சிந்துவெளி ஆய்வால் தமிழக வரலாறு தலைகீழாகும்!| Dinamalar

சிந்துவெளி ஆய்வால் தமிழக வரலாறு தலைகீழாகும்!'

Added : மே 20, 2016 | கருத்துகள் (5) | |
இலக்கியங்கள் வெறும் புனைவுகள் அல்ல; காலத்தின் கண்ணாடி, வரலாற்றின் திறவுகோல். அவற்றை அறிவியல் உள்ளிட்ட துறைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வு செய்தால், ஆச்சரியங்கள் மட்டுமல்ல, அதிசயங்களும் வெளிப்படலாம் என்பதற்கு, நிகழ்கால சாட்சி ஆர்.பாலகிருஷ்ணன், 57, ஐ.ஏ.எஸ்.,சின் ஆய்வுகள்.மதுரை நத்தத்தில் பிறந்து வளர்ந்த அவர், உயர்கல்வியில் தங்கப் பதக்கங்கள் பெற்றதோடு, தமிழ் இலக்கிய கல்வியை
 சிந்துவெளி ஆய்வால் தமிழக வரலாறு தலைகீழாகும்!'


இலக்கியங்கள் வெறும் புனைவுகள் அல்ல; காலத்தின் கண்ணாடி, வரலாற்றின் திறவுகோல். அவற்றை அறிவியல் உள்ளிட்ட துறைகளோடு ஒப்பு நோக்கி ஆய்வு செய்தால்,
ஆச்சரியங்கள் மட்டுமல்ல, அதிசயங்களும் வெளிப்படலாம் என்பதற்கு, நிகழ்கால சாட்சி ஆர்.பாலகிருஷ்ணன், 57, ஐ.ஏ.எஸ்.,சின் ஆய்வுகள்.
மதுரை நத்தத்தில் பிறந்து வளர்ந்த அவர், உயர்கல்வியில் தங்கப் பதக்கங்கள் பெற்றதோடு, தமிழ் இலக்கிய கல்வியை நிறுத்திக் கொள்ளாமல், பத்திரிகையாளராகி, 1984ல், முதல் தேர்விலேயே, ஐ.ஏ.எஸ்., ஆகவும் தேர்ச்சி பெற்று, பல துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்.
என்றாலும், சங்கத் தமிழ் இலக்கிய தரவுகளை கொண்டு, சிந்து சமவெளியை, இடப்பெயர் ஆய்வு முறையில் வேறு திசைக்கு எடுத்துச் சென்று, ஆய்வாளர்களின் புருவங்களை உயர வைத்துள்ளார்.
அவரது சமீபத்திய ஆய்வு நுால், 'சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்' என்பதாகும்.அவர், நமது நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
உங்களின் இடப்பெயர் ஆய்வு, சிந்துவெளி பக்கம் திரும்பியது எப்படி?
ஒடிசா, சத்திஸ்கர் மாநிலங்களில் பணியாற்றிய போது, அங்குள்ள பழங்குடிகளின் காதல், பாடல், செவிலித்தாய் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள், குறிஞ்சித் திணை பாடல்களோடும், தமிழ் வார்த்தைகளோடும் ஒத்துப்போவதை காண முடிந்தது.
பழங்குடிகளில் பல்வேறு குழுக்கள் உள்ளன. ஒரு குழுவில் உள்ள ஆண், அதே குழுவில் உள்ள பெண்ணை காதலிப்பதில்லை. மாறாக, வேறு ஒரு குழுவில் உள்ள பெண்ணைக் காதலிப்பான். அவளுக்கு பிடித்தாற்போல் நடந்து கொள்வான். பரிசு கொடுப்பான். கொடுக்க முடியவில்லை என்றால், அந்த பெண்ணின் வீட்டில் வேலை பார்த்து, அந்த வீட்டாரின் நன்மதிப்பை பெற்று, பின் மணம் புரிவான்.
அதேபோல், இளம்பெண்கள், இளம் ஆண்கள் தனித்தனியாக கூட்டமாக இருப்பர். இளம்பெண்களுக்கு செவிலித் தாய் காவலாகவும், துணையாகவும் இருப்பாள். பெண்ணுக்கு காதலனை பிடித்தால், தோழி உடன்போக்குக்கு உதவுவாள். இவை எல்லாம், தமிழ்
இலக்கியங்களில் உள்ளன. ஆனால் இவை இன்று, தமிழக பழங்குடிகளிடையே கூட இல்லை. இந்த பழக்கங்கள் தான், என்னை இதுகுறித்து ஆய்வு செய்யத் துாண்டின. கடந்த, 25 ஆண்டுகளாக, சங்கத்தமிழ் ஊர்ப் பெயர்களுக்கும், வட மாநில ஊர்ப்பெயர்களுக்கும் உள்ள ஒற்றுமை பற்றிய ஆய்வில் ஈடுபட்டிருந்த என்னை, சிந்துவெளி மற்றும் ஹரப்பா பக்கம் திரும்பும் படி கூறியவர், சிந்துவெளி ஆய்வறிஞர் ஐராவதம் மகாதேவன்.
பழந்தமிழ் இலக்கியங்கள் கொண்டாடும், கொற்கை, வஞ்சி, தொண்டி போன்ற ஊர்ப்பெயர்கள், சிந்துவெளி நாகரிகம் பரவியிருந்த, வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்ளதை கண்டேன். அங்குள்ள பழங்குடிகளின் பிராகுயி மொழிக்கும், திராவிட மொழிக்கும் தொடர்பு உள்ளது அனைவரும் அறிந்ததே.
பழந்தமிழ் இலக்கியம் சார்ந்த அறிவு மட்டும், ஒரு வரலாற்று ஆய்வுக்கு போதுமானதா? பொதுவாக வரலாறு, மரபுக்கதைகள் ஆகியவற்றை, அறிவியல் உண்மையை போல துாக்கி வைத்து கொண்டாடுவது அல்லது அவற்றில் ஒன்றுமே இல்லை என்பதை போல துாக்கி வீசுவது என்னும் இருவேறுபட்ட நடைமுறை, நம் இலக்கிய வாதிகள் உள்ளிட்டோரிடம் நிலவுகிறது. இந்த இரண்டு துருவங்களுக்குள் நின்று கொண்டு தான், நாம் உண்மையை ஆராய வேண்டி உள்ளது.
ஆய்வு என்பது இலக்கியம், புவியியல், வரலாறு, மானிடவியல், நாணயவியல், மொழியியல், தொழில்நுட்பம் போன்ற பல்துறை அறிவு சம்பந்தப்பட்ட விஷயம்.
அதே போல், ஆய்வாளன் ஏற்கனவே எடுத்த முடிவோ அல்லது அவனுக்கு சரி என்று காட்டப்பட்ட வழியோ அல்லது அவன் உணர்ச்சியோ அவனுக்கு வழிகாட்டக் கூடாது.மேலும், ஏற்கனவே அவன் செய்த ஆராய்ச்சி முடிவுக்கு முரணான தகவல்கள், மறு ஆராய்ச்சியில் கிடைத்தால், அதையும் பரிசீலித்து, முடிவுகள் எடுக்கக் கூடிய தெளிந்த மனநிலை வரவேண்டும். அதற்கு உள்நோக்கம் இல்லாதவனாக ஆய்வாளன் இருக்க வேண்டும்.
ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இதுபோன்ற ஆய்வுகளில் ஈடுபடுவது சாத்தியமா?
என் ஆட்சிப்பணி, எனக்கான வாழ்வாதாரம். அதற்கு உண்மையாக இருக்க வேண்டும். அதேநேரம், என் விருப்பம் சார்ந்த விஷயங்களையும் விடக்கூடாது. அதனால், நான், தேர்தல் நடத்துவது, பட்ஜெட் போடுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு இடையில், ஞாயிற்றுக்கிழமை, அரசு விடுமுறை நாட்களில் கூட, நுாலகங்களுக்கு செல்வேன். அதற்கு, பதவி கூடுதல் பலம் அளித்தது. பல்வேறு இடங்களுக்கு சென்று வருதல், மக்களோடு பழகுதல், தொழில்நுட்ப வல்லுனர்களை சந்தித்தல் உள்ளிட்ட வாய்ப்புகளை, பதவியால் உருவாக்கி கொள்ள முடிந்தது. ஆராய்ச்சி என்பது, என் தொழிலாகவோ, வாழ்வாதாரமாகவோ இல்லாமல், விருப்பம் சார்ந்த தேடலாக இருப்பதால், ஒரு சுதந்திரத்தை அளிக்கிறது.
சிந்துவெளி நாகரிகத்திற்கும், தமிழ் இலக்கியங்களுக்கும், 1,500 ஆண்டு காலமும், 2,000 கி.மீ., துாரமும் இடைவெளியாக இருக்கின்றனவா?
