கட்சிகள் அரங்கேற்றிய தேர்தல் நாடகங்கள்| Dinamalar

கட்சிகள் அரங்கேற்றிய தேர்தல் நாடகங்கள்

Added : மே 16, 2016
கட்சிகள் அரங்கேற்றிய தேர்தல் நாடகங்கள்

ஆர்.முத்துக்குமார் எழுதி, 'சிக்ஸ்த் சென்ஸ்' பதிப்பகம் வெளியிட்டுள்ள 'இந்திய தேர்தல் வரலாறு' என்ற நூலை சமீபத்தில் படித்தேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின், 1952ல் துவங்கி, 2014 வரை நடந்த, பாராளுமன்றத் தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்கள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. தேர்தல் முடிவுகளைச் சொல்லும் புள்ளி விவரங்களாக மட்டும் இந்நூல் இல்லை.
தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கூட்டணிகள் பற்றிய செய்திகள் விரிவாக இடம்பெற்று உள்ளன. ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியும் எப்படி கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டன, அதற்கு காரணம் என்ன, அதேபோல், கூட்டணி முறிவுகள் ஏற்பட என்ன பின்னணி என்பது பற்றியும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது.
தி.மு.க., - அ.தி.மு.க., - காங்கிரஸ் - கம்யூனிஸ்டுகள் மற்றும் சிறிய கட்சிகள் எல்லாம் எப்படி கூட்டணியை உருவாக்கிக் கொண்டன என்பது பற்றிய பின்னணித் தகவல் சுவாரசிய மாக உள்ளன. மாநில அளவில் மட்டும் அல்லாமல், தேசிய அளவில் பாராளு மன்றத் தேர்தலில் ஏற்பட்ட கூட்டணி தகவலும் உள்ளது. தமிழக கட்சிகளில் ஏற்பட்ட பிளவு, அதனால் உதயமான புதிய கட்சிகள், சட்ட சபை தேர்தலில் அவற்றின் தாக்கம் பற்றியும் பல தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
இரு கம்யூனிஸ்டு கட்சிகள், காங்கிரஸ் போன்றவை எப்படி அணி மாறின. நேர் எதிர் அணிகளில் இக்கட்சிகள் இடம்பெற்றன என்பதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் அறியப்பட வேண்டியவை. தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பிரதான கட்சிகள், மாநிலத்தின் பிரதான பிரச்னைகளில் என்ன நிலைப்பாடு கொண்டிருந்தன என்பது பற்றி தனி தலைப்புகளில் நூலாசிரியர் குறிப்பிட்டு உள்ளார். குறிப்பாக, ஈழப் பிரச்னையில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வின் நிலை குறித்த விவரங்களும் உள்ளன.
இந்திய தேர்தல் வரலாறு என்பது ஏறக்குறைய அரை நூற்றாண்டைக் கடந்து விட்டது. இந்த காலகட்டங்களில் அரசியல் கட்சிகள் நடத்தி உள்ள தேர்தல் நாடகங்கள் பலவற்றை இன்றைய இளைய தலைமுறை அறிய வாய்ப்பு இல்லை. அதற்கு இந்நூல் மிகவும் உதவும். தேர்தல் முடிவுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் அணுகுமுறை பற்றி, தன் கருத்தை திணிக்காமல், நடந்தததை அப்படியே பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.

பாமரன், எழுத்தாளர்
பதிப்பகம் தொடர்புக்கு: 72000 50073

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X