''தன் நிலை இழந்து தடுமாறும் விஜயகாந்த், அரசியலில் அடையாளம் தெரியாமல், விரைவில் நீர்த்து போய் விடுவார். அந்த கட்சி, இத்தேர்தலோடு தனது இருப்பை, இடத்தை காலி செய்துவிடும்,'' என, முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறினார்.
நமது நாளிதழுக்கு, அவர் அளித்த சிறப்பு பேட்டி:
கூட்டணி பலம் ஏதுமின்றி, அ.தி.மு.க., போட்டியிடுகிறது. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
கடந்த லோக்சபா தேர்தலில், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி அ.தி.மு.க., என்று நிரூபித்தது. இந்த அடையாளம், அங்கீகாரம், முகவரிக்கு முழுமுதற் காரணம் முதல்வர். அவரின் முழு முயற்சி, துணிச்சல் காரணமாக, கடந்த தேர்தலில், அனைத்து இடங்களிலும் வெற்றி கிடைத்தது. இந்த முறையும், அனைத்து இடங்களையும் அ.தி.மு.க., பெறும். மக்களுடன் கூட்டணி இருக்கிற போது, மற்றவர்களுடன் பேசத் தேவை இல்லை.
கடந்த முறை போன்று, முதல்வரால் எல்லா இடங்களிலும் பிரசாரம் செய்ய முடியவில்லையே? முதல்வர் ஜெயலலிதாவின் வேகம், வீச்சு, செல்வாக்காக பரவி உள்ளது. நிலாவின் ஒளி, வெளிச்சம் அனைத்து இடங்களிலும் பரவி உள்ளது போல், முதல்வரின் புகழ் வெளிச்சம் அனைத்து இடங்களிலும் உள்ளது.
மற்ற கட்சிகளை போல் அல்லாமல், ஜெயலலிதா ஒருவரை நம்பியே, அ.தி.மு.க., பிரசாரம் உள்ளதே?
இயக்கத்தின் அடையாளம் அவர் தான். அனைவருக்கும் அங்கீகாரம் அவர். எனவே, 'முதல்வர் பிரசாரம் செய்ய வேண்டும்' என்று தொண்டர்கள் ஏங்கி தவம் கிடக்கும் போது, இந்த கேள்விக்கு இடமில்லை.
விஜயகாந்தின் பிரசாரம் எப்படி இருக்கிறது?
விஜயகாந்த், எந்த மொழியில் பேசுகிறார் என்பதை, முதலில் அவர் விளக்க வேண்டும். தன்நிலை இழந்து தடுமாறும் அவர், அரசியலில் அடையாளம் தெரியாமல், விரைவில் நீர்த்து போய் விடுவார். தே.மு.தி.க., கறிக்கோழி; அது தின்று கொழு கொழு என்று வளரும்; குஞ்சு பொரிக்காது. அந்த கட்சி, இத்தேர்தலோடு தனது இருப்பை, இடத்தை காலி செய்துவிடும்.
சட்டசபை உறுப்பினராக, விஜயகாந்தின் நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?
விஜயகாந்த் சட்டசபைக்கு வந்ததே ஒன்றிரண்டு நாட்கள் தான். ஒவ்வொரு தேர்தலிலும், தொகுதி விட்டு தொகுதி மாறி நிற்கும் அவர், இந்த முறை தோற்பது உறுதி. கட்டுப்பாடு இல்லாத கட்சி, கட்டுப்பாடு இல்லாத தொண்டன், மக்கள் பணி செய்யாத தலைவனை கொண்டது விஜயகாந்த் கட்சி.
சட்டசபையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், அவரை பேச அனுமதிக்கவில்லை என்கிறாரே? விஜயகாந்த் சொல்வது தவறு. வானத்தில் பறவைகள் பறக்க, அனுமதி இல்லை என்றால் ஏற்பார்களா? 'கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர், வானம் ஏறி வைகுண்டம் போனார்' என்று சொல்வதை போல உள்ளது. சட்டசபையில், நேருக்கு நேர் பேச தைரியம் இல்லாத, விவாத திறமையற்ற விஜயகாந்த் கூறுவது, 'பூனை, கண்ணை மூடினால், உலகம் இருண்டு விட்டது' என்று சொல்வதை போல உள்ளது.
மதுவிலக்கு விஷயத்தில், 'ஆட்சி அமைந்தால் முதல் கையெழுத்து இடுவோம்' என தி.மு.க., கூறுகிறது. அ.தி.மு.க., படிப்படியாக அமல்படுத்துவோம் என்கிறதே?