தமிழர் வரலாறு என்பது, உண்மையில் ஒரு மாநிலத்தின் வரலாறு அல்ல; அது ஒரு நாகரிகத்தின் வரலாறு. சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே. சிந்துவெளி நாகரிகம் எப்படி முடிவுக்கு வந்தது என்ற கேள்வியும், தமிழர் தொன்மங்களின் பின்னணி எது என்ற கேள்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மனிதனின் வரலாறு என்பது, உண்மையில் பயணங்களின் வரலாறு. பயணங்களால் பட்டை தீட்டப்பட்ட பட்டறிவு, பகுத்தறிவின் வெளிப்பாடே, 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உன்னதமான புரிதல். உணர்ச்சிவசப்படாத, அரசியல் கலப்பற்ற ஆய்வுகளே, இந்திய வரலாற்றின் புதிர்முடிச்சுகளை அவிழ்க்க முடியும். அதை எடுத்துச் செல்வது நமது கடமை. இதை உணர்ந்து தான் என் முடிவுகளை மேற்கொள்கிறேன். காலமும் துாரமும் இடைவெளியே அல்ல.
சிந்துவெளியில் தற்போதும் காணப்படும் சேவற்சண்டை, தமிழகத்தின் முக்கியமான பண்பாட்டு அடையாளமாக உள்ளது. சிந்துவெளி முத்திரைகளிலும், காளை, சண்டை சேவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்திலும், மேற்சேரி, கீழ்ச்சேரி நடுகல், யானையை வெல்லும் சேவலுடன் கூடிய கோழியூர் சிற்பம் போன்றவை பண்பாட்டு தொடர்ச்சியாக இருக்க வாய்ப்பு உண்டு.
சிந்துவெளி பற்றிய கருதுகோள்களில் முக்கியமானவை எவை?
பல கருத்தியல்கள் அர்த்தமற்றவையாக இருந்த போதிலும், சிந்துவெளி நாகரிகம் திராவிட, ஆரிய நாகரிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவே பலரும் கூறுகின்றனர். அங்கே, மண்ணுக்குள் கிடைத்த காட்சிகளுக்கான, சாட்சிகளாக ஆரிய இலக்கியங்களில் ஏதும் இல்லை. தமிழில், இலக்கியங்களில் இருக்கும் காட்சிகளுக்கு,
மண்ணுக்குள் சாட்சிகள் தோண்டப்படவில்லை.
மானிடவியல் கருத்துப்படி, மனிதனுக்கு ஒரு குணம் உண்டு. ஓரிடத்திலோ, ஒருவரிடத்திலோ பற்று கொண்டு, பிரியும் போது, அவற்றின் நினைவாக சென்ற இடத்தில், அந்த பெயர்களை சூட்டிக்கொள்வதே அது.
நீலகிரிக்கு வந்த ஆங்கிலேயரால் வெல்லிங்டன், துாத்துக்குடிக்கு வந்த பாதிரியாரால் நாசரேத் போன்ற ஊர்கள் வந்தது போலவே, திருமலை நாயக்கர்பட்டினம், சரபோஜி மங்கலம் உள்ளிட்ட எண்ணற்ற இடப்பெயர்வின் சாட்சிகளாக உள்ளன. எனினும், அடுத்தடுத்து ஏற்படும் ஆட்சி மாற்றங்களில், அரசியல், வருவாய் சார்ந்த தலைநகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு விடும். ஆனால், முக்கியத்துவம் இல்லாத கிராமங்கள் அப்படியே விடப்பட்டிருக்கும். அப்படி விடப்பட்டவையாக, ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு நாடுகளில் உள்ள கொற்கை, வஞ்சி, தொண்டி, கண்ணகி, கரிகாலன், அதியமான் உள்ளிட்ட ஊர்கள், தமிழ் இலக்கியம் கொண்டாடும் ஊர்களாக இருக்கலாம்.
இடப்பெயர் மட்டும் இன்றி, உங்கள் ஆய்வு முன்வைக்கும் கருத்துக்களில் முக்கியமானவை எவை?
மேல் - மேற்கு, கீழ் - கிழக்கு என்ற கோட்பாடு.
அதாவது, சிந்துவெளி மக்கள் மேற்கில் மேடாக அமைத்திருந்தனர். அங்கே, தலைவன் இருந்ததற்கு சாட்சியாக நீச்சல் குளம், மதிற்சுவர் உள்ளிட்டவற்றை அமைத்தனர்.
