பெண்களின் எழுச்சி ஆண்களின் வீழ்ச்சியல்ல!

Added : ஜூன் 05, 2016 | கருத்துகள் (2)
Advertisement
பெண்களின்  எழுச்சி ஆண்களின்  வீழ்ச்சியல்ல!

ஒவ்வொரு பெண்ணின் உள்ளும், ஒரு நல்ல செய்தி ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த நல்ல செய்தி என்னவென்றால், அவளால் உலகில் எத்தனை பெரிய பெருமையை அடைய முடியும் என்பதையும், அந்த பெருமையை அடைய அவள் எவ்வளவு விரும்ப முடியும் என்பதையும், அந்த பெருமையை எந்த வழிகளில் அவளால் பெற முடியும் என்பதையும், அதற்கு தேவையான அவ்வளவு திறமையை அவள் தன்னுள் கொண்டுள்ளாள் என்பதையும் அவள் உணர முடியாமல் இருப்பதுதான்.
ஆசை மகளாக, அன்பு அன்னையாக, அருமை அத்தையாக, நேச மனைவியாக, பாச பாட்டியாக, செல்ல தங்கையாக, நட்பு தோழியாக, நல்ல தாதியாக, மற்றவர் கனவை வாழ்ந்தது போதும். நீங்கள் எப்போது உங்கள் கனவை வாழப்போகிறீர்கள்? உங்கள் பெருமைகளை குறைத்துக்கொண்டு அல்லது மறைத்துக் கொண்டு இருள் வாழ்க்கையை இன்னும் எத்தனை காலம்தான் வாழப்போகிறீர்கள்.
ஒளியாகும் காலம் :ஒரு முறைதான் வாழ்க்கை; பலமுறை அல்ல. அந்த வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வாருங்கள். ஆம்... நம் வாழ்க்கையை நாமே வாழ்ந்து பார்த்துவிடுவோம் வாருங்கள்.தோழிகளே! எழுந்திருங்கள். மறைந்து கிடக்கும் உங்களுடைய உள்சக்தியை வெளிக்கொண்டு வாருங்கள். இது உங்களை மேம்படுத்துவதற்கான நேரம்...மைபூசும் பெண்மையாக வாழ்ந்தது போதும்.பெருமை ஏற்கும் தலைமையாக மாற வாருங்கள்.
வீட்டின் ஒளியாக மட்டும் அல்ல. உங்களுக்கு நீங்களே ஒளி ஆகும் காலம் இது... உண்மையில், பெண் முன்னேற்றம் என்பது, ஆண்களுக்கு நாங்கள் சமம் என்று காட்டிக்கொள்வதோ, ஆண்கள் செய்யும் செயல்கள் அத்தனையும் எங்களால் செய்ய முடியும் என்று காண்பிப்பதோ, ஆண்களை எதிர்ப்பதோ அல்லது ஆண்கள் உலகத்தை வெறுப்பதோ அல்ல. பெண்களின் எழுச்சி என்பது ஆண்களின் வீழ்ச்சியும் அல்ல. இந்த உலகில் வாழும் அத்தனை உயிர்களுக்கும், அதனுடைய வாழ்க்கையை வாழக்கூடிய உரிமை இருக்கிறது.
எங்கும் சமத்துவம்:வாழ்க்கையை தமக்கு பிடித்த முறையில் வாழ, வடிவமைத்துக் கொள்ள, தாமே தீர்மானித்துக் கொள்ள, உரிமை ஏற்படுத்திக் கொள்வதே பெண் முன்னேற்றம். ஆம்... உண்மையில், இதில் பெண் சமத்துவ உரிமையும் ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது. உலகில் அநேக பெண்கள் தங்களை முன்னேற்றிக் கொள்ளவும், தம் வாழ்க்கையை தாமே தீர்மானிக்கவும், தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், ரகசியமாக வாழ்நாள் முழுவதும் விரும்பிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.உலகம் தோன்றி இத்தனை வருடம் கழித்தும், இன்னும் அந்த உரிமையை பெற போராடிக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று சட்டப்படி நாட்டில் பெண்களுக்கு எல்லா உரிமைகளும் இருந்தாலும், சமுதாயப்படி இன்னும் எந்த உரிமையும் இல்லை அவர்களுக்கு.
