மதுரை, :''தே.மு.தி.க., -மக்கள் நலக்கூட்டணிக்கு 10 தொகுதிகளில் மட்டுமே 'டிபாசிட்' கிடைக்கும்,'' என, மதுரையில் பா.ம.க., முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:
முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் பொய்களை மட்டும் கூறி வருகிறார். சட்டசபையில் 110 விதியின்கீழ் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றி விட்டதாக பொய் கூறி வருகிறார். அந்த விதியின்கீழ் சட்டசபையில் 185 முறை 700 திட்டங்களை அறிவித்தார். இத்திட்டங்களுக்கு ஒரு லட்சத்து 49 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. ரூ.7500 கோடி தான் ஒதுக்கியுள்ளார்.
மதுவிலக்கு குறித்து தி.மு.க., தலைவர் கருணாநிதி முரண்பாடாக பேசுகிறார். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கு கொண்டு வரச் சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு சட்டம் தேவை இல்லை. உத்தரவு போதும். இதன் மூலம் தேர்தல் அறிக்கை பொய் என தெரிகிறது.
பா.ம.க., வரைவு தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து திட்டங்களையும் தி.மு.க., 'காப்பி' அடித்துள்ளது. முதல் நாள் முதல் கையெழுத்து மதுவிலக்கு என்பதைகூட 'காப்பி' அடித்துள்ளனர். தோல்வி பயத்தால் மதுவிலக்கு குறித்து தி.மு.க., - அ.தி.மு.க., பேசி வருகின்றன. இது எங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைப்போம்.
கிரானைட் முறைகேட்டில் தி.மு.க., - அ.தி.மு.க., சமரசம் செய்துள்ளன. அரசுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் அறிக்கைபடி, சி.பி.ஐ., விசாரிக்கக்கூடாது என ஜெ., அரசு நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விசாரித்தால் இரு கட்சிகளையும் சேர்ந்தவர்கள் மாட்டிக்கொள்வர். ஆட்சி மாறினாலும் தாது மணல், மணல் ஒப்பந்தம் ஒருவருக்கே கொடுக்கப்
பட்டுள்ளது.தேர்தல் முடிவு குறித்து வெளியானது கருத்து கணிப்பு இல்லை. அது கருத்து திணிப்பு. பா.ம.க., வேட்பாளர்களை தங்கள் கட்சிக்குள் இழுக்கும் கீழ்த்தரமான வேலையை திராவிட கட்சிகள் செய்கின்றன.
மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ தோல்வி பயத்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியுள்ளார். அந்த கூட்டணிக்கு 10 தொகுதிகளில் தான் 'டிபாசிட்' கிடைக்கும். விஜயகாந்த், வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE