தேர்தலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு, தமிழகத்தில் மது விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், 'குடி' மகன்களுக்கு, 'ஜாக்பாட்' அடிக்கும் விதமாக, ஒவ்வொருவரும் தலா, ஐந்து, 'புல்' பாட்டில்கள் வாங்கி கொள்ளவும், வீட்டிலேயே, 'சரக்கு' அடிக்கவும், தமிழ்நாடு மதுபான சட்டம் அனுமதி அளித்துள்ளது.
ஓட்டுக்காக பணம், பரிசு மற்றும் மதுபானம் கொடுத்து, வாக்காளர்களை கவனிப்பது, தமிழக கட்சிகளின் வழக்கம். இம்முறை, இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் கமிஷன் போராடுகிறது. பட்டுவாடாவை தடுக்க, வாகன சோதனை நடத்தப்படுகிறது. ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பரிசுப் பொருள், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுகிறது.
பீர் விற்பனை அதிகரிப்பு
மதுவால், வாக்காளர்களை கவனிப்பதை தடுக்க, மதுபானம் மொத்த விற்பனையை கண்காணிக்கவும், தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது. 'டாஸ்மாக்' கடைகளில்,
கடந்த ஏப்ரல் மாதம், மதுபானம் விற்பனை,7 சதவீதம் அதிகரித்துள்ளது. பீர் விற்பனை மட்டும், 37 சதவீதம் அதிகரித்துள்ளது.கோடை வெயில் காரணமாக, பீர் விற்பனை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.எனினும் ஒரு கடையில், வழக்கமான விற்பனையை விட, 30 சதவீதம்
விற்பனை அதிகரித்தால், ஏன் விற்பனை அதிகரித்தது என விளக்கம் அளிக்க
வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது. கட்சியினருக்கு மொத்தமாக மதுபானம் விற்பனை செய்திருந்தால், கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலை ஒட்டி, 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை, ஓட்டு எண்ணிக்கை நடைபெறும், 19ம் தேதி என நான்கு நாட்கள், அனைத்து மதுக் கடைகளையும், பார்களையும் மூடும்படி, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
5 'புல்'
அந்த நான்கு நாட்களும், பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவில் உள்ள, தமிழக எல்லையோர பகுதி மதுக் கடைகளையும் மூட வேண்டும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.இதுபோன்ற கெடுபிடிகளுக்கு இடையே, தனிநபர் ஒருவர், தன் வீட்டில், 5, 'புல்' பாட்டில்கள் வைத்துக் கொள்ளலாம் என, சட்டம் அனுமதி அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஒரு லிட்டர் ஒயின், ஒரு
லிட்டர் அயல் நாட்டு மதுபானம், ஒரு லிட்டர் இந்திய தயாரிப்பு மதுபானம், 1.3 லிட்டர் பீர் வைத்துக் கொள்ளலாம் என, 1996ல் கொண்டு வரப்பட்ட, தமிழ்நாடு மதுபானம் சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே, 'குடி'மகன்கள் முன்னதாகவே மதுபானங்களை வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், ஒரே வகையான மதுவை வாங்க முடியாது.
இதுகுறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தமிழ்நாடு மதுபான விதிகளின்படி, ஒருவர் தன் சொந்த தேவைக்கு, நான்கு விதமான மதுபானங்களை, தலா, ஒரு லிட்டர் வைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரே மாதிரியான மதுபானங்களை வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும். சட்டம் அனுமதித்தபடி, நான்கு வகையான மதுபானங்களை மட்டுமே வாங்கிக் கொள்ளலாம். அதுவும், விதிகளுக்கு மேல் கூடுதல் மதுபானம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்; அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.கட்சிகள் மதுபானங்களை வாங்கி, 'ஸ்டாக்' வைத்தாலோ, அதை வாக்காளர்களுக்கு கொடுத்தாலோ பறிமுதல் செய்யப்படும்.
சம்பந்தப்பட்ட நபரும் கைது செய்யப்படுவார். மதுக்கடைகளில், இந்த குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஒருவருக்கு மதுபானம் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- நமது சிறப்பு நிருபர் -
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (87)
Reply
Reply
Reply