அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தேர்தல் அறிக்கையில்
இலவசங்களுக்கு தடையில்லை

அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கையில், இலவச அறிவிப்புகளுக்கு, சட்டத்தில் தடை ஏதும் இல்லை;

 தேர்தல் அறிக்கையில் இலவசங்களுக்கு தடையில்லை

வேட்பாளர்களோ, அவர்களின் ஏஜன்ட்களோ, வாக்காளர்களை கவர்வதற்காக, துாண்டில் போட்டால் தான் குற்றம் என்கிறது சட்டம்.போட்டி போட்டு இலவசங்களை அள்ளி விடுகின்றன, அரசியல் கட்சிகள். அனைத்து கட்சிகளையும் மிஞ்சும் வகையில், அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் இடம் பெற்றுள்ளன.

கடந்த, 2006 சட்டசபை தேர்தலின் போது, தி.மு.க., அறிவித்த, கலர், 'டிவி' தான், பிரதானமாக பேசப்பட்டது. தி.மு.க.,வின் இந்த அறிவிப்புக்கு, அப்போதே வழக்கறிஞர் சுப்ரமணியம் பாலாஜி மூலம் எதிர்ப்பு கிளம்பியது.வாக்காளர்களுக்கு துாண்டில் போடும் விதமாக, இத்தகைய இலவச அறிவிப்பும், ஊழல் நடவடிக்கை தான் என்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி நடவடிக்கை கோரியும், தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பினார்.

ஆணையத்துக்கு மனு அனுப்பியதோடு நிற்காமல், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டது. 'கலர் டிவி அளிப்பது, அரசுக்கு வீண் செலவு' என்பதை, உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த மனு நிலுவையில் இருந்தது; அடுத்த தேர்தலும் வந்தது. தி.மு.க.,வையும் மிஞ்சி, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், இலவச கிரைண்டர், மிக்சி, மின் விசிறி, ஆடு, மாடு, 20 கிலோ இலவச அரிசி என, அடுக்கடுக்காக இலவசங்கள் அறிவிக்கப் பட்டன.

இதை எதிர்த்தும், உயர் நீதிமன்றத்தில், சுப்ரமணியம் பாலாஜி வழக்கு தொடுத்தார். பின், உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே

நிலுவையில் இருந்த வழக்கோடு, இந்த வழக்கையும் சேர்க்க கோரினார். அதனால், இரண்டு வழக்கையும், உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் சதாசிவம், ரஞ்சன் கோகோய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' இந்த வழக்கை விசாரித்தது. அரசியல் கட்சிகள் வெளியிடும் இலவச வாக்குறுதிகள், அறிவிப்புகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, ஊழல் நடவடிக்கையா என்ற கேள்வி பரிசீலிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:

அரசியல் கட்சியின் தேர்தல்அறிக்கை என்பது, அந்த கட்சியின் கொள்கை குறிப்பு. தேர்தல் அறிக்கையில் கூறியதை அமல்படுத்துவது என்ற கேள்வி, அந்த கட்சி, ஆட்சிக்கு வந்தால் தான் எழுகிறது; எதிர்கால அரசின் வாக்குறுதி அது.
எனவே, ஒரு வேட்பாளரின் வாக்குறுதியாக அது இல்லை. தனிப்பட்ட வேட்பாளரோ அல்லது அவரது ஏஜன்டோ அளித்தால் தான், அது ஊழல் நடவடிக்கை என, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறுகிறது.ஒரு அரசியல் கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கும், அரசியல் கட்சிக்கும் இடையே, தெளிவான வித்தியாசத்தை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வரையறுத்துள்ளது. வாக்குறுதிகள் அளிக்கும் நடவடிக்கைகளில் வேட்பாளர்கள் இறங்குவதற்கு, சட்டம் தடை போடுகிறது; ஆனால், அரசியல் கட்சிகளுக்கு அந்த தடை இல்லை.

அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள், ஊழல் நடவடிக்கை இல்லை என சட்டம் கூறினாலும், நடைமுறையில் பார்த்தால், இந்த இலவசங்கள், அனைத்து மக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தும்; நியாயமான சுதந்திரமான தேர்தலின் அடித்தளத்தை, பெருமளவு ஆட்டம் காண செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

தேர்தல் போட்டியில் சமநிலையை ஏற்படுத்த, நடத்தை விதிகளின் கீழ், தேர்தல் ஆணையம் உத்தரவுகளை வெளியிட வேண்டும். வழிமுறைகளை உருவாக்க வேண்டும். அதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்.அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கை தொடர்பாக, தேர்தல் நடத்தை விதிகளில், தனியாகவழிமுறைகளை வெளியிடலாம். இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.இந்த உத்தரவு, 2013 ஜூலையில் பிறப்பிக்கப்பட்டது.

