இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சரி, அதை அடிப்படையாகக் கொண்ட இன்ன பிற சட்டங்களும் சரி, இந்தியர் ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டியவை. செய்த தவறுக்கு பதிலாக 'அப்படி சட்டம் சொல்வது எனக்குத் தெரியாது' எனச் சொல்லி தப்பிக்க இயலாது.இதன் காரணமாகவும், சட்டப் புத்தகங்கள் அநேக சமயங்களில் ஆங்கிலத்திலேயே இருப்பதாலும், மொழி எதுவாக இருந்தாலும், ஒரு சராசரி மனிதனுக்குப் புரியாத அளவுக்கு அதிக தொழில் நுட்பச் சொற்கள் அடங்கியதாகவும் இருப்பதால், சட்டப் புத்தகங்களை பொது சனம் படிப்பதற்கும் அறிந்து கொள்வதற்கும் கடினமாகவே இருக்கிறது.எனவே, மேற் சொன்ன காரணங்களால், தமிழில், எளிய மொழியில், சராசரிக்கும் புரியும் வண்ணம் நாம் அறிந்திருக்க வேண்டிய சட்டங்களைப் பற்றி இக்கட்டுரைத் தொடரில் எழுதுகிறேன். இதில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்தும், நிர்வாகச் சட்டங்கள் குறித்தும் எழுத இருக்கிறேன். ஏனெனில், நமது ஒவ்வொரு செயல்பாடும், அரசை, அரசாங்கத்தை ஒட்டியே அமைகின்றன.நல்லது. இனி கட்டுரைக்குப் போவோம். இணைந்தே அறிவோம்.அரசு வேறு அரசாங்கம் வேறு என்பதை நாம் அறிவோம். அல்லவா? இந்திய அரசு என்பது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிலையானது, அதை ஆளும் கட்சி என்பதே ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மாறக்கூடியது.அரசின் செயல்பாடுகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதன் பொருள், அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட பல சட்டங்களையும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுகிறது என்பதே. அதாவது நிர்வாகச் சட்டங்களையும் தமது வழிகாட்டியாகக் கொண்டு செயல்படுகிறது.இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசின் /அரசாங்கத்தின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவதோடு, நெறிப்படுத்தவும் செய்கிறது. எவ்வெவற்றை செய்யக்கூடாது எனச் சொல்வதோடு மட்டும் அல்லாமல். எவ்வெவற்றைச் செய்ய வேண்டும் எனவும் நெறிப்படுத்துகிறது.ஆரம்ப காலங்களில் ஒரு அரசாங்கம் என்பது பாதுகாப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதாவது போஸீஸிங் ஸ்டேட் என ஆங்கிலத்தில் அதைச் சொல்லலாம். அதன் முக்கிய நோக்கம், நாட்டின் குடிமக்களைப் பாதுகாப்பதே.ஆனால், அதன் பின்னான அரசுகள், ஒரு அரசாங்கம் மக்களை பாதுகாப்பதை மட்டும் நோக்கமாகக் கொள்ளாமல், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் நல அரசாக வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியது. இக் கருத்தை ஒட்டி, மக்கள் நலத்திற்கு ஏற்றவை இவை எனவும்., அந்த நோக்கத்தை எட்ட சில வரைமுறைகளையும் பரிந்துரைக்கிறது.அப் பரிந்துரைகளையே Directive Principles என இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 18-ன் ஆர்டிகில் 36 முதல் 51 வரையான பிரிவுகள் குறிப்பிடுகின்றன.சமீப காலம் வரை இந்த சட்டப் பரிந்துரைகள் பரிந்துரைகளாக மட்டுமே இருந்து வந்தன. அதாவது, பொதுசன மொழியில் சொல்வதானால், பொதுவாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அல்லது அதிலிருந்து கிளைத்தெழுந்த சட்டங்களை ஒட்டி அரசின் செயல்பாடு அமையவில்லை எனில் (சில கடப்படுகளுக்குட்பட்டு) அதை எதிர்த்து வழக்குத் தொடுக்கலாம். உதாரணமாக, ஒரு நபருக்கு, தொழிலாளர் நலச்சட்டங்களின் படியான குறைந்த பட்ச ஊதியத்தைக் கூட தரவில்லை எனில் அதை எதிர்த்து வழக்கிடலாம்.