அரசியல் செய்தி

தமிழ்நாடு

அனைவருக்குமான அரசு : ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 38

Added : ஏப் 27, 2016
Share
Advertisement
கடந்த, 1987-ல் எம்.ஜி.ஆர்., இறந்து, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அடுத்து நடந்த 1989 தேர்தலில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி, தி.மு.க., என மும்முனை போட்டி நிலவியது. அந்த தேர்தலில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையும், விளைவாக ஒரு கூட்டணி அரசு பதவியேற்கும் என்று நான் எண்ணினேன். என் ஆசிரியரும், கேரளத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளருமான பி.கே.பாலகிருஷ்ணன் அவர்களிடம் அதை சொன்னேன். உறுதியாக அதை
அனைவருக்குமான அரசு : ஜனநாயகச் சோதனைச்சாலையில் - 38


கடந்த, 1987-ல் எம்.ஜி.ஆர்., இறந்து, அ.தி.மு.க., இரண்டாக உடைந்தது. அடுத்து நடந்த 1989 தேர்தலில்
ஜெயலலிதா அணி, ஜானகி அணி, தி.மு.க., என மும்முனை போட்டி
நிலவியது.
அந்த தேர்தலில், தமிழகத்தில் தொங்கு சட்டசபை அமையும், விளைவாக ஒரு
கூட்டணி அரசு பதவியேற்கும் என்று நான் எண்ணினேன். என் ஆசிரியரும், கேரளத்தின் புகழ்பெற்ற சிந்தனையாளருமான பி.கே.பாலகிருஷ்ணன் அவர்களிடம் அதை சொன்னேன்.
உறுதியாக அதை மறுத்தார். ''தமிழகத்தில், இன்னும் கால் நுாற்றாண்டுக்கு தொங்கு சட்டசபையென எதுவும் அமையாது,'' என்றார். ''ஏன்?'' என்று நான் கேட்டேன். ''தமிழர்கள் ஓர் அலைபோல ஒட்டுமொத்தமாக, ஒரு தரப்பிற்கு ஆதரவாக வாக்களிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறே நிகழும். வெல்லும் கட்சி முழுமையான பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்,'' என்றார். அவ்வாறே நடந்தது. மு.கருணாநிதி ஆட்சியை கைப்பற்றினார்.
முதிர்ச்சியான ஜனநாயகம்
பின்னர், இதைப்பற்றி பி.கே.பாலகிருஷ்னனிடம், மூன்று அமர்வுகளிலாக விவாதித்திருக்கிறேன். இவ்வாறு, அரசியலில் ஓர் அலை நிகழ்வதென்பது, முதிர்ச்சியான ஜனநாயக முறை இங்கு இல்லை என்பதற்கான ஆதாரம் என்றார் பாலகிருஷ்ணன்.
ஏனெனில், மக்கள் தனிமனிதர்களாக சிந்தித்து முடிவெடுக்கவில்லை என்றும், தனித்தனி பகுதிகளாகக் கூட அவர்கள் சிந்திக்கவில்லை என்றும், அது காட்டுகிறது. மாறாக, அவர்களுக்கு சொந்தமாக எந்த முடிவும் இல்லை என்றும், தேர்தல் நேரத்தில் பிறர் எந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்று பார்த்து, அதை தாங்களும் எடுக்கிறார்கள் என்றும் காட்டுகிறது. ஒரு ஆட்சி மோசமானது என்று மக்களில் ஒருசாரார் நம்ப ஆரம்பித்தால், அவர்களை பார்த்து, பிறர் நம்பத் தொடங்கி, ஒட்டுமொத்தமாகவே அந்நம்பிக்கை அனைவரிடமும் பரவிவிடுகிறது.
அனைவரும் இணைந்து ஒற்றைத் தரப்பாக வாக்களிக்கிறார்கள். உண்மையில், இவ்வாறு வாக்களிப்பதற்கு நமது ஊடகங்களும் ஒரு காரணம். அவை ஓர் அலையை உருவாக்கவே எண்ணுகின்றன. அலை என்பது, தேர்தலை ஒரு கொண்டாட்டமாக ஆக்குகிறது. ஒரு திருவிழாவில் உள்ள அனைவரும் ஒரே உணர்வை அடைவது போல, ஒரு களியாட்ட நிலை உருவாகிறது.
தேர்தல் அவ்வாறு கொண்டாட்டமாக ஆகும்போது, உண்மையில், மக்கள் அதை விரும்பி திளைக்கத் தொடங்குகிறார்கள். எதிர்ப்பு அலைகூட களியாட்டமாகவே ஆகிறது. அப்போது, மக்கள் நாளிதழ்களை வாசிக்கத் தொடங்குகிறார்கள். செய்தி இதழ்களை வாங்குகிறார்கள். அது ஊடகங்களுக்கும் மிகவும் நல்லது. பெரும்பாலான அலைகள் ஊடகங்களால் உருவாக்கப்படுபவையே.
பொதுவாகவே நிலையான அரசு தேவை என நாம் நம்புகிறோம். ஆகவே பெரும்பான்மை கொண்ட அரசு உருவாக வேண்டும் என எண்ணுகிறோம். ஜனநாயகத்தில் இதற்கு எந்த அடிப்படையும் இல்லை. சொல்லப் போனால் அது ஜனநாயகத்துக்கே எதிரானது. நாம் அரசர்களையோ, சர்வாதிகாரிகளையோ ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பது தான் அது.
கூட்டணி ஆட்சி முறை தான் ஊழல் குறைவான, மக்கள் நலம் சார்ந்த அரசை அமைக்க முடியும். கூட்டணி ஆட்சி அமையும்போது மட்டுமே, அனைத்து வகையான மக்களுக்கும் அரசியல் அதிகாரம் கிடைக்க முடியும்.
உதாரணமாக, தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஒரு முக்கியமான அரசியல் கட்சி. தமிழக ஜெயமோகன்

மக்கள் எண்ணிக்கையில் ஏறத்தாழ பதினாறு சதவீதம் வரை இருக்கும் தலித் மக்களின் குரல்,
அந்தக் கட்சி தான். அக்கட்சி அரசு அதிகாரத்தில் பங்கெடுக்கும்போது மட்டுமே, இங்குள்ள அடித்தள தலித் மக்கள் அதிகாரத்தை பெறுகிறார்கள். அவ்வாறு அதிகாரத்தை அவர்கள் அடையும்போது தான் அவர்களின் சமூக பொறுப்பும் அதிகரிக்கிறது.
சிறுபான்மையினரின் கட்சிகள்
ஆனால், ஒரு தருணத்திலும், அக்கட்சியை தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும், தங்கள் கட்சியாக வாக்களித்து ஆட்சியில் அமர வைக்கப் போவதில்லை. ஏனென்றால் அது தலித் மக்களின் கட்சியாகவே இன்று உள்ளது. தமிழகத்தில் ஒரு கூட்டணி ஆட்சி ஏற்படாவிட்டால், அக்கட்சி அதிகாரத்தை அடைவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. அவ்வாறு பல கட்சிகள் தமிழகத்தில் உள்ளன. கேரளத்தில், சிறுபான்மையினரின் கட்சிகளின் தலைமையிலேயே ஆட்சிகள் அமைந்துள்ளன.
இடதுசாரிகளின் பங்களிப்புள்ள ஓர் அரசு தமிழகத்தில் அமையும் என்றால், உறுதியாகவே, ஊழலுக்கான ஒரு கண்காணிப்பு அமைப்பு அரசுக்குள்ளேயே இருக்கும் என்பதை, ஐயமின்றி சொல்லலாம். பாரதிய ஜனதாவின் பங்களிப்புள்ள ஓர் அரசு அமையுமானால், அந்த அரசுக்கும் மத்திய அரசுக்குமான ஒரு ஊடகமாக அக்கட்சி செயல்படும் என்று சொல்லலாம்.
நாட்டு நலன் கருதி, வலுவான பெரும்பான்மையுடன் ஒரு அரசு அமைய வேண்டுமென்பது, அரசியல்வாதிகளால் நமக்குக் கற்பிக்கப்பட்டிருக்கும் ஒரு பொய். அவ்வாறு அரசு அமைக்கும் அரசியல்வாதிக்கு மட்டுமே அது நன்மை பயக்கும்.
ஏனெனில், ஐந்தாண்டு காலம் எந்த கேள்வியும் கேட்கப்படாமல் அரசாளலாம். அவர்களின் உள் விவகாரங்கள் எதுவும் வெளிவரப் போவதில்லை. அவர்களின் தலைவர் சக்ரவர்த்தியாக ஐந்தாண்டு காலம் அமர்ந்திருப்பார். அனைத்து ஊடகங்களும் அவரது புகழைப் பாடும். ஐந்தாண்டு காலம் அவரைச் சகித்து, பின்பு அவரை வெறுத்து, கசந்து, வாக்கை மாற்றிக் குத்தி, அவரைப்போன்ற இன்னொரு அதிகார மையத்தை நாம் தேர்ந்தெடுப்போம்.
மாறாக, ஒரு தொங்கு சட்டசபை அமைந்து, வலுவான கூட்டணி கட்சிகள் இணைந்து மட்டுமே அரசமைக்க முடியுமென்றால், அங்கு முதல்வரின் வரம்பில்லா அதிகாரம் கட்டுப்படுத்தப்படுகிறது. ஊழலோ, கட்சி உள்விவகாரமோ, அரசு நிர்வாக ரகசியமோ வெளிவரக்கூடுமென்ற வாய்ப்பு இருக்கிறது. மக்களின் கண் ஒன்று அரசாங்கத்தில் இருப்பதற்கு சமம் அது.
