பொன்னான வாக்கு:காகமும் நரியும் கணக்கில்லா வடைகளும்

Added : ஏப் 29, 2016 | கருத்துகள் (1) | |
Advertisement
ஒரு ஊரில், ஒரு ஆயா டாஸ்மாக் வாசலில் வடை சுட்டுக் கொண்டிருந்தாள். குடிகாரர்கள் இருக்கும்வரை, வடை விற்பனைக்கு என்ன பிரச்னை! அவ்வப்போது கடன் சொல்லிவிட்டு வடை தின்னும் ஒரு சில கபோதிகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருப்பது ஒன்றுதான் பாடு. ஆனால், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.ஒரு நாள் ஒரு காகம் அங்கு பறந்து வந்தது. தட்டு நிறைய, ஆயா சுட்டு வைத்த மசால் வடைகள். 'கமகம'வென்று
பொன்னான வாக்கு:காகமும் நரியும் கணக்கில்லா வடைகளும்

ஒரு ஊரில், ஒரு ஆயா டாஸ்மாக் வாசலில் வடை சுட்டுக் கொண்டிருந்தாள். குடிகாரர்கள் இருக்கும்வரை, வடை விற்பனைக்கு என்ன பிரச்னை! அவ்வப்போது கடன் சொல்லிவிட்டு வடை தின்னும் ஒரு சில கபோதிகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருப்பது ஒன்றுதான் பாடு. ஆனால், பொது வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம்.
ஒரு நாள் ஒரு காகம் அங்கு பறந்து வந்தது. தட்டு நிறைய, ஆயா சுட்டு வைத்த மசால் வடைகள். 'கமகம'வென்று வாசனை வேறு. காகத்துக்குப் பொறுக்கவில்லை. தடாலென்று பாய்ந்து, இரண்டு வடைகளைக் கொத்திக் கொண்டு பறந்து விட்டது.வடாதிபதி ஆயாவுக்கு, நெஞ்சு கொள்ளாத துக்கம். 'நானே கணக்குப் பண்ணி, ஒரு நாளைக்கு இத்தனை என்று எண்ணி எண்ணி, வடை சுட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த சனியன் பிடித்த காகம் எப்ப பாரு, இப்படி அழிச்சாட்டியம் செய்தால் என் பிழைப்பு என்ன ஆவது? ஒன்று இந்த காகத்தை ஊரை விட்டு விரட்டுங்கள். அல்லது என் மசால் வடைகளுக்கு, 'இஸட்' பிரிவு பாதுகாப்புக் கொடுங்கள்' என்று, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் ஒரு, 'கம்ப்ளைன்ட்' கொடுத்தாள்.இன்ஸ்பெக்டராகப்பட்ட நரி, 'சரி புலம்பாதே! நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு, ஜீப்பை எடுத்துக் கொண்டு கிளம்பியது. திருட்டுக் காகம் அமர்ந்திருந்த மரத்தடிக்கு வந்து, 'ஏய், என்ன செய்து கொண்டிருக்கிறாய்?''நானா? பார்த்தால் தெரியவில்லை? வடை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன்!''ஏது உனக்கு வடை?''ஆயா கடையில் வாங்கினேன். ஒரு வடை இரண்டு ரூபாய்!''பொய் சொன்னால் கொன்று விடுவேன். நீ திருடியிருக்கிறாய். மரியாதையாக ஒப்புக்கொள்!'காகம் சில வினாடிகள் தவித்தது. நரி மேலும் மிரட்டவே, வேறு வழியின்றி, 'ஆமாம் திருடினேன்' என்று ஒப்புக்கொண்டது.
'ஆ, அப்படி வா வழிக்கு. மரியாதையாக நீ திருடிய வடையைக் கொடுத்துவிடு. இல்லாவிட்டால் வாழ்நாளில் நீ இனி வடையே சாப்பிட முடியாதபடி உன் வாயைத் தைத்து விடுவேன்!''ஐயோ அப்படியெல்லாம் செய்யாதீர்கள் இன்ஸ்பெக்டர். தெரியாமல் செய்துவிட்டேன். இதோ, நான் திருடிய வடை. கால் வாசி கடித்துத் தின்றுவிட்டேன். மிச்சம் இவ்வளவுதான்' என்று கீழே போட்டது.கீழே விழுந்த வடையை நரி, 'கேட்ச்' பிடித்தது. 'அப்பா, என்ன வாசனை. காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட்டால், கண்டிப்பாக இந்த மணம் இராது. திருட்டு வடையின் மணமே தனி' என எண்ணியது.
சரி, 'இனி ஒழுங்காக இரு' என்று காகத்தை எச்சரித்துவிட்டு, முக்கால் வடையோடு நரி நடையைக் கட்டியது. நரி போன பிறகு காகம், தான் எடுத்து வந்திருந்த இரண்டாவது வடையை எடுத்து வெளியே வைத்தது; ஒரு சிரிப்பு சிரித்தது.