வழிமுறைகள் என்ன?:
இதையடுத்து, தேர்தல் ஆணையம் வெளியிட்ட வழிமுறைகளில் கூறியிருப்பதாவது:தேர்தல் அறிக்கையில், நலத் திட்டங்களை வாக்குறுதியாக அளிப்பது, ஆட்சேபனைக்குரியது அல்ல; சுதந்திரமான ஓட்டு பதிவு உரிமையில் தாக்கத்தை

Advertisement

ஏற்படுத்தி, நியாயமற்ற முறையில் கவர்ந்து, தேர்தலின் புனிதத்தை கெடுக்கும் வகையிலான வாக்குறுதிகள் வழங்குவதை தவிர்க்க வேண்டும்.

தேர்தலில் சம நிலையை பேணவும், அளிக்கும் வாக்குறுதிகளில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், தேர்தல் அறிக்கையில் கூறப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரம் எங்கே உள்ளது என்பதை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகள் மட்டுமே இடம் பெற்றுள்ளதாக, வாக்காளர்கள் நம்பிக்கை பெற வேண்டும், என வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

இலவசம் சரியா?:
இலவச அறிவிப்புகள் குறித்து, சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வில்சன் கூறியதாவது:

தமிழக அரசு கேபிள் 'டிவி' கழகம், டிஜிட்டல் முறையில் ஒளிபரப்புக்கு, இன்னும் உரிமம் பெறவில்லை. சட்டப்படி, உரிமம் பெறாமல், கேபிள் 'டிவி' நடத்த முடியாது. கேபிள் 'டிவி' ஒளிபரப்பை துண்டிக்க கூடாது என, உயர் நீதிமன்றத்தில், அரசு கேபிள் 'டிவி' கழகம் தடை உத்தரவு பெற்றுள்ளது.

இதை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு, நிலுவையில் உள்ளது. உரிமம் பெறாமல் இயங்கும் அரசு கேபிள் 'டிவி' கழகம், எப்படி செட்டாப் பாக்ஸ் வழங்க முடியும்?பொய்யான, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, வாக்காளர்களின் ஓட்டுகளை பெறுவதும், ஏமாற்று தான். ஒரு தேர்தலில் வாக்குறுதிகளை வழங்கிய அரசியல் கட்சி, அடுத்த தேர்தலுக்குள் அதை நிறைவேற்றவில்லை என்றால், அந்த கட்சியிடம், தேர்தல் ஆணையம் விளக்கம் கோர வேண்டும்,என்றார்.

- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
07-மே-201616:03:35 IST Report Abuse

இந்தியன் kumarமக்கள் மாறாதவரை இந்த அரசும் மாறாது , மக்கள் நினைத்தால் இரு பெரும் ஊழல் கழகங்களை விரட்டி அடிக்கலாம்.

Rate this:
பிரபு - மதுரை,இந்தியா
07-மே-201614:32:50 IST Report Abuse

பிரபுஇலவச அறிவிப்புகளுக்கு, சட்டத்தில் தடை ஏதும் இல்லையா? அப்போ அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில குடிமகன்களுக்கு மாசம் ரெண்டு குவாட்டர் இலவசம்ன்னு சேர்த்துக்க சொல்லுங்க. அது மட்டும்தான் விட்டு போச்சு.

Rate this:
G.Gurumoorthy - Kanyakumari,இந்தியா
07-மே-201614:04:21 IST Report Abuse

G.Gurumoorthyஇங்கு கருத்து சொல்பவர்களில் 99 % மாதா மாதம் ஆயிரக்கணக்கில் வருமானம் பெறும் பாக்கியம் பெற்றவர்கள். இன்னமும் ஒரு நாள் மூன்று நேரம் உணவு உண்ண முடியாத- வருமானம் இல்லாத - அநேக மக்கள் இருப்பது தெரியாமல் இல்லை . அவர்களுக்கு இந்த இலவசங்கள் வரப்பிரசாதம். இதை பெறுவதற்கு ரேஷன் கடைகளில் தவம் இருக்கும் கூட்டமே சாட்சி. வீட்டில் இருந்தாலும் இலவச பொருட்களை பெறுவதற்கு அநேக பேர் தவறுவது இல்லை . நானும் வாங்கி ரேஷன் கார்டு இல்லாத சிலருக்கு பரிசாக கொடுத்திருக்கிறேன். இத்தகைய பொது மக்களை கருத்தில் கொண்டு, சில அரசியல் கட்சிகள் இலவசங்களை வாக்குறுதியாக தங்கள் தேர்தல் அறிக்கையில் தருவது மாபாதக செயல் இல்லை - இது எனது கருத்து.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X