மறுக்கப்படும் உரிமை :பிறப்புரிமை இருக்கிறது பெண்ணிற்கு; ஆனால் பிறக்கும் உரிமை இல்லை பெண் சிசுவிற்கு.வாழ்வுரிமை இருக்கிறது பெண்ணிற்கு; ஆனால் வரதட்சணை இன்றி வாழ வழி இல்லை அவளுக்கு.சொத்துரிமை இருக்கு பெண்ணிற்கு; ஆனால் சொத்து எதுவும் இல்லை அவள் பெயருக்கு. பெண் சிசுக்கொலை, வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை இவை அனைத்தும் இன்னும் இருக்கிறது நம் நாட்டில். பெயரளவில் சுதந்திரம்;
பேச்சளவில் சமத்துவம்:இதுதான் இன்றைய பெண்ணின் நிதர்சனம். இதை கல்வியால் மட்டுமே மாற்ற முடியும். ஒரு ஆண் கல்வி கற்றால், அவன் மட்டுமே முன்னேற்றம் அடைவான். ஒரு பெண் கல்வி கற்றால், அவள் குடும்பம் முழுவதும் முன்னேற்றம் அடையும்.ஆனால் இன்று, 310 லட்சம் பெண்கள் அடிப்படைக் கல்வி கூட இல்லாமல் இருக்கிறார்கள் அல்லது மறுக்கப்பட்டு இருக்கிறார்கள். தொடக்கக் கல்வி கூடத்தில் 100 சதவீதம் ஆக இருக்கிற பெண்கள், நடுநிலை கல்வி வரும்போது 92 சதவீதமாகவும், உயர்நிலை கல்வி வரும்போது 84 சதவீதமாகவும் பட்டப்படிப்பு வரும்போது 61 சதவீதமாகவும் படிப்படியாக குறைந்து விடுகிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணும் அவளுடைய வாழ்க்கையை அவளே தீர்மானிக்கக்கூடிய தகுதி, பலம், செயல், தன்னம்பிக்கை அத்தனையும் கொண்டவளாகத்தான் இருக்கிறாள். ஆனால் அவளுடைய வாழ்க்கையை அவள் வாழ்கிறாளா, தீர்மானிக்கிறாளா, அவள் விரும்பும் வாழ்க்கையை, இடத்தை அவளால் அடைய முடிகிறதா? நீங்கள் மகிழ்ச்சியாக, திருப்தியாக, உங்கள் வாழ்க்கையை நீங்களே வாழ்வது, உங்கள் கைகளில் மட்டும்தான் உள்ளது.
உங்களை அறிந்து கொள்ளுங்கள் :முன்னேற்றம் அடைய விரும்பும் பெண், தன்னைப்பற்றி நன்கு அறிவாள். இன்று அநேக பெண்கள் அவர்களை அவர்களே தொலைத்து விட்டதாக எண்ணுகிறார்கள். காரணம் எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும், தன்னைப் பற்றி அறிந்து கொள்ள, புரிந்து கொள்ள சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.தன் வாழ்வின் அர்த்தம் என்ன, தன் லட்சியம் என்ன, தன் குறிக்கோள் என்ன, தன்னால் நன்றாக, வெளி உலகை தொடர்பு கொள்ள முடியுமா, தான் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியுமா, தான் சிறந்த தலைவியாக மாற முடியுமா, தன்னால் தானாகவே ஒரு சிறந்த வேலையைச் செய்ய முடியுமா அல்லது ஒரு குழுவாக தன்னால் வேலை செய்ய முடியுமா?இந்த அத்தனை கேள்விகளுக்கும் உங்களால் பதில் சொல்ல முடியும் என்றால், நீங்கள் அத்தனை பேரும் சுய முன்னேற்றம் அடைந்த பெண்கள் என்று பெருமிதம் கொள்ளலாம்.
