான புகார்களும் வந்தன. தேர்தல் அறிவிப்புக்கு பின், சுவரொட்டி, பேனர் தொடர்பான புகார் வந்தது. தற்போது, தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் வருகின்றன.


தமிழகத்தில் தேர்தல் கமிஷன் என, ஒன்று இருக்கிறதா என்றே தெரியவில்லை என, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ, தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறாரே?

தேர்தல் அறிவித்த மூன்று நாட்களுக்குள், சுவரொட்டி, பேனர்களை அகற்றினோம். பொதுவாக இப்பணி முடிய, ஒரு மாதமாகும். ஆனால், மூன்றே நாட்களில் லட்சக்கணக்கான சுவர் விளம்பரங்களை அழித்தோம். தேர்தல் விதிமீறல் தொடர்பாக, 2,800 வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.

ஆளுங்கட்சி மீதும், நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரத்திக்கு பணம் கொடுப்பதாக வரும் புகார் மீது உடனுக்குடன் வழக்குப்பதிவு செய்கிறோம்.தீவுத்திடலில் ஆளுங்கட்சி கூட்டம் நடந்தபோது, அதிக பேனர்கள் வைத்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளோம். இதை விளம்பரப்படுத்தாததால், நிறைய பேருக்கு தெரியாமல் இருந்துஇருக்கலாம். கட்சி பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கிறோம்.குறிப்பிட்ட இடத்தில், பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, சந்தேக அடிப்படையில் புகார் கூறியபோது, நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறுகின்றனர். இதுபோன்ற விவகாரங்களில், தேர்தல் கமிஷன் நேரடியாக நடவடிக்கை எடுக்காது. மற்ற துறைகளை நடவடிக்கை எடுக்க வைப்பதுதான், தேர்தல் கமிஷன் பணி. இரண்டாவதாக, அதிகாரிகளை மாற்றும்படி கூறினர். ஆனால், 22ம் தேதிக்கு பின் தான், அதிகாரிகள் தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளனர். புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு, மாதந்தோறும் தேர்வு வைப்பர். அதில் பாஸ், பெயில் இருக்கும். ஆனால், இறுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை தான் கணக்கில் கொள்வர். அதேபோல், மே, 16க்கு பின்இறுதி மதிப்பீடு செய்யுங்கள்.


இத்தனை கட்டுப்பாடுகளுக்கு பிறகும், தேர்தலுக்காக பண நடமாட்டம் அதிகரித்து உள்ளதே?

பண நடமாட்டத்தை தடுக்க, பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தேர்தல் கமிஷனர் வந்தபோது, அரசியல் கட்சிகள் இதே புகாரை கூறின. பணத்தை தடை செய்ய, முயற்சி எடுத்து வருகிறோம். பறக்கும் படை போட்டு, பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. எனினும், புது வழியில் பணம் கடத்தப்படுவதாக புகார் வருகிறது.'பணம் வாங்குவது வெட்கப்பட வேண்டிய விஷயம்' என, மக்கள் நினைக்க வேண்டும். அதற்காக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பிளாட்டில் குடியிருக்கும் நபர், 'எனக்கு, 500 ரூபாய், 'டாப் அப்' செய்தனர்' என, கூச்சமின்றி கூறுகிறார். அதை அவர் தவறாக உணரவில்லை. இந்நிலை மாற வேண்டும்.

கடந்த முறைபோல், இந்த முறை தேர்தலுக்கு முன், 144 தடை சட்டம் அமல்படுத்தப்படுமா?

அப்படி எந்த எண்ணமும் இல்லை.


தேர்தலை மையமாக வைத்து பரப்பப்படும் வதந்திகளை எப்படி தடுப்பீர்கள்?

'வாட்ஸ் ஆப்' மூலம் வதந்தி பரவுகிறது. இதற்கு உடனுக்குடன் பதில் சொல்கிறோம். வதந்தி பரப்புவோரை, கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வருகி றோம். சமூக வலைதளங்களில், 'சைபர் நெட்' மூலம் புகார்களை கண்காணிக்கிறோம். தவறாக பிரசாரம் செய்த, 50 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.


ஆள் பிடித்து வந்து பிரசாரம் நடத்துவதை தடுக்க முடியுமா?

பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்கள் அழைத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்த செலவை தேர்தல் செலவில் சேர்க்கத் தான் வாய்ப்பு உள்ளது. வண்டி செலவு, ஆட்களை கூட்டி வரும் செலவு அதிகமாக உள்ளது. ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும், வீடியோ எடுக்க உத்தரவிட்டுள்ளோம். வந்தவர்களிடம் பேட்டி எடுத்து, அவர்கள் எவ்வளவு வாங்கினர் என்றால், அந்த தொகையை கணக்கிட்டு, தேர்தல் செலவு கணக்கில் சேர்ப்போம். ஒரு கோடி ரூபாய் செலவு என்றால், 10 வேட்பாளராக இருந்தால், அவர்கள் செலவு கணக்கில், 10 லட்சம் ரூபாய் சேர்க்கப்படும்.போலீசார் அதிகம் பேர் ஆளும் கட்சி கூட்டத்தில் உள்ளனர். மற்ற கட்சி கூட்டத்திற்கு செல்வதில்லை என புகார் வந்துள்ளது.இப்போது சர்குலர் அனுப்பி உள்ளோம். அனைத்து தலைவர்களுக்கும் எந்த மாதிரியான பாதுகாப்போ, அதை வழங்க வேண்டும். பொதுக்கூட்டத்தில், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் ஈடுபடக் கூடாது.


தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கான விழிப்புணர்வு பிரசாரம், வெற்றி இலக்கை எட்டி விட்டதா?

வெற்றி இலக்கு மே, 16 மாலை தான் தெரியும்.


அரசியல் கட்சிகளின் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் உங்களுக்கு உள்ளதா?

சில சமயங்களில் உள்ளுக்குள் கோபம் வரும். நாம் பதிலும் கூற முடியாது. இருந்தாலும், வெளிக்காட்டாமல் உள்ளேன். நாம் தவறு செய்யவில்லை என்றால் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்து அமைதியாகி விடுகிறேன்.


விகிதாச்சார அடிப்படையில், பிரதிநிதிகளின் எண்ணிக்கை அமைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறதே?

இதற்கு தேர்தல் நடத்தை விதி அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

வாக்காளர் பட்டியலில், ஒவ்வொரு முறையும் குளறுபடி ஏற்படுவது ஏன்?

வாக்காளர் பட்டியல் குளறுபடிக்கு காரணம், சிலர் முகவரி மாறி செல்லும்போது, பழைய இடத்தில் பெயர் நீக்காமல், புதிய முகவரியில் பெயர் சேர்க்கின்றனர். இறந்தவர்கள் பெயர் நீக்கப்படாமல் உள்ளது. தற்போது கம்ப்யூட்டர் மயமாக்கல் மூலம் தவறு களையப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் சரியாகி விடும்.


தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்தும், கள்ள ஓட்டு தொடர்கிறதே?

கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தி, நேரடியாக ஒளிபரப்பு செய்கிறோம். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியிலும், வேட்பாளர்களின் தேர்தல் ஏஜன்டுகள் உள்ளனர். அவர்கள் ஒத்துழைப்பு இல்லாமல், கள்ள ஓட்டு போட முடியாது. அவர்கள் சரியாக செயல்பட்டால், கள்ள ஓட்டு போட வாய்ப்பில்லை.


அரசு அதிகாரிகள் அனைவரும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றச்சாட்டு உள்ள நிலையில், தேர்தல் நடைமுறைகள் எப்படி நியாயமாக இருக்கும்?

அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு சாதகமாக, பாதகமாக இருக்கிறார் என்பதை, எப்படி முடிவு செய்வது என்பதில் தர்மசங்கடம் உள்ளது. எதிர்க்கட்சிகள், ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகள் என, பெரிய பட்டியல் கொடுக்கின்றனர். அதிகாரிகளோ, தாங்கள் நல்ல பொறுப்பில் இருப்பதால், புகார் கூறுகின்றனர். என்ன தவறு செய்தோம் என காரணம் கூறுங்கள் என கேட்கின்றனர்.அவர்கள் சாதகமாக செயல்படுவது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கிறோம். 1950ம் ஆண்டு முதல் அரசு ஊழியர்களை வைத்து தான், தேர்தல் நடத்துகிறோம். அவர்கள் ஒரே கட்சிக்கு சாதகமாக இருந்தால், ஆட்சி மாற்றம் இருக்காது. அதிகாரிகளும் ஜாக்கிரதையாக இருப்பர். அதிகாரிகள் ஒரு தலைபட்சமாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல், 'சார்ஜ்' கிடைத்தால், பதவி உயர்வு பாதிக்கும். இது அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்கள் பாரபட்சமாக செயல்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.


தேர்தல் கமிஷன் தயார் செய்த விழிப்புணர்வு பிரசார படங்களில், ரஜினி உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் யாரும் நடிக்க முன்வரவில்லையே?

எல்லாரிடமும் முயற்சித்தோம். தேர்தல் இருப்பதால், எல்லாரும் தயக்கம் காண்பிக்கின்றனர்.

சர்ச்சைக்குரிய விஷயம் இல்லை எனக் கூறினாலும், சிலர் பயப்படுகின்றனர். ஒரு நடிகை தேர்தல் இல்லாத விளம்பரத்திற்கு வருகிறேன் என்றார். எனினும், நிறைய பேர் முன்வந்து நடித்து கொடுத்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.


வாகன சோதனையில் அரசியல்வாதிகள் மட்டும் சிக்குவதே இல்லையே ஏன்?

சோதனை செய்யாமல் இருந்தால், பணம் பட்டுவாடா தாராளமாக இருக்கும். பத்திரிகை, வெளி மாநிலம் என எல்லா இடத்திலும், பணம் குறித்து பேசுகின்றனர். பணம் பட்டுவாடாவை தடுக்க,

இச்சோதனை அவசியம். சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இம்முறை உடனடியாக உரிய ஆவணங்களை காண்பித்தால், பணத்தை திரும்ப கொடுக்கிறோம்.


ஆன்லைனில் ஓட்டளிக்கும் வசதி வருமா?

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் ஆன்லைனில் ஓட்டளிக்க, கமிட்டி அமைத்து, சட்ட திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பறக்கும் படையில், மத்திய அரசு அதிகாரிகள் நியமிக்கப்படுவது, மாநில அரசு அதிகாரிகளின் நேர்மையை சந்தேகிப்பதாக உள்ளதே?

மாநில அதிகாரிகளை சந்தேகிக்கவில்லை. பறக்கும் படை செயல்பாட்டில் பாரபட்சம்

இல்லை என்பதை நிரூபிப்பதற்காக, மத்திய அரசு ஊழியர்களை நியமிக்கிறோம். யாரும் குற்றம் சொல்லக்கூடாது என்பதற்காக அவர்களை நியமிக்கிறோம்.


இளைய தலைமுறையினரிடம் தேர்தல் விழிப்புணர்வு எப்படி உள்ளது?

அவர்கள் ஓட்டளிக்க, சமூக வலைதளங்களில், விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம்.

இளைஞர்களை கவரும் வகையில் பேசி வருகிறோம். கல்லுாரிகளில் சென்று பிரசாரம் செய்கிறோம். இம்முறை ஓட்டளிப்பர் என்ற நம்பிக்கை உள்ளது.


நீங்கள் தலைமை தேர்தல் அதிகாரியாக பதவியேற்ற பின், புகுத்திய புதுமைகள் என்ன?

புதுமையாக இளைஞர்களை ஓட்டு போட வைக்க, சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொண்டுள்ளோம். தொழில்நுட்பத்தில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. எனவே, தேர்தலில் தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி உள்ளோம். ஓட்டுச்சாவடியில் எத்தனை பேர்

வரிசையில் உள்ளனர் என்பதை, எஸ்.எம்.எஸ்., மூலம் அறிய ஏற்பாடு செய்து உள்ளோம்.

