புதுடில்லி : மூன்று முறை தலாக் கூறினால் விவாகரத்து பெறும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என 50,000 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர். தேசிய மகளிர் கமிஷன் இதில் தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என பாரதிய முஸ்லீம் மகிலா அதோலன் அமைப்பினர் அந்த மனுவில் கோரி உள்ளனர்.
மூன்று முறை தலாக் கூறி, விவகாரத்து பெறும் முறைக்கு எதிராக குஜராத், மகாராஷ்டிரா, ராஜ்ஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா, தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், கேரளா, உத்திர பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் பாரதிய முஸ்லிம் மகிலா அதோலன் அமைப்பின் சார்பில் தேசிய கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இது குறித்து அந்த இயக்கத்தின் நிறுவனர் ஜாகியா சோமன் கூறுகையில், நாடு முழுவதும் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 50,000 க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களிலும் பல கையெழுத்துகள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த கையெழுத்துகளை இணைத்து தேசிய மகளிர் கமிஷன் தலைவர் லலிதா குமாரமங்கலத்திற்கு கடிதம் எழுதி உள்ளோம். இஸ்லாமிய பெண்கள் பல காலமாக வலியுறுத்தியும், நிலுவையில் இருக்கும் இந்த கோரிக்கையை ஏற்று, தலாக் கூறி விவகாரத்து பெறும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிஎம்எம்ஏ (பாரதிய முஸ்லீம் மகிலா அதோலன் ) நடத்திய ஆய்வில், தலாக்கிற்கு எதிரான போராட்டத்திற்கு 92 சதவீதம் இஸ்லாமிய பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சில சமயங்களில் போன் மூலமாகவும், எஸ்எம்எஸ், பேஸ்புக், ஸ்கைப் மற்றும் இமெயில் மூலமும் தலாக் கூறி விவகாரத்து பெறப்படுகிறது. நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி தலாக் கூறும் சமீப காலமாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு தலாக் மூலம் விவகாரத்து பெறும் இஸ்லாமிய பெண்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு ஏதும் இல்லாததால், தலாக் கூறி விவகாரத்து பெறும் முறைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை அதிகரித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE