வன்முறைக்கு ஆளாகலாமா குழந்தைகள்? : இன்று வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான சர்வதேச தினம்

Added : ஜூன் 01, 2016
Advertisement
 குழந்தைகளுக்கான சர்வதேச தினம்

குழந்தைகள் மீதான வன்முறை என்பது நாட்டின் எல்லா பகுதிகளிலும் வியாபித்திருக்கும் நோய். இது உலகெங்கும் நிகழ்கிறது என்றாலும் இதுகுறித்து நாம் தான் அதிக கவலைப்படவேண்டும்.காரணம், உலகிலுள்ள பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறார்களின் 19 சதவிகிதம் பேர் இந்தியாவில் இருக்கின்றனர். நம் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் குழந்தைகள். எனவே குழந்தைகள் குறித்து பேசுவதும், அவர்கள் பாதுகாப்புக் குறித்து அக்கறைப்படுதலும் நமக்கு அவசியமாகிறது.
பொதுவாகக் குழந்தைகள் மீதான வன்முறையை உடல் ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை, உணர்வு
ரீதியான வன்முறை, புறக்கணிப்பு என நான்கு வகைகளாகப் பிரிக்கிறார்கள். இவற்றில் உடல் ரீதியான வன்முறை, பாலியல் ரீதியான வன்முறை ஆகியவை குறித்த கவனமும் விழிப்புணர்வும் சமீப காலமாக அதிகரித்திருக்கிறது.
உணர்வுரீதியான வன்முறை குறித்தும் புறக்கணிப்புப் பற்றியும் பெரிதாகப் பேசப்படுவதில்லை. குழந்தைகளை மிகக்
கடுமையாகத் திட்டுவது, இருட்டு அறையில் அடைத்துவைப்பது, கட்டிப் போடுவது, இன்னொரு குழந்தையோடு ஒப்பிட்டு அலட்சியம் செய்வது, பொது இடத்தில் அவமானப்படுத்துவது, குழந்தையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் நடத்துவது போன்றவற்றை உணர்வு ரீதியான வன்முறை எனலாம்.
புறக்கணிப்பு வன்முறை பெரும்பாலும் பெண் குழந்தைகளுக்கே நேர்கிறது. மருத்துவ வசதி, கல்வி, உணவு, உடை போன்றவை பெண் குழந்தைகளுக்குக் கிடைப்பதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
2001--2011-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்திய மக்கள்தொகை 1810 லட்சம் அதிகமாகியது. ஆனால், -6 வயது வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 50.5 லட்சம் குறைந்தது. அதில் ஆண் குழந்தைகள் எண்ணிக்கை 20.6 லட்சம். பெண் குழந்தைகளின் எண்ணிக்கை 29.9 லட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பிறப்பில் மட்டுமல்ல, பிறந்து 12 முதல் 23 மாதங்கள் வரை உள்ள குழந்தைகளில் 40 சதவிகிதம் பெண் குழந்தைகளுக்கும் தடுப்பு மருந்து கிடைக்கவில்லை. படிப்பிலும் பெண் குழந்தைகள் புறக்கணிக்கப்புக்குள்ளாகிறார்கள்.
மும்பையை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று 'இந்திய பெண்களின் உலகம்' என்ற பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி இந்தியாவில் பள்ளிக்கூடத்தில் சேரும் பெண் குழந்தைகளில் 70.2 சதவீதம் பேர், 10ஆம் வகுப்பிற்கு முன்பே தங்கள் படிப்பை பாதியில் கைவிடுகின்றனர். கிராமப்புற பகுதியில் 1ஆம் வகுப்பில் சேரும் 100 மாணவிகளில் ஒரே ஒரு மாணவி மட்டும், 12ஆம் வகுப்பு வரை செல்கிறார்.
நகர்புறங்களில் 1ஆம் வகுப்பில் 1000 மாணவிகள் சேர்ந்தார்கள் என்றால் 14 பேர் மட்டுமே 12ஆம் வகுப்பு வரை செல்கின்றனர் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. ஆய்வை நடத்திய குழுவில் இடம் பெற்று இருந்த டாக்டர் பிந்து லெட்சுமி கூறும் போது, ''இந்த ஆய்வின் முடிவுகள் மூலம்
இந்தியாவில் மிகச்சிறிய அளவில் மட்டுமே பெண்களின் நிலை உயர்ந்து உள்ளது'' என்கிறார்.குடும்ப அழுத்தம், பள்ளியில் முறையான கழிவறை வசதிகள் இல்லாதது, நீண்ட தொலைவில் பள்ளி இருப்பது, பாலின பாகுபாடு, பாதுகாப்பு இல்லாதது போன்றவை பெண் குழந்தைகள் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்துவதற்கானக் காரணங்களாகக் கூறப்படுகிறது. இதில் "பாதுகாப்பு இல்லாதது"
என்கிறபோது பாலியல் வன்முறை குறித்துப் பேசவேண்டியது அவசியமாகிறது.
பாலியல் வன்முறை