அதனால் ஊழல் முற்றாக ஒழிந்துவிடும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஜனநாயக செயல்பாடுகளின் ஒரு பகுதியாக எப்போதும் ஊழல் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஆனால், கூட்டணி
அரசுகள் ஆளும் மாநிலங்களில், ஊழல் மிக மிகக் குறைவு.
லல்லு பிரசாத் யாதவ் பீகாரில் உச்சகட்ட ஊழல் செய்த ஓர் அரச குடும்ப ஆட்சி நடத்தினார். ஆனால், இன்று நிதிஷ்குமார் உடன் இணைந்து நடத்தும் அரசில், அவர் அந்த ஊழலை செய்ய முடியாது.
கேரளத்து அரசுகள், இடதுசாரி ஆட்சியாக இருந்தாலும் சரி, வலதுசாரி ஆட்சியாக இருந்தாலும் சரி, தமிழக அரசுடன் ஒப்பிடும்போது மிக மிகக் குறைவான ஊழல் கொண்டவை. கேரள வாழ்க்கைச் சூழலில் இருக்கும் ஒருவர், அங்குள்ள மக்கள் நலத்திட்டங்களிலும் சரி, அரசு சார்ந்த செயல்பாடுகளிலும் சரி, தமிழகம் போல ஊழல் இல்லை என்பதை அறியலாம். அதற்கு காரணம், கடந்த பல ஆண்டுகளாக அங்கு கூட்டணி ஆட்சிதான் இருக்கிறது என்பது தான்.
கூட்டணி ஆட்சிமுறை காரணமாக, கேரள சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும், எப்போதும் அரசில் ஒரு பங்களிப்பிருக்கிறது. முஸ்லிம் லீக், கேரள கிறிஸ்தவர்களின் கட்சியான கேரள காங்கிரஸ், சில வட்டாரங்களில்
மட்டுமே செல்வாக்குள்ள ஆர்.எஸ்.பி. போன்ற பல கட்சிகள் கூடித்தான் அங்கு ஆட்சி அமைக்கின்றன. அதுவே இங்கும்
நிகழவேண்டும். பலவகையான கட்சிகள் ஆட்சிக்குள் இருக்க வேண்டும்.
ஏகாதிபத்திய அரசியல்
ஜனநாயகமென்பது, நிர்வாக அமைப்பில் உள்ள அனைவரும் ஒருவரை ஒருவர் கண்காணிக்கும் போது மட்டுமே சரியாக செயல்பட முடியும். நீதிமன்றமும், காவல் துறையும் ஒன்றையொன்று கண்காணித்தால் மட்டுமே, சரியான நீதி அமைய முடியும். ஆனால், திருடனும் காவலனும் ஒன்றாக சேர்வது போன்றது இங்குள்ள ஒற்றைக்கட்சி ஏகாதிபத்திய அரசியல்.
இங்கே ஜனநாயகம் வலுப்பெறும்தோறும் அதிகமான மக்கள் பங்கேற்பு அரசியலில் நிகழும். ஒவ்வொருவரும் தங்களுக்குரியதை கேட்பார்கள். வெறும் விசுவாசமும், உணர்ச்சி அரசியலும் இல்லாமலாகும். அதற்கேற்ப கூட்டணி ஆட்சிகளே அமையும்.
தமிழகத்தில், கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக நிகழ்ந்து வரும் வரம்பில்லாத பொதுச் சொத்து சூறையாடலுக்கு, மக்கள் உள்ளிருந்தே ஒரு கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டுமென்றால் இங்கொரு கூட்டணி ஆட்சி அமைவதே வழியாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X