தமிழகத்தில், மதுக்கடைகளை திறந்தவர்களே, மூடுவதாக கூறுவது வேடிக்கை; வினோதம். கருணாநிதியின் சித்து விளையாட்டுகளில் இதுவும் ஒன்று.
சில கருத்துக்கணிப்புகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லையே?
அ.தி.மு.க., வெற்றி உறுதி. அலை அலையாக, ஜெயலலிதாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இது இலைக்கு தான் ஓட்டாக மாறும். வேறு கருத்துக்கு வாய்ப்பு இல்லை. 'விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்குவது இல்லை' என்ற வார்த்தைக்கு ஏற்ப, விதைகள் எழுந்து வெற்றி சரித்திரம் படைக்கும்.
'நான் முதல்வரானால்...' என்று அன்புமணி தீவிர பிரசாரம் செய்து வருகிறாரே?
டுட்டோரியல் கல்லுாரிக்கு முதல்வர் ஆக வேண்டியவர், 'தமிழகத்திற்கு முதல்வர்' என்று பேசி வருவது, 'வெயிலின் அடையாளமா' என்று தெரியவில்லை. 'அத்தைக்கு மீசை முளைத்து சித்தப்பா ஆகிற கதை போல' அவர் பேச்சு இருக்கிறது. பா.ம.க.,விற்கு மக்கள் வழங்கும் தீர்ப்பு, முட்டை மதிப்பெண் தான்.
'கோவில்பட்டியில் போட்டியிடவில்லை' என்று வைகோ திடீரென்று அறிவித்து விட்டாரே?
அது, அவர் சொந்த விருப்பம்.
'தி.மு.க.,வினர் ஜாதி கலவரத்தை துாண்ட முயற்சி செய்கின்றனர்' என்றும் வைகோ குற்றம் சாட்டினாரே?
தி.மு.க.,வில் பல்லாண்டுகள் இருந்து, ம.தி.மு.க.,வை ஆரம்பித்த அவருக்கு தி.மு.க.,வின் ஆரம்ப, 'பால பாடம்' தெரியும். தேர்தல் வந்து விட்டால், எத்தகைய குட்டிகர்ணமும் அடிப்பதற்கு, கருணாநிதி ஆட்கள் தயாராக இருப்பர்
என்பது, வைகோவிற்கு தெரிந்து தானே
இருக்கும். துாத்துக்குடி பெரியசாமியும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனும் ஜாதி கலவரத்தை துாண்டுகின்றனர் என்பதில் உண்மை இல்லாமலா இருக்கும்?
'நமக்கு நாமே' என்று ஸ்டாலின், தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டியுள்ளாரே?
அறுபத்து நான்கு வயதில் ஸ்டாலின், கலர் சட்டை அணிந்தால், 24 வயதாகி விடாது. கடலில் பெய்த மழை போல, பகலில் ஏற்றும் விளக்கு போல, அது எடுபடாது. தி.மு.க., என்ற கூடாரம், குடும்ப அரசியல் என்ற சுயராஜ்ஜியத்தில் சிக்கி கொண்டதால், வாரிசுகள் ஆங்காங்கே ஆட்சி செய்கின்றனர்.
'எனக்கு முதல்வர் ஆகும் ஆசை இல்லை' என்று கருணாநிதி பேசி இருக்கிறாரே?
அது தான் மக்களின் விருப்பமும்.
ஆனால், 93 வயதிலும் உழைக்கிறாரே?
மெழுகுவர்த்தி உருகி, தன் காலடியில் தான் சொத்து சேர்க்கிறது. அதுபோன்று தான் கருணாநிதியின் உழைப்பும்.
முதல்வர் ஜெயலலிதா அமைச்சர்களை அடிக்கடி மாற்றம் செய்கிறார். நீங்களும் மாற்றப்பட்டீர்களே. இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?
அது முதல்வரின் விருப்பம்.
தேர்தல் கமிஷன், தமிழகத்தில் உயர் அதிகாரிகளை மாற்றம் செய்துள்ளதே?
தி.மு.க., தோல்வி பயத்தில் வெந்ததை தின்று, வாய்க்கு வந்ததை பேசி, பல்வேறு குற்றச்சாட்டுகளை போலியாக உருவாக்க பார்க்கிறது. தி.மு.க.,வின் அர்த்தமற்ற குற்றச்சாட்டுகளுக்கு, தேர்தல் கமிஷன் செவிமடுக்க தேவை இல்லை. இதன் மூலம், நியாயமான அதிகாரிகளை பலிகடா ஆக்கிவிட்டனர்.
