திருச்சி,: தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் அவரது மகனும், நடிகருமான உதயநிதி அரசியல் களத்தில் இறங்கியுள்ளது, கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திஉள்ளது.
திட்டவட்டம்
'எனக்குப் பின், என் மகனோ; மருமகனோ அரசியலுக்கு வரமாட்டார்கள்' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் சமீபத்தில் திட்டவட்டமாக குறிப்பிட்டிருந்தாலும், அரசியல் வாரிசாக அவரது மகனும், நடிகருமான உதயநிதி உருவெடுப்பதை தடுக்க முடியாது என, தி.மு.க.,வினர் சொல்லி வருகின்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கூட, தி.மு.க.,வுக்கு ஆதரவாக உதயநிதி பிரசாரத்துக்கு செல்லாமல் இருந்து வந்தார். அதற்கு காரணம், திரைத்துறையில் உள்ள தனக்கு, தி.மு.க., முத்திரை விழுந்து விடுமோ என்ற பயம் தான் காரணமாக கூறப்பட்டது.
இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க., தோல்வி அடைந்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. தி.மு.க., தோல்வியால் அதிகம் துவண்டது
கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தான். அவர் தான், இந்த தேர்தலுக்காக மாநிலம் முழுவதும், 'நமக்கு நாமே' பயணம், அனைத்து தொகுதியிலும் தேர்தல் பிரசாரம் என்று கடுமையாக உழைத்தார்.
ஆகையால் அவரால், இந்த தோல்வியை ஜீரணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தேர்தல் தோல்வியால், மிகவும் அப்செட்டான மனநிலைக்கு தள்ளப்பட்ட ஸ்டாலினுக்கு ஆறுதலாக, அவரது மகன் உதயநிதி இருந்து வருகிறார்.
வெற்றிச் சான்றிதழ்
இதுவரை வெளிப்படையாக அரசியல் களத்தில் இறங்காத உதயநிதி, நேற்று முன்தினம், சென்னையில் ஸ்டாலின் வெற்றிச் சான்றிதழ் பெறுவதற்காக சென்றபோது, உடன் சென்றார்.
அதேபோல் தஞ்சாவூரில் நடைபெறுவதாக இருந்த தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஸ்டாலினுடன், அவரது மகன் உதயநிதியும் உடன் வந்தார். இதன்மூலம் உதயநிதியின் நேரடி அரசியல் பிரவேசம் துவங்கி விட்டது என்று தி.மு.க.,வினர் உற்சாகமாகி உள்ளனர்.