சென்னிமலை,: சென்னிமலையில் போலீசார் நடத்திய நாடகத்தில், சித்தர் உட்பட, மூன்று பேர் சிக்கினர்.
சென்னையைச் சேர்ந்தவர் தீனதயாள், ௭௮; சர்வதேச சிலை கடத்தல்காரன் சுபாஷ் சந்திரகபூரின் நெருங்கிய கூட்டாளி. இவர் வீட்டில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகளை, போலீசார் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக, அப்பிரிவு போலீசார் சென்னிமலையில் நடத்திய, 'நாடகம்' தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி - படியூர் வழியில் சிவகிரி என்ற இடத்தில், நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில், டிரைவர் உட்பட மூன்று பேர் வந்தனர். அவர்களிடம், எட்டு முகம் கொண்ட ஐம்பொன் ஈஸ்வரன் சிலை இருந்தது.
விசாரணையில், அவர்கள் சென்னிமலை சுந்தரர் வீதியில், சித்தர் பீடம் நடத்தி வரும் சரவண சித்தர், 47; அவரது தம்பி முருகன், 41; திருச்சி மணச்சநல்லூரைச் சேர்ந்த மனோகரன், 40 என்பது தெரியவந்தது. சிலையை விற்க அவர் கொண்டு சென்றதும் தெரியவந்தது.
நான்கு மாதத்துக்கு முன், சரவண சித்தரிடம் பக்தர் ஒருவர் தந்த சிலையே அது என்பதும் தெரிந்தது. தன் வீட்டில் வைத்திருந்தால் பிரச்னையாக உள்ளது. எனவே, சித்தர் பீடத்தில் வைக்குமாறு கொடுத்துள்ளார். அதை, நான்கு மாதமாக பூஜை செய்து வந்துள்ளார்.இந்நிலையில், சென்னையில் வசிக்கும் அவரது தம்பி முருகன், அந்த சிலையை போட்டோ எடுத்து, 'வாட்ஸ் ஆப்'பில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பார்த்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சிலை கடத்தல் சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அந்த கும்பலுக்கும், முருகனுக்கும் தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து, நாடகமாடி முருகனை பிடிக்க முயன்றனர்.இதன்படி, முருகனுக்கு போலீசார் ஆசை காட்டினர். முதலில் மறுத்த முருகன், ஆறு கோடி ரூபாய் தருவதாகக் கூறியதும் ஒப்புக் கொண்டுள்ளார். சிலையை எடுத்து வருமாறு, போலீசார் கூறியுள்ளனர். அழைப்பது போலீசார் என தெரியாமல், காரில் சிலையுடன் மூவரும் சென்றபோது தான், வாகன தணிக்கையில் சிக்கியுள்ளனர்.
விசாரணையில், ஒரு பக்தர் தந்ததும், ஆறு கோடி ரூபாய் ஆசை காட்டியதால், விற்பதற்கு எடுத்துச் சென்றதும் உறுதியானது. இதனால், சிலை கடத்தல் கும்பலுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீசார் விடுவித்தனர்.