இப்போது எல்லோர்
வாயிலும் புகுந்து வெளிவரும் ஊரின் பெயர் ஏகானம்பேட்டை.
இப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏகானம்பேட்டைக்கு தன் படிப்பால் பெருமை
தேடித்தந்திருக்கிறார் மாணவி சரண்யா.
காஞ்சிபுரத்தில் இருந்து எட்டாவது கிலோமீட்டரில் உள்ள ஏகானம்பேட்டை அரசு பெண்கள்
பள்ளியில் படித்த சரண்யா நடந்து முடிந்த பிளஸ் டூ தேர்வில் 1179/1200 மார்க்குகள்
எடுத்து அரசுப் பள்ளி மாணவிகளில் முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.
பள்ளியிலும் ஊரிலும் கொண்டாட்டம்தான்
தமிழ் வழியில் படித்த சரண்யாவிற்கு அம்மாவும்,தம்பியும் மட்டுமே.
அம்மா நிர்மலா தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி வேலை பார்த்துவரும்
வருமானத்தில்தான் குடும்பத்தை நகர்த்திவருகிறார்.
கிடைக்கும் வருமானத்தில் ஒரு சின்னஞ்சிறு வீட்டில் வாடகைக்கு இருந்து
வருகின்றனர்.தனது எல்லா கவலைகளுக்கும் மருந்து பிள்ளைகளை படித்து ஆளாக்குவதுதான்
என்பதில் உறுதியாக இருக்கும் அம்மாவின் எண்ணப்படியே நன்கு படித்தார் சரண்யா.
ட்யூஷன் போவதற்கெல்லாம் வசதி கிடையாது, பள்ளி ஆசிரியர்கள் சொல்லிக்கொடுக்கும்
பாடங்களை நன்கு கவனிப்பதும், அன்றைய பாடத்தை அன்றாடமே படித்துவிடுவதும்,பள்ளியில்
நடந்த சிறப்பு வகுப்புகளில் பங்கேற்றதும், கவனத்தை சிதறடிக்கும் டி.வி.,சினிமா
போன்றவைகளில் ஆர்வம் காட்டாமல் இருந்ததுமே இவரை முதன்மை மாணவியாக்கி உள்ளது.
தனது சிரமங்களை கஷ்டங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் படித்து சாதனை படைத்துள்ள
சரண்யாவால் பள்ளிக்கும் எனக்கும் மிகவும் பெருமை என்று சொல்லி தனது ஆனந்தத்தை
பகிர்ந்து கொள்கிறார் தலைமை ஆசிரியர் சுதா.
பள்ளிவரை கொண்டுவிட்டு திரும்ப பாதுகாப்பாக கூட்டி வர அப்பா இல்லை,சிறப்பு
வழிகாட்டி புத்தகம் ஏதும் வேண்டுமா என்று கேட்டு வாங்கித்தர விவரம் தெரிந்த உறவினர் இல்லை,உன்
வீட்டில் மின்சாரம் இல்லையா வா என் வீட்டு மின்சாரத்தில் படிக்கலாம் என்று
விரும்பி அழைக்கும் நட்பும் இல்லை,படிப்பதற்கு தெம்பு வேண்டாமா தாயி என்று சொல்லி
ஹார்லிக்ஸ் போன்ற பானங்களை பாங்குடன் கலந்துதரவும்,அல்லது பழங்களை வாங்கி
நறுக்கித்தரவும் வசதியில்லை,இருந்ததெல்லாம் அம்மாவின் அன்பும் அரசாங்க
புத்தகங்களும்தான்.
வசதியான பெரிய பள்ளிகளில் படித்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ட்யூஷன் வைத்து
படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவியர் மத்தியில் சரண்யா நட்சத்திரம் போல
தனியாக ஜொலிக்கிறார்.
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in