அறிவை விரிவாக்குங்கள் :இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய அறிவை வளர்த்துக் கொள்ள எத்தனையோ வழிகள் இருக்கின்றன. தங்களுக்கு தாங்களே புதிதாய், புத்தம் புதிதாய் கற்றுக் கொள்ள நீங்கள் எடுக்கும் முதல் முயற்சியே, முன்னேற்றப் பாதையில் உங்களை செல்ல வைக்கும்.தினமும் நுாலகத்திற்கு செல்லலாம். புத்தக குழுவில் சேரலாம். இணையதளத்தில் ஆராய்ச்சி செய்யலாம். தமக்கு பிடித்த வகுப்பில் சேரலாம்.
அது சுலபமான பின்னலாடை வகுப்பாக இருக்கலாம் அல்லது கடினமான இயற்பியல் பாடமாக இருக்கலாம்.நீங்கள் உங்கள் அலைபேசியை வீட்டில் விட்டு விட்டு எப்போதாவது வெளியில் சென்றது உண்டா? என்றாவது ஒரு நாள் நீங்கள் உங்களுக்கு பிடித்த உணவு விடுதிக்கு உங்களுக்கு பிடித்த உணவை உண்ண தனியே சென்று இருக்கிறீர்களா? நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதில் சவுகரியமாக இருப்பதும், எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான தைரியம் உள்ளதாக உணர்வதும்தான், முன்னேற்றத்திற்கான முதல் உணர்வு.- அல்லிராணிசமூக ஆர்வலர்alliranibalaji@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
06-ஜூன்-201610:48:44 IST Report Abuse
நக்கீரன் பெண்களின் எழுச்சி ஆண்களின் வீழ்ச்சியல்ல - ஆனால் இன்று நிலை அப்படி இல்லை. எதோ ஆண்களை எதிர்த்தால்தான் அது பெண்ணியம் என்று நினைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள். பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும். சுயமாக வாழ வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அதை தப்பாக வாழ்வோம் என்பது ஏற்புடையதல்ல. அது நமது சமுதாயத்தையே பாதிக்கும். பெண்களில் தங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை தவறாக புரிந்து கொண்டு அதை தப்பாக பயன்படுத்துவோர்தான் இன்று அதிகம். தங்களை கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்வதும், நுகர்வு கலாச்சாரத்தில் அடிமையாக இருப்பதும், அதை மற்றவர்கள் கேட்கக்கூடாது என்பதும்தான் இன்று பெண்களின் சுதந்திரமாக நினைக்கப்படுகிறது. பெண்களின் உண்மையான சுதந்திரம் அவர்களின் கல்வி. அறிவு அதன் மூலம் அவள் அடையும் உயர்வு.
Rate this:
Share this comment
A.Natarajan - TRICHY,இந்தியா
08-ஆக-201612:09:18 IST Report Abuse
A.Natarajanவரதட்சணை பற்றி ??? பெண்ணுக்கு சொத்துரிமை இல்லை ??? இருக்கிறது ஏட்டளவில் ??? திருமணம் போதும் ஏதும் கொடுப்பதில்லை என்றால் என்ன அர்த்தம் ? இது அனர்த்தம் பெண்ணே விழித்துக்கொள் உங்களை அடிமை யாக வைத்திருக்க ஆண் சமூகம் நினைக்கிறதா? படிக்கவும் விடுவதில்லை? வேலைக்கு செல்ல ஏகப்பட்ட கட்டுப்பாடு ?? விழிப்புணர்வு தேவை உனக்கு சொத்து கொடு இல்லை வரதட்சணை கொடு இரண்டும் இல்லை உனக்கு என்றால் என்ன அர்த்தம் ???கல்விக்காக போராடு உன்னை உயர்த்திக்கொள்ள...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X