இந்திய அரசின் குழந்தைகள் நலத்துறையானது, சில ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகள் மீதான பல்வேறு வன்முறை குறித்து விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டது.
பதிமூன்று மாநிலங்களில் 12,447 குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வில் 53 சதவிகிதம் குழந்தைகள் ஏதோ ஒரு பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும், 21.9 சதவிகிதம் குழந்தைகள் மோசமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரியவந்தது. பாதிப்புக்குள்ளாவதில் இருபாலரும் (சிறுவர், சிறுமியர்) ஏறக்குறைய சரிசமமாக உள்ளனர்.
இந்தியாவில் ஆண்டிற்கு 12 ஆயிரம் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாகக் கூறப்படுகிறது.குழந்தைகளை தொடுதல் உட்பட பல வகைகளில் குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சிறார் 11 முதல் 15 வயதிற்குட்பட்ட சிறுவர் சிறுமியர்தான் பாலியல்
வன்முறைக்கு அதிகம் ஆளாகிறார்கள்.."சேவ் தி சில்ட்ரன்" என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைப்பின் உதவி யோடு "துளிர் குழந்தை பாலியல் கொடுமை தடுப்பு மற்றும் குணமளிக்கும் மையம்" சென்னை பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஒரு
ஆய்வினை நடத்திட முடிவு செய்து சென்னையிலுள்ள 426 பள்ளிகளில் அனுமதி கேட்டிருந்தது. ஆனால் தகவல் திரட்ட 24 பள்ளிகள் மட்டுமே அனுமதி வழங்கின. 2211 மாணாக்கர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் 1364 பேர் மாணவிகள். இந்த ஆய்வின் மூலம் பல அதிர்ச்சியான
தகவல்களை அறியமுடிந்தது. அதாவது, பங்கு பெற்றவர்களில் 42 சதவிகிதத்தினர் ஏதோ ஒரு வகையில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருந்தனர். இந்தப் புள்ளி விவரங்கள் மற்றும் தகவல்கள் மூலம் இந்திய சமூகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஆதிக்கம் பெற்றுள்ளதை அச்சத்துடனும் வேதனையுடனும் அறியமுடிகிறது.
யாரால் வன்முறைடில்லியில் சாக் ஷி எனும் தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் 63 சதவிகிதம் குழந்தைகள் பெரும்பாலும், தங்கள் குடும்ப உறுப்பினர்களாலும், நன்கு
அறிமுகமான, அன்றாடம் சந்திக்கும் நபர்களாலும் வன்முறைக்கு உள்ளாகிறார்கள் என்பது தெரியவந்தது.பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிக்கையொன்று, "பாதிக்கப்படும் குழந்தைகளில் 69 சதவிகிதம் பேர் உடல்ரீதியாகப்
பாதிக்கப்படுகிறார்கள். பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் சிறுவர்களில் 52.9 சதவிகிதம் பேரும் சிறுமிகளில் 47.9 பேரும் குடும்ப உறுப்பினர்களால்
பாதிக்கப்படுகிறார்கள்" என்கிறது. அதாவது குழந்தைக்கு நெருக்கமானவர்கள் எளிதில் அணுகி குழந்தையை நம்ப வைத்து பாலியல் கொடுமையை அரங்கேற்றுகின்றனர்.
பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிப்பதற்கான வழிகளை பெற்றோரும் ஆசிரியர்களும்தான் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். பள்ளிகளில் ஆரம்ப வகுப்பிலேயே தீண்டலின் சரி, - தவறுகளை ஆசிரியர்கள் சொல்லித் தரவேண்டும்.
குழந்தைகளிடம் தேவையானவற்றை வெளிப்படையாகப் பேசுவது, அவர்களையும் அப்படிப் பேசவைப்பது, குழந்தைகளை ஆசிரியர்களும் குடும்பத்தினரும் கண்காணிப்பது, மாணவிகள் படிக்கும் பள்ளிகளில் பெண்களை மட்டும் ஆசிரியர்களாக நியமித்தல் ஆகியவை வன்முறையைக் கணிசமாகக் குறைப்பதற்கான வழிகள். விடலைப் பருவத்தினருக்கு செக்ஸ் கல்வி அளித்தல் அவசியம். பாலின கல்விமுக்கியமானது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட முன்வரவேண்டும். இன்று பிள்ளைகளிடம் நேரத்தைச் செலவிட்டால், நாளைக்கு, குழந்தைகள் குறித்த அச்சமில்லாத, நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள முடியும்.
குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் ரீதியான வன்முறைகளை தடுக்க கடந்த 2012ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கு குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப
3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் தான் ஒரு நாட்டின் வளம். எனவே குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதும் அது தொடர்பாக பொதுமக்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் மிக அவசியம். அது நமது பொறுப்பும், கடமையும் கூட.
- ப. திருமலை 84281 15522 பத்திரிகையாளர், மதுரை84281 15522

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X