ஆனால், Directive Principle என்பது இந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டிருப்பவை அனைத்தும், நெறிகாட்டும் வகைகளே… இதையும் பொது சன மொழியில் சொல்வதென்றால், 'திருடக்கூடாது. திருடினால் இன்ன தண்டனை' என்பது குடிமக்களுக்கு, மற்ற சட்டப் பிரிவுகள் சொல்வது.டைரக்டிவ் ப்ரின்சிபல் என்பது, அரசுக்கு, 'நல்ல பிள்ளையாக இரு' எனச் சொல்வதைப் போன்றது. அதாவது இவ்விவற்றை மக்களுக்காக ஒரு அரசு செய்ய வேண்டும் எனப் பரிந்துரைப்பது. இதைச் செய்யாவிட்டால் என்ன தண்டனை என்பதற்கு 'நல்ல பிள்ளை' என்பதற்கான விளக்கம் அவசியம். அதே சமயம், அப்படி இருக்க முடியாததற்கான காரணத்தை ஏன் தவிர்க்கவில்லை? எனும் கேள்வியும் எழுகிறதல்லவா?இந்நிலையில், மக்கள் நல அரசு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாகச் சொல்கிறது. ஆனால், ஏதேதோ காரணத்தினால் அத்திட்டத்தைச் செயல்படுத்த இயலாமல் போகிறது. இந்நிலையில் அந்த அரசை, செய்வதாக்ச் சொன்ன திட்டத்தைச் செயல்படுத்தியே ஆக வேண்டும் என சட்டம் வற்புறுத்த இயலாத நிலையே எல்லா சூழலிலும், முன்பு இருந்தது. அரசை எதிர்த்து அதன் செயல்பாட்டை எதிர்த்து வழக்கிட இயலாது எனும் நிலையே முன்பு இருந்தது.ஆனால், சமீப காலத்தில், அரசை அப்படி நெறிமுறைப்படுத்தும், சிலபல வகையங்களை, எதிர்த்து கேள்விகேட்டு அல்லது வழக்கிட்டு, அரசினை அப்படியான ஒரு திட்டத்தைச் செயல்படுத்தச் சொல்லலாம் எனும் நிலை ஏற்பட்டு வருகிறது என்பது சட்ட வளர்ச்சிச் செயல்பாட்டில் ஒரு முக்கியமான மைல் கல் ஆகும்.சரி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் இப்பகுதி, நீதியை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பை உருவாக்கி அதைப் பாதுகாக்கவும், பொருளாதார நீதியினைக் காத்து, இலவச சட்ட உதவி செய்வது குறித்தும், சமூகத்தைப் பாதுகாப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் எனவும், மக்கள் பாதுகாப்புக்கு ஒரு அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், சமூக நலனை மேம்மடுத்த அரசு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசுக்குப் பரிந்துரை செய்கிறது.மேற்சொன்னவற்றிற்கும், அதே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 19 கூறும் அடிப்படை உரிமைகளுக்கும் என்ன வேறுபாடு? எனக் கேட்டால்…”அடிப்படை உரிமைகளில் எந்த ஒன்று மீறப்பட்டாலும், அதை எதிர்த்து வழக்கிட்டு தீர்வு காணலாம். அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்களையே எதிர்த்து வழக்கிட்டு, அச்சட்டங்களை இல்லா நிலையது என அறிவிக்ககோரி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளலாம்.”எனும் நிலையே இருந்தது. (*இரண்டிற்கும் இன்னும் வேறு சில வேறுபாடுகளும் உண்டு. ஆனால் அவற்றைப் பிரிதொரு சமயத்தில் காணலாம்). ஆனால், ஒரு சில நெறியுறுத்தும் கொள்கைகளை மீறும் அரசின் செயல்பாடு எதையும், எதிர்த்து வழக்கிட்டு தீர்வு காணலாம் எனும் நிலையும், நெறியுறுத்தும் கொள்கைகளுக்கு எதிராக இயற்றப்படும் சட்டங்களை இல்லா நிலையது என அறிவிக்கக்கோடி நீதி மன்றத்தைக் கேட்டுக் கொள்ளலாம் எனு போக்கு ஏற்பட ஆரம்பித்திருக்கிறது.