சேலம்: தமிழகத்தில், 31 மாவட்ட போலீசாருக்கு, முதல் முறையாக, 6.20 கோடி ரூபாய் செலவில், 62 நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடக்கும் அரசியல் கட்சித் தலைவர்களின் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகள், விழாக்களின்போது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளும் போலீசார், இயற்கை உபாதைகளை கழிப்பதில் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். கடந்த ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து, ஆறு மாநகர போலீஸ் தவிர, 31 மாவட்ட போலீசார் பயன்படுத்தும் வகையில், மாவட்டத்துக்கு தலா இரண்டு ஆண்கள், பெண்களுக்கு பிரத்யேகமாக நடமாடும் கழிப்பறை வாகனங்களை வழங்க, உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. சேலம் உட்பட, 31 மாவட்ட போலீசாருக்கு, நேற்று முன்தினம் நடமாடும் கழிப்பறை வாகனங்கள் வழங்கப்பட்டன. முறையாக, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வாகன பதிவு முடிந்தபின், ஆயுதப்படையின் கட்டுப்பாட்டில், நடமாடும் கழிப்பறை வாகனங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறியதாவது: தமிழக போலீசுக்கு வழங்கப்பட்டுள்ள, 62 நடமாடும் கழிப்பறை வாகனங்கள், அந்தந்த மாவட்ட போலீஸ் ஆயுதப்படைக்கு வந்து சேர்ந்து விட்டது. அவற்றை, அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள், சரக டி.ஐ.ஜி.,க்கள் பயன்பாட்டுக்கு வழங்குவர். அந்த வாகனங்கள், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் கூடும் இடத்தில், கொண்டு சென்று விடப்படும். இந்த வாகனம் போலீசார் மட்டும் பயன்படுத்துவார்களா, மக்களும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுமா என, அந்தந்த மாவட்ட எஸ்.பி.,க்கள் முடிவுசெய்வர். இவ்வாறு அவர் கூறினார்.
என்னென்ன? ஒவ்வொரு நடமாடும் கழிப்பிட வாகனத்திலும், இந்தியன் டைப், வெஸ்டன் டைப் கழிப்பறை, பிரத்யேக உடை மாற்றும் அறை, கை கழுவ, தனி பைப் குழாயுடன், ஒரு நுழைவாயில் உள்ளது. தட்டுப்பாடு இன்றி தண்ணீர் வினியோகிக்க, ஒவ்வொரு வாகனத்தின் மேற்பகுதியில், ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி பொருத்தப்பட்டுள்ளது.