நாகர்கோவிலில் பூமேடை ராமய்யா என்றொருவர் இருந்தார். கொட்டாரத்தில் அவருக்குச் சொந்தமாக இருந்த பெரிய இல்லத்தில், என் இளமைப்பருவத்தில், நாங்கள் வாடகைக்கு
குடியிருந்திருக்கிறோம். காந்திய இயக்கத்தில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு சிறை
சென்ற தியாகி அவர்.
அதன் பின்னர், நடைமுறை அரசியல் மீது வெறுப்பு கொண்டு, காங்கிரசில் இருந்து வெளியே வந்தார். இன்னும் சொல்லப்போனால், காங்கிரஸ் சார்பில் டாக்டர் மத்தியாஸ் போன்ற பெரும் பணக்காரர்கள் தேர்தலில் நிற்க ஆரம்பித்தபோது, அதற்கெதிராக ஒரு கலகக்காரனாக தன்னை மாற்றிக் கொண்டவர் பூமேடை. பூமேடை என்ற சிறிய அரசியல் இதழை நடத்தினார். ஆகவே அப்பெயர் வந்தது.
பின்னர் வாழ்நாள் முழுக்க அரசியல் கட்சிகளுக்கும், அரசு அமைப்புகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் எதிராக குரல் கொடுப்பவராக தன்னை மாற்றிக் கொண்டார். ஒருமுறை, நாகர்கோவிலில், சிறிய மூத்திரச்சந்து ஒன்றில் நான் சிறுநீர் கழிக்க நின்றபோது அதற்குள் சேற்றில் ஏணி வைத்து ஏறி அவரே தன்னுடைய பொதுக் கூட்டத்துக்கான போஸ்டரை ஒட்டிக் கொண்டிருந்தைக் கண்டேன்.
50 போஸ்டர்கள்:நான் ''இங்கே ஏன் ஒட்டுகிறீர்கள்? மையச்சாலையில் ஒட்டலாமே?'' என்றதற்கு ''தம்பி, நான் மொத்தமே ஐம்பது போஸ்டர் தான் அடிப்பேன். மையச்சாலையில் ஒட்டினால் அதை யாரும் கவனிக்க மாட்டார்கள். இங்கு என்றால் சில நிமிடங்களாவது நின்றாக வேண்டுமல்லவா?'' என்றார். நான் சிரித்துவிட்டேன். ஆனால், அதிலிருந்த புத்திசாலித்தனத்தை கண்ட பின்பு தான் அவரை நான் நெருங்கினேன். அவருடைய பல கூட்டங்களை நான் கேட்டிருக்கிறேன். நாகர்கோவிலின் மனசாட்சியின் குரல் என்று அவரை சொல்லலாம். எங்கு அடித்தள மக்களுக்கு எந்த பிரச்னையிருந்தாலும் அவர் கிளம்பி வருவார். சொந்தமாகவே ஒரு மைக்கும் ஒலிபெருக்கியும் வைத்திருந்தார். ஒரு மேஜையை இழுத்துப்போட்டு, பக்கத்து கடையிலிருந்து மின்சாரம் வாங்கி, அந்த மைக்கை வைத்து பேச ஆரம்பித்தால் அதுதான் பொதுக்கூட்டம்.
அவருக்கு எப்போதும் கொஞ்சம் சபையினர் உண்டு. மற்ற அரசியல்வாதிகள் சொல்லத் தயங்கக்கூடிய விஷயங்களை அப்பட்டமாக கூவிச் சொல்வார். பிறர் அஞ்சக்கூடியவர்களை துணிந்து எதிர்ப்பார். அவருடைய பேச்சுக்களால் பலமுறை அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. பலமுறை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு நன்மை நிகழ்ந்திருக்கிறது.
இதே போன்ற இன்னொருவர் கேரளத்தில் இருந்தார். நவாப் ராஜேந்திரன் என்பது அவர் பெயர். நவாப் என்றொரு பத்திரிகை நடத்தினார். சொந்தமாக வீடோ குடும்பமோ இல்லாமல், திருவனந்தபுரத்தின் உயர்நீதிமன்ற வராந்தாவில் தங்கியிருந்தார். சட்ட அறிவு மிக்கவர்.