அதாவது அடிப்படை உரிமைகள் மற்ரும் நெறுயிறுத்தும் கொள்கைகள் இரண்டிற்கும் இடையே கேள்வி வந்தால், அடிப்படை உரிமைகளே முன் நிற்கும் எனும் நிலை மட்டுமே இருந்தது. ஆனால் காலப்போக்கில் தேவையின் காரணமாக இந்த நிலையில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.இந்த மாற்றத்தை சின்னதாக ஒரு வரலாறு போல, வழக்குகளின் வருட வரிசைக் கிரமத்தின்படி புரிந்து கொள்ளலாம்.1951-ம் வருடம், சம்பகம் துரை ராஜன் என்பவர் அன்றைய சென்னை மாகாண அரசை எதிர்த்து வழக்கிட்டார். அதாவது, சென்னை மாகாண அரசு உத்தரவு ஒன்றை வெளியிட்டது. அதாவது சாதி சமய அடிப்படையில் கல்லூரிகளுக்கு இடம் பிரித்து அளிக்கும்படியாக அமைந்திருந்தது அந்த உத்தரவு. ஆனால் அந்த உத்தரவானது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான ஆர்டிகில் 29(2) க்கு முரணானது என்று வாதிடப்பட்டது. அதாவது சம்பகம் துரைராஜன், தமது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி வழக்கிட்டிருந்தார்.உண்மையில், சமமானவர்களுக்கிடையேயான ஏற்றதாழ்வுக்கேற்ப, இப்படிப் பட்ட பாகுபாடு தேவைதான் எனவும், அப்படியான பாகுபாடானது, அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 46 -ஐ பின்பற்ற கொண்டுவரப்பட்ட, மற்றும் நெறிப்படுத்தும் கொள்கையின் அடிப்படையிலான ஒரு சமூகத்தைக் கொண்டுவரச் செய்த ஒரு செயலே என சென்னை மாகாண அரசும் வாதிட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றமானது அன்றைய காலகட்டத்தில் இருந்த நிலவரப்படி, சம்பகம் துரை ராஜனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதால், அந்த அடிப்படை உரிமை மீறலானது நெறிமுறைப்படுத்தும் அரசியலமைப்புச் சட்ட ஆர்டிகிலின்படி அமைந்திருந்தாலும் அது செல்லத்தக்கதல்ல எனவும், அடிப்படை உரிமைகளுக்கே முக்கியத்துவம் தரப்பட வேண்டும் எனவும் சொல்லி, சென்னை மாகாண அரசின் உத்தரவைத் தள்ளிபடி செய்தது. அதாவது இந்த வழக்கில் சம்பகம் துரைராஜனின் தரப்புக்கு ஆதரவாக, அடிப்படை உரிமைகளே மேலோங்கி நின்றது.மற்றொரு வழக்கான In Re Kerala Education Bill எனும் வழக்கில், அடிப்படை உரிமைகளுக்கும், நெறியுறுத்தும் கொள்கைகளுகும் இடையே பிரச்னை எழுந்தால், அடிப்படை உரிமைகள் மேலோங்கும் என்றாலும், நெறியுறுத்தும் கொள்கைகளை அரசு அறவே புறக்கணிக்கக்கூடாது என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.இந்த மசோதாவின் படி அரசானது பள்ளிகளை அரசுடமையாக்கலாம் (சில கடப்படுகளுக்குட்பட்டு) அப்படி பள்ளிகளை அரசுடமை ஆக்குவது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 14 (Right to Equality) எனும் அடிப்படை உரிமையை பாதிப்பதாக உள்ளது என கருதப்பட்டது. ஆனால் அப்படி பள்ளியை அரசுடமையாக்க என சில வரைமுறைகளும் அந்த மசோதாவிலேயே சொல்லப்பட்டது. அந்த வரைமுறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 14அல் மீறுவதாக இல்லை என முடிவு செய்யப்பட்டது. எனினும் இந்த விவாதத்தின் போது, இந்த வழக்கில் அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறியுறுத்தும் கொள்கைகளுக்கும் இடையே பிரச்னை வந்தால் இரண்டிற்கும் சம அந்தஸ்து அளிக்கப்பட வேண்டும் என்றே முடிவானது.1958ம் ