துளிர்க்குமா தகவல் தொழில் நுட்பம் | Dinamalar

துளிர்க்குமா தகவல் தொழில் நுட்பம்

Updated : மே 30, 2016 | Added : மே 30, 2016 | கருத்துகள் (6)
துளிர்க்குமா தகவல் தொழில் நுட்பம்

தகவல் தொழில் நுட்பத்துறை இந்திய பொருளாதார வரலாற்றில் பெரிய திருப்பு முனையையும் உலகளாவிய மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளது. 1990 க்கு பின் வேரூன்ற துவங்கிய ஐ.டி., தொழில் துறையின் வளர்ச்சிக்கு தமிழகத்தை ஆண்ட அரசுகள் என்ன செய்தன என பார்க்கலாம்.ஐ.டி., துறையின் துவக்க காலங்களிலிருந்து கர்நாடகா, ஆந்திரா மாநில அரசுகள் எடுத்த ஊக்குவிப்பு முயற்சிகள் தமிழக அரசால் எடுக்கப்படவில்லை. காலம் கடந்தாலும், கேரளா அரசும் ஆக்கப் பூர்வமாக முன்னேற்ற திட்டங்களை அமல்படுத்தியது. தமிழக அரசின் 'எல்காட்' நிறுவனம் ஐ.டி., துறை வளர்ச்சிகளின் ஒரு மையப்புள்ளியாக இருந்து வருகிறது.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சந்தோஷ் பாபு, உமா சங்கர் ஆகியோர் இந்நிறுவன தலைவர்களாக இருந்த போது மட்டுமே குறிப்பிடத்தக்க பெரிய மாற்றங்கள் நடந்திருக்கின்றன. மற்றபடி தமிழகத்தில் ஏற்பட்ட ஐ.டி., வளர்ச்சிக்கு இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்புகளின் சுய முயற்சியே பெரிதும் காரணமாக இருந்திருக்கிறது.
நகரங்கள் புறக்கணிப்பு :துவக்கம் முதல், ஐ.டி., துறைக்கான தெளிவான தொலைநோக்கு திட்டங்கள் அரசால் நடைமுறைபடுத்தப்படவில்லை. பெரிய நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை, சென்னையை மட்டுமே மையப்படுத்தி நடத்தினர். இந்த போக்குக்கு துணை செய்வது போல அடுத்தடுத்து வந்த அரசுகளும் சென்னையை சார்ந்தே கட்டமைப்பு வசதிகளையும் தடையில்லா மின்சாரம் போன்ற சலுகைகளையும் செய்தனர். இந்த அணுகு முறையால், இரண்டாம் மூன்றாம் கட்ட நகரங்களில் எந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சியும் உருவாகவில்லை.
மாறாக, இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கும், பெங்களூருவுக்கும் ஐ.டி., மாணவர்கள் பெருவாரியாக புலம்பெயர்ந்தார்கள்.முந்தைய தி.மு.க., அரசின் போது சி.ஐ.ஐ., நாஸ்காம் போன்ற தொழில் கூட்டமைப்புகளின் தொடர் முயற்சியால் சில செயல்திறன் மிக்க அலுவலர்களாலும், சென்னைக்கு வெளியேயும் ஐ.டி நிறுவனங்களின் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கும் முயற்சி நடந்தது.பொருளாதார மண்டலம் மதுரை, கோவை, நெல்லை, சேலம், ஓசூர் நகரங்களில் தமிழக அரசின் எல்காட் ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட்டன.
2011 ல் தி.மு.க., ஆட்சியின் இறுதியில் இக்கட்டமைப்புகள் துவக்கி வைக்கப்பட்டன. ஆனால் பின் வந்த அ.தி.மு.க., ஆட்சியில் இத்திட்டங்களை நடைமுறைபடுத்த தொடர் முயற்சிகள் இல்லை. தற்போதைய நிலவரப்படி கோவையில் மட்டும் 80% அளவில் இந்த ஐ.டி., பூங்காக்கள் உள்ளன. மற்ற இடங்களில் 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. மதுரையில் முந்தைய தி.மு.க., ஆட்சியில் நிலவிய அசாதாரணமான பாதுகாப்பற்ற சூழலே ஐ.டி., பூங்கா வாய்ப்பு பின்தங்கி போனதற்கும் காரணம். அ.தி.மு.க., ஆட்சியில் அத்தகைய பயம் இல்லாமல் போனாலும் இத்திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவர முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
பெரு முதலீடுகள் :தமிழகத்தில் எல்லா திட்டங்களும் சென்னையை சார்ந்து இருந்தன. சமீப காலத்தில் ஐ.டி., துறையில், புதிய பெரு முயற்சிகள் என்று சொல்வதற்கு, சென்னையிலும் எதுவும் உருவானதாக தெரியவில்லை. சில ஆண்டுகளில், கோவையில் மட்டுமே சில முன்னேற்றங்கள் எற்பட்டிருக்கின்றன.'ஜிம்' எனப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, மதுரையில் எச்.சி.எல்., நிறுவனம், விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் தற்போது பயிற்சி அளிக்கும் பிரிவை மட்டுமே நடத்தி வருகிறது. வேலைவாய்ப்புகளுக்கான திட்டங்கள், வரும் ஆண்டுகளில் நடைமுறைபடுத்தப்படும் என உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆட்சிகளின் அணுகுமுறை:ஐ.டி., துறை நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சங்கங்களின் கருத்துப்படி, கடந்த காலங்களில் ஆட்சி செய்த தி.மு.க மற்றும் அ.தி.மு.க.,வினரது அணுகுமுறைகளில் பல வேறுபாடுகள் இருந்தாலும், இரண்டு ஆட்சிகளுமே, பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நாடெங்கும் இளம்தொழில் முனைவோர்களுக்கான வளர்ச்சி சூழல் சாதகமாக உருவாகி வருகிறது. ஐ.டி., துறையை பொறுத்தவரை, 'நாஸ்காம்' என்ற ஐ.டி நிறுவனங்களின் கூட்டமைப்பு, 10 ஆயிரம் ஐ.டி., ஸ்டார்ட் அப் நிறுவனங்களை உருவாக்கும் நோக்கத்தோடு, “10 K ஸ்டார்ட் அப்” என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் சென்னை திட்ட முயற்சி மந்த நிலையில் இருந்து நகர்ந்து, சில மாதங்களுக்கு முன்னால் சென்னை 'டைடல்' பூங்காவில், 7 ஆயிரம் சதுர அடி இடத்தை அரசு வழங்கி உள்ளது. இந்த இடத்தில் 90 பேர் வரை அமர்ந்து வேலை செய்யலாம். இதை உபயோகப்படுத்திக் கொள்ள நபருக்கு சலுகை கட்டணமாக, 3000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். 2013க்கு பிறகு மின்பற்றாக்குறை பிரச்னை பெருமளவு தீர்க்கப்பட்டு விட்டதால், பல சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இயல்பாக இயங்கும் நிலை உருவானது. புதிய அரசு என்ன செய்ய வேண்டும் ஐ.டி., துறைக்கான கட்டமைப்புகள் திட்டங்களை தீட்டி, முதல் மாநிலமாக உயர்த்தும் தொலைநோக்கு பார்வை வேண்டும். தெளிவான ஆக்கபூர்வமான தகவல் தொழில் நுட்ப கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். துறை செயலாளர் மற்றும் எல்காட் நிறுவனத்தில் ஐ.டி., அனுபவம் உள்ள திறன்மிக்க உயர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அமைச்சர்களுக்கு குறைந்தபட்ச துறை சார் அறிவும் அனுபவமும் இருத்தல் வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை, அமல் படுத்துவதற்கான சுமுகமான சூழலும் ஒத்துழைப்பும் மிக அவசியம்.
சென்னை, பெரு வளர்ச்சியில் திணறிக்கொண்டு இருக்கிறது. அரசு இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களுக்கான கட்டமைப்பு வசதிகளையும், தொழில் சூழல்களையும் உருவாக்க அந்தந்த நகரங்களின் முக்கிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அரசு ஐ.டி., சிறப்பு பொருளாதார மண்டலங்களில் செய்யப்பட்ட செலவு வீணாகாமல் இருக்கும் வகையில், அதன் சட்ட திட்டங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஐ.டி துறையில் ஏராளமாக இயங்கி வருகின்றன. இவர்களுக்கான சிறப்பு கொள்கைகள் இதுவரை ஆராயப்படவில்லை. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சிறப்பு கொள்கை திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
ஸ்டார்ட் அப் முயற்சிகளுக்கான சூழல், அனைத்து நகரங்களிலும் உருவாக முயற்சி தேவை. தொடக்க நிலை நிறுவனங்களுக்கான அலுவல் கட்டமைப்பு வசதிகளை, குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டத்தை அரசு வேகமாக செய்ய வேண்டும். மானியங்களை குறைத்து, தனியாரோடு இணைந்து துணிகர பங்கு முதலீடு முறையை (வெஞ்சர் கேபிடல்) அரசு செயல்படுத்த வேண்டும். தடை இல்லா மின்சாரம் சென்னை மட்டுமல்லாது, அனைத்து நகரங்களையும் சார்ந்த தொழில் துறையினர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.-சிவராஜா ராமநாதன், இயக்குனர்,நேட்டீவ் லீடு பவுண்டேஷன், மதுரை. 98409 44410

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X