அரசியல்வாதிகளுக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுப்பது அவரது சமூகப்பணி. அவரது வழக்கு காரணமாக கங்காதரன் என்ற அமைச்சர், தனது சிறுமியான மகளுக்குத் திருமணம் செய்தது சட்டபூர்வமாக வெளிப்பட்டு, ஒரு முறை ஆட்சி கவிழ்ந்தது. தண்ணீர் குழாய்கள் பதிப்பதில் உள்ள ஊழலை அவர் வெளிக்கொணர்ந்தார்.
ஒருமுறை, அவரது செயல்பாடுகளால், பொறுமை இழந்த அன்றைய கேரள முதல்வர் கருணாகரன், மிகக்கடுமையான குரலில் அவரை மிரட்டி பேசிய போது; மறுநாள் காலை, உணர்வு ரீதியாக கேரளத்தின் தலைமகன் என்று போற்றப்படும் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ், நீதிமன்றத்துக்கு சென்று, நவாப் ராஜேந்திரனின் காலைத் தொட்டு வணங்கி, ஒரு வேட்டி காணிக்கை கொடுத்து வந்தார். தன்னுடையது எந்த அரசியலும் அல்ல, நவாப் ராஜேந்திரன் ஒரு பெரிய மனிதர், அவருடைய வாழ்த்தை பெறவே நான் வந்தேன் என்று, அவர் சொன்னார். அத்துடன், கேரளத்தில், நவாப் ராஜேந்திரனைப் பற்றி இருந்த சித்திரமே மாறியது.
அவர் ஒரு கோமாளியோ பைத்தியமோ அல்ல, ஒரு அரசியல் போராளி என்ற எண்ணம் ஏற்பட்டது. இங்கும் அப்படிப்பட்ட அரசியல் போராளிகள் நம்மிடையே உள்ளனர். மதுவிலக்கு போராட்டத்தில் களத்தில் இறந்த சசி பெருமாள் அவர்கள் ஓர் உதாரணம். அவரை ஒருமுறை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன். நீதிமன்றத்தில், பொதுநலன் நாடி, பல்வேறு வழக்குகளை தொடுக்கும் டிராபிக் ராமசாமி இன்னொரு உதாரணம். இவர்கள், ஊடகங்களால், கோமாளிகளாகவும், கிறுக்கர்களாகவும் காட்டப்படுகிறார்கள். நாமும் அதை விரும்புகிறோம். மெத்தப் படித்தவர்கள் கூட அப்படி வாதிடுவதைக் காணலாம்.
மனசாட்சியின் குரல்:ஏனென்றால், இவர்கள் மனசாட்சியின் குரலை எழுப்புகிறார்கள். அரசியல்வாதியின் மனசாட்சி நோக்கி மட்டுமல்ல, நமது மனசாட்சி நோக்கியும் பேசுகிறார்கள். அதை தவிர்ப்பதற்காகத்தான், நாம் இவர்களை கோமாளிகளாக ஆக்குகிறோம். அதன் வழியாக நாம் தப்பித்துவிடுகிறோம்.இப்படி, விசித்திரமானவர்கள் என்று பலர், தேர்தல் நேரத்தில் நமது கண்களுக்கு படுவதுண்டு. எல்லாத் தேர்தலிலும் போட்டியிட்டு, வைப்புத் தொகை இழப்பவர்கள், விதவிதமான மாறுபட்ட கோஷங்களுடன் தேர்தலைச் சந்திப்பவர்கள், வெவ்வேறு வகையான தோற்றங் கொண்டவர்கள். சில இடங்களில், மூன்றாம் பாலினத்தவர் தேர்தலில் போட்டியிடுவதும், அவ்வாறே நம்மால் பார்க்கப்படுகிறது.
இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாகவே கோமாளிகள் என்றே வகைப்படுத்துவது நம்முடைய பொதுபுத்தியின் இயல்பு. ஊடகங்களால், தேர்தல் சார்ந்த ஒரு கேளிக்கை மனநிலையின் பகுதியாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.வெறும் கொண்டாட்டத்துடனும், ஒருவகை ஏளனத்துடனும் நாம் இவர்களை அணுகுகிறோம். அந்த மனநிலையைப் போல, ஜனநாயகத்துக்கு எதிரான பழைமைவாதம் வேறில்லை. உண்மையில் இவர்களுக்கு ஜனநாயகத்தில் மிகப்பெரிய பங்குண்டு.