கிழக்கில், கீழ் நிலையில் உள்ள குடிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை இருந்தன. இதேபோல், அனைத்து இடங்களிலும், மேன்மக்கள் மேற்கிலும், மேட்டிலும் இருந்தனர்.
தமிழில், மேல் என்பதும், மேற்கு என்பதும் ஒரே சொல்லில் பல இடங்களில் வருவதை இலக்கியங்களும் ஊர்ப்பெயர்களும் உணர்த்துகின்றன. திராவிட மொழிக்குடும்பத்தில் இதே பெயர்கள், இதே பொருளில் வருகின்றன.
அங்கு காணப்படும், தாய்த் தெய்வ வழிபாட்டுக்கு இணையாக, கிராமங்களில் காவல் தெய்வங்களாக பெண்களே உள்ளனர். மேலும், மலைகளில் உள்ளோரை மேன்மையானவராகவும், கீழிறங்கியோரை கீழோராகவும் வர்ணிக்கும் மரபு பழங்குடிகளிடம் உண்டு. மலை தெய்வமான பழனிமலை முருகனை மேற்கு நோக்கியே அமைத்துள்ளனர். மலேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும், மலையின் மீதே, முருகனை வடிவமைத்தனர்.
தமிழகத்தில், உள்ள மேல் - மேற்கு, கீழ் - கிழக்கு எனும் பெயரில் உள்ள இணையான, 168 ஊர்களை, அட்ச, தீர்க்க ரேகை கொண்டு, புவியியல் முறையில் ஆராய்ந்ததில், 121 ஊர்கள், மேல் - மேற்குக்கும், 30 ஊர்கள் கீழ் - கிழக்கிற்கும், ஏழு ஊர்கள், மேல் என்பது கிழக்காகவும், 10 ஊர்கள் பொருந்தாமலும் இருந்தன.
ஆனால், ஆரிய மொழிக் குடும்பத்தில், மேன்மைக்கு கிழக்கும், கீழ்மைக்கு மேற்குமே குறிக்கப்பட்டுள்ளன.மேலும், சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய செம்புக்கும், தமிழன் இலக்கியம் சொல்லும் செம்மை குறித்த ஆய்வுகளும், சில முக்கிய ஆய்வுகளும் நடந்து
கொண்டிருக்கின்றன.
அப்படி என்றால், வரலாறு மாறும் அல்லவா?
ஆம். 1924ல், மார்க்ஸ் முல்லர், சிந்துவெளி பற்றிய கட்டுரை வெளியிடுவதற்கு முன், இந்திய வரலாற்றை, வேத காலத்தில் இருந்து துவக்கி, காப்பியங்கள், புத்தர், அசோகர், கலிங்கப் போர், குப்தன், ஹர்ஷன், அலெக்சாண்டர், இரண்டாம் புலிகேசி உள்ளிட்டவற்றை சொல்லி விட்டு, ஒரு கிளைக் கதையாக, தென்னிந்திய வரலாறு, சேர, சோழ, பாண்டியர், கரிகாலன், இடைக்கால பாண்டியர்,
திருமலை நாயக்கர், சரபோஜி மன்னர்கள் என, சிறிதாக சொல்லி முடித்தனர். பின், வரலாறு பின்னோக்கி சென்றது.
சங்க இலக்கியங்களும், சிந்துவெளி ஒப்பீடும் தமிழக வரலாற்றை திருத்தி அமைக்கும். அதற்கு, திராவிட நாகரிகத்தின் வேர்கள் உள்ள இடங்களில் ஆய்வுகள் செய்ய வேண்டும். அதுதான் சரி.
சுனித்குமார் சாட்டர்ஜி, அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் உள்ளிட்டோர், சிந்துவெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்கின்றனர். என், ஆய்வு முடிவுகளும், அதைத் தான் வலுவாக முன்வைக்கின்றன.
நகரம், வணிகம், பெண் தெய்வ வழிபாடு, இலக்கிய சான்றுகள் உள்ளிட்டவை, தமிழில் தான் கிடைக்கின்றன. சிந்துவெளி தொல்பொருட்களும், அதையே தான் கூறுகின்றன. இதுவரை எழுதப்பட்டுள்ள சமஸ்கிருத வேதங்களில், அவை இல்லை. வரலாறு நிச்சயம் மாறும். அது, சிந்துவெளி மக்கள் பேசிய மொழி பற்றிய புரிதலை ஏற்படுத்தும்.
- நடுவூர் சிவா -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X