'மொபைல் ஆப்ஸ்' அறிமுகப்படுத்தி உள்ளோம். தகவல் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்து வதில், தமிழகம் முதலிடம் வகிக்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு, இதுவரை எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, 13 ஆயிரம் சக்கர நாற்காலிகள் பயன்படுத்த உள்ளோம்.


இப்பதவி மூலம் நீங்கள் சாதிக்க நினைப்பது என்ன?

தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு சாதிக்க ஆசை. 100 சதவீதம் நேர்மையாக, எந்த புகாரும் இல்லாமல் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.


தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது கடும் தண்டனை இல்லாதது தான் தேர்தல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்திருப்பதற்கு காரணமா?

அதிக தண்டனை, குற்றத்தை தடை செய்ய உதவும். அதேநேரம் தவறாக பயன்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. இருக்கிற சட்டத்தை பயன்படுத்தி, 100 சதவீதம் நேர்மையாக தேர்தல் நடத்துவது சாத்தியம்.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், அரசியல் கட்சிகளை சார்ந்து இருப்பதால், தேர்தல் பணிகள் நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து...

தனிப்பட்ட நபரின் விருப்பு வேறு; பொறுப்பில் இருப்பது வேறு. அரசு ஊழியர்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். தவறு செய்ய வாய்ப்பு குறைவு.


அரசியல் கட்சிகள், எப்படி ஒத்துழைப்பு தருகின்றன?

நல்ல விதமாகவே உள்ளது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மனசாட்சிப்படி செயல்படுங்கள். இதையே, எல்லோரிடமும் சொல்ல விரும்புகிறேன்.


சமீபத்தில் ரசித்த திரைப்படம் குறித்து?

சமீபத்தில், 'தெறி' படம் பார்த்தேன். நன்றாக இருந்தது.


உங்கள் சொந்த மாநிலம்?

சத்தீஸ்கர்.


தமிழக மக்கள் குறித்து உங்கள் அபிப்பிராயம்?

தமிழக மக்கள் ரொம்ப நல்லவர்கள். பாசத்துடன் உள்ளனர். நான் தொடர்ந்து, சென்னையில்தான் வசிக்கப் போகிறேன். சொந்த ஊர் இனி சென்னை தான்.


பயோ - டேட்டா

பெயர் : ராஜேஷ் லக்கானி

வயது : 46

கல்வி தகுதி : பி.இ., ஐ.ஏ.எஸ்.,

பொறுப்பு : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி

சொந்த ஊர் : ராய்ப்பூர், சத்தீஸ்கர்



-நமது சிறப்பு நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


வாசகர் கருத்து (5)

Raju - Chennai,இந்தோனேசியா
25-ஏப்-201614:46:08 IST Report Abuse
Raju ஓட்டுக்கு பணம் கொடுபதற்காக கொண்டு செல்வது தெரிந்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது மட்டும் நேர்மையான விசயமா?
Rate this:
Cancel
இளங்கோ - chennai,இந்தியா
25-ஏப்-201611:39:00 IST Report Abuse
இளங்கோ நம் மக்களை, நம் அரசியல் தலைவர்கள் இப்படி ஆலாய் பறக்கும் நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம். ஒரே ஒரு முறை ஆயிரம் ரூபாய் வாங்கி விட்டு அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமக்கு கிடைக்க வேண்டிய பல்லாயிரம் ரூபாயை நம்மை அறியாமலே பறி கொடுக்கிறோம் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
25-ஏப்-201607:58:38 IST Report Abuse
Lion Drsekar ஒட்டு, பணம், வெட்கம், தலைப்பு மிக அருமை, படம் எடுக்கலாம், இந்த மூன்றையும் பிரிக்க முடியாது எப்படி கடமை கண்ணியம் கட்டுப்பாடு போல்தான் இதுவும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X