தமிழக சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவு என்ற இலக்குடன், தேர்தல் கமிஷன் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஓட்டுப்பதிவு அதிகரித்தால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கலக்கம், அரசியல் கட்சியினரிடம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை பொதுத் தேர்தல், மே, 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், '100 சதவீதம் நேர்மை; 100 சதவீதம் ஓட்டுப்பதிவு' என்ற கோஷத்துடன், தேர்தல் கமிஷன் களம் இறங்கி உள்ளது. 100 சதவீதம் ஓட்டுப்பதிவை எட்ட வேண்டும் என்பதற்காக, தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில், இளைஞர்களை குறி வைத்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளது.
லட்சுமியம்மா எப்போதும் மெகா சீரியல் பார்க்க, 100 சதவீதம் ரெடி. ஆனா ஓட்டளிக்க? இவரை போல் இருக்கிறீர்களா? 100 சதவீதம் ஓட்டுப்போட தயாராகுங்கள்
கார்த்திக்கும், அவன் நண்பர்களும், 'கட்' அடிக்க, 100 சதவீதம் ரெடி. ஆனா ஓட்டளிக்க?
மீனா ஆண்டி, பார்லருக்கு போக எப்போதும், 100 சதவீதம் ரெடி. ஆனா ஓட்டளிக்க?
சின்சியர் சந்தோஷ் லீவ் போடாம ஆபீஸ் போக, 100 சதவீதம் ரெடி, ஆனா ஓட்டளிக்க?
ஆனந்த் விடாம மேட்ச் பார்க்க, 100 சதவீதம் ரெடி. ஆனா ஓட்டளிக்க? என கேள்வி கேட்டு, 100 சதவீதம் ஓட்டுப்போட தயாராகும்படி அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள், மாநிலம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் உட்பட கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர், நடிகையர் ஓட்டுப்போட சொல்லும் வீடியோக்கள், ஏராளமாக வெளியிடப்பட்டுள்ளன. ஓட்டுப்பதிவு அன்று, மக்களை ஓட்டுப்போட வரும்படி அழைப்பு விடுக்க, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற இணையதளங்களுடன், தேர்தல் கமிஷன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
மனித சங்கிலி:மேலும், மொபைல் போனில், ஓட்டுப்போட செல்லும்படி, குறுந்தகவல் அனுப்பவும், தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. கல்லுாரிகளில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரைக் கொண்டு, பேரணி, மனித சங்கிலி என, பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
மேலும், மே, 14ம் தேதி, வேட்பாளர்கள் பிரசாரம் ஓய்வு பெற்றதும், 15ம் தேதி முழுவதும், மே, 16ம் தேதி ஓட்டுப்போட வரும்படி, பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்து பிரசாரம் செய்ய, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.இதன் காரணமாக, இம்முறை ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த தேர்தலில் அதிகபட்சமாக, 2011 சட்டசபை தேர்தலில், 78.01 சதவீதம் ஓட்டுப்பதிவானது. இம்முறை ஓட்டுப்பதிவு அதையும் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓட்டுப்பதிவு அதிகரிக்கும் போது, தேர்தல் முடிவு, பெரும்பாலான தேர்தலில், ஆளுங்கட்சிக்கு எதிராக அமைந்துள்ளது. சில தேர்தலில், ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்துள்ளது. எனவே, இம்முறை ஓட்டுப்பதிவு அதிகரிப்பு, தங்களுக்கு எதிராக அமைந்துவிடுமோ என ஆளுங்கட்சியும்; ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமைந்துவிடுமோ என எதிர்க்கட்சிகளும் பீதியில் உள்ளன.
- நமது சிறப்பு நிருபர் -