கடந்த, 2011ல், தி.மு.க., ஆட்சிக்கு எதிரான அலை இருந்தது. அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. இப்போது, அப்படி அலை ஏதும் இல்லை. அ.தி.மு,க.,விற்கு எப்படி வெற்றி உறுதி ஆகும்?
இப்போதும் தி.மு.க.,விற்கு எதிராக, கருணாநிதிக்கு எதிராக மக்கள் மனநிலை உள்ளது. குடும்ப அரசியல், வாரிசு அரசியல், கொள்கையற்ற
அரசியலால் மக்கள் வெறுப்பில் உள்ளனர். ஸ்டாலினுக்கு சில மாவட்டங்கள், கனிமொழிக்கு சில வட்டங்கள், கருணாநிதிக்கு சில ஒன்றியங்கள் என, தங்களுக்குள் பிரித்துக் கொண்டு, பாகப் பிரிவினை செய்வது போல, வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளனர். இதில் படுகுளறுபடி. தி.மு.க., வேட்பாளர்கள் எங்கு சென்றாலும், மக்கள் எதிர்க்கின்றனர்.
ஐந்தாண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வரின் மகத்தான மக்கள் நலத்திட்டங்கள், மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், ஜெ., ஆதரவு அலை வீசுகிறது.
'சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை, இந்த கரங்கள் தான் காப்பாற்றியது' என்று மதுரை பொதுக்கூட்டத்தில், கருணாநிதி பேசி இருக்கிறாரே?
ஈழத்து போரில், முள்ளிவாய்க்காலில், மூன்று லட்சம் தமிழர்களை படுகுழியில், படுகொலையில் தள்ளிய கருணாநிதியின் கரங்களா, சென்னை தண்ணீரில் மக்களை காப்பாற்றியது? யார் நம்புவார்கள்?
எம்.ஜி.ஆர்., போட்டியிட்ட அருப்புக்கோட்டையில், இரண்டாவது முறையாக களம் காண்கிறீர்கள். இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
'அம்மாவின் கருணையால்' இந்த வாய்ப்பு கிடைத்தது. அதற்காக என்றும் நன்றிக்குரியவனாக இருப்பேன்.
கடந்த ஐந்தாண்டுகளில் தொகுதிக்கு நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள்?
அருப்புக்கோட்டை தொகுதிக்கு, அரசு கலைக் கல்லுாரி, அரசு ஐ.டி.ஐ., கொண்டு வந்திருக்கிறேன். வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து காவல் நிலையம், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், 100 கோடி ரூபாய் மதிப்பில் பைபாஸ் சாலை, ஒரு கோடி ரூபாயில் உழவர் மையம், 191 பசுமை வீடுகள் என முதல்வரின் திட்டங்களை எல்லாம் இங்கு கொண்டு வந்துள்ளேன்.
இலக்கியவாதியான உங்களின் புத்தகங்களை படித்து விட்டு, முதல்வர் ஜெயலலிதா பாராட்டி இருக்கிறாரா?
புத்தகங்களை படித்து விட்டு, முதல்வர் எனக்கு கடிதம் அனுப்பி உள்ளார்; பாராட்டி இருக்கிறார். 1995ல் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை, கவிதை வடிவில் எழுதி, 'வடக்கை வெல்லும் தெற்கு' என்ற புத்தகம் வெளியிட்டேன். 'திருக்குறள் எளிய உரை, கனவோடு வெகு துாரம், வைகைச் செல்வன் கவிதைகள்' என இதுவரை, 14 புத்தகங்கள் எழுதியுள்ளேன். தற்போதும் முதல்வர் பற்றிய புத்தகம் எழுதி வருகிறேன்.
உங்கள் பொழுதுபோக்கு?
புத்தகம் படிப்பது, இசை கேட்பது.
அண்மையில் படித்ததில் உங்களை கவர்ந்த புத்தகம்?
எம்.ஜி.ஆர்., எழுதிய, 'நான் ஏன் பிறந்தேன்' புத்தகம் என்னை புரட்டி போட்டது.
ஜெயலலிதா, கருணாநிதி ஒரு புதுக்கவிதை சொல்லுங்கள்?
அம்மா...
ஒரு வானம்!
கருணாநிதி...
ஒரு கைக்குட்டை
பயோ - டேட்டா
பெயர் : வைகைச்செல்வன்
வயது : 48
கல்வித் தகுதி : எம்.ஏ., டி.லிட்., டி.எட்., பிஎச்.டி.,
கட்சி : அ.தி.மு.க.,
பொறுப்பு : எம்.எல்.ஏ.,
சொந்த ஊர் : சிலமலைப்பட்டி, மதுரை.
- நமது சிறப்பு நிருபர் -