உலகின் முதல் பதுக்கல் சம்பவம், அப்போது நிகழ்ந்தது.இரண்டாம் உலகப்போர் சமயத்தில், இந்த வடையானது பிற உணவுப் பொருள்களாயின. பேஸ்ட், பிரஷ், சோப்பு, சீப்பு தொடங்கி அத்தனை அத்தியாவசியப் பொருள்களும் வியாபாரிகளால் பதுக்கப்பட்டன. அதிக விலைக்கு விற்கப்பட்டன. எம்.ஆர்.பி.,ரேட்டுக்கு, 'இன்கம்டாக்ஸ்' கட்டிவிட்டு, மேல் பணத்தை மூட்டை கட்டிப் பரணில் போட்டனர். கறுப்புப் பணம், அங்கே சேர ஆரம்பித்தது.இன்றைக்குச் சென்னையில் இத்தனை கோடி, கோவையில் இத்தனை கோடி, கரூரில் இவ்வளவு, கண்ணம்மாபேட்டையில் இவ்வளவு என்று, தேர்தல் கமிஷன் பறிமுதல் செய்யும் பணம் அத்தனையும் கறுப்பு.
ஏதோ தேர்தல் காலம், ஓட்டு வேண்டும், கொஞ்சம் போல ஜனங்களுக்கும் கொடுக்கலாம் என்று பதுக்கிய தில், கொஞ்சத்தை வெளியே எடுக்கிறார்கள். அந்தக் கொஞ்சத்திலும் கொஞ்சம்தான், இப்படி மானாவாரி மகசூல் ஆகிறது. ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். தமிழ்நாட்டில் உள்ள முழு கறுப்புப் பணமும் இப்படி வெளியே வந்தால் எப்படி இருக்கும்! அட அது எத்தனை கோடிகள் இருக்கும்? இந்தியா முழுதும் உள்ள கறுப்புப் பணத்தைத் திரட்டி மூட்டை கட்டினால்?இதற்கெல்லாம் அப்பால் தான், இங்கிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்குக் கடத்தப்பட்டுப் பதுக்கப்பட்டிருக்கும் தொகை.
இந்திய கறுப்புப் பணத்தின் மொத்த மதிப்பு, சுமார் மூன்று ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இருக்கும் என்று ஒரு குத்து மதிப்புக் கணக்கு இருக்கிறது. பதுக்கிய பரதேசிகள், 'மண்டையைப் போட்டால்' அத்தனையும் எள்ளு. மீட்பு நடவடிக்கை, அப்படி இப்படி என்று அவ்வப்போது செய்தி வருமே தவிர, மீட்கப்பட்டதாக எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா?ஏதோ இந்த முறை, இங்கே தேர்தல் கமிஷன் கொஞ்சம் தீவிரமாகச் செயல்படுவது போலத் தெரிகிறது. தமிழகமெங்கும் கிராமப்புறங்களில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை திரட்டி, சிறு சிறு குழுக்களாக அமைத்து, பதுக்கல் மற்றும் ரகசிய வினியோகங்கள் நடைபெறுவதைக் கண்காணிக்க, ஏற்பாடு செய்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதையெல்லாமும் மீறி, நமது மகானுபாவர்கள், 'மூக்குத்திப் பூ மேலே காற்று உக்காந்து பேசுதம்மா' என்று பாடத்தான் செய்வார்கள்.
ஆனால், இளைஞர்களை கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்துவது என்பது, ஒரு சிறந்த நடவடிக்கை. இதெல்லாம் வெற்றி கண்டு, அடுத்த தலைமுறையாவது சற்று, 'அலர்ட்' ஆனால் தான்அதிகாரதாரிகள் அடக்கி வாசிப்பார்கள்.
ஏதோ ஓரிடத்தில் நடைபெற்ற அ.தி.மு.க., தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு வந்திருந்த சில பெண்களை ஒரு சானல் பேட்டியெடுத்து ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. 'சாப்பாடு குடுத்தாங்க. தண்ணி பாக்கெட் குடுத்தாங்க. தொப்பி குடுத்தாங்க. நுாறு ரூவா பணம் குடுத்தாங்க. அம்மா அழகா இருக்காங்க' என்று வெட்கப்பட்டுக் கொண்டே பேசினார்கள்.மாற்றம், இரு முனைகளிலும் நிகழ வேண்டிய சங்கதி.தொடர்புக்கு:பா.ராகவன்writerpara@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
30-ஏப்-201615:21:48 IST Report Abuse
Pasupathi Subbian ஆக கருப்புப்பணம் என்பது வியாபாரிகளால் உண்டானது என்று கூறுகிறார் இவர். மற்றவர்கள் எல்லாம் நல்லவர்கள் ஒழுங்கானவர்கள், நேர்மையாக வரி கட்டுபவர்கள் என்று அர்த்தம். இனாம் கிடைக்கும் பொருளை வாங்கும் மக்கள் இருக்கும் வரை இந்த கள்ள பணம் ஒயபோவதே இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X