ஜனநாயகத்தில் இரு பகுதிகள் உள்ளன. ஒன்று அரசு, நீதிமன்றம், நாடாளுமன்றம், கட்சிகள் போன்ற அமைப்புக்கள். இன்னொன்று, மக்களிடம் செயல்படும் அரசியல். இந்த இரண்டும் முரண்பட்டு மோதிக்கொண்டே முன்னகர்வது தான் ஜனநாயகம். அரசையும், பிற அமைப்புகளையும், மக்களிடம் செயல்படும் அரசியல் அடிக்கடி கலைத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவை இறுகிப்போய், பழைய மத நிறுவனங்களைப் போல ஆகிவிடும்.
இக்காரணத்தால், ஜனநாயகத்தில் அத்தனை அமைப்புகளுக்கும் வெளியே நிற்பவர்கள் மிகமிக முக்கியமானவர்கள். அமைப்புக்குள் நிற்கும் மனிதர்கள், காலப்போக்கில் அந்த அமைப்பின் உறுப்புகளாக மாறி, சுயமாக ஏதும் சிந்திக்க முடியாமல் ஆகிவிடுகிறார்கள். கட்சி, அரசு எதுவாக இருந்தாலும் சரி, இதுதான் நிகழ்கிறது. வெளியே நின்றிருக்கும் இந்த உதிரிகளிடமிருந்தே உண்மையான மாற்றங்கள் வரமுடியும்.
இந்த உதிரிகளில் பலவகையினர் உண்டு. எழுத்தாளர்களும், சிந்தனையாளர்களும் இத்தகையவர்கள் தான். புரட்சியாளர்களும் கலகக்காரர்களும் இத்தகையவர்களே. சமூக சேவகர்களிலும் பலர் இவ்வியல்பு கொண்டவர்கள். உண்மையிலேயே கோமாளிகளும் இவர்களில் உண்டு தான்.
ஆனால், இவர்களை நாம் கவனிக்காவிட்டால், சமூக மாற்றத்துக்கான கருத்துக்களை செவிகொள்ளாமலேயே போயிருப்போம். இவர்களை புரிந்து கொள்ளாமல், நாம் ஜனநாயகத்தை புரிந்து கொள்ள முடியாது. நம்மில் சாதாரணர்களுக்கு ஒரு மனநிலை உண்டு. நாம் மனிதர்களைவிட அமைப்பை மதிப்போம்.
அற்பத்தனம் காரணம்:ஒருவர் ஏதேனும் சீருடை அணிந்திருந்தாலே, நமக்கு, அவர் கொஞ்சம் முக்கியமானவராகத் தெரிய ஆரம்பிக்கிறார். நாம் பேசிக்கொள்ளும் போதுகூட, நம் சொந்தக்காரர்கள் எங்கெங்கு எந்தெந்தப் பதவிகளில் இருக்கிறார்கள் என்று, பட்டியல் போடுகிறோம். இந்த அற்பத்தனம் காரணமாக, நம்மால் மனிதர்களை பார்க்க முடிவதில்லை, அமைப்புக்களையே
பார்க்கிறோம்.
இந்த மனநிலையே, அமைப்புகளுக்கு வெளியே நின்றிருக்கும் சமூக சேவகர்களை, கலகக்காரர்களை கேலியாகப் பார்க்கச் செய்கிறது. கலகக்காரர்களே, தனித்து நடப்பவர்களே, ஜனநாயகத்தின் ஒளியை முன்னால் கொண்டு செல்லும் வழிகாட்டிகள் என்று மதிப்போம். அவர்கள் நம் சொத்துகள் என்று பாதுகாப்போம். அவர்களுடைய குரலை, ஒவ்வொரு தருணத்திலும் கேட்போம். அது நம் மனசாட்சியின் குரல்.
ஜெயமோகன்கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: jeyamohan.writer@gmail.com
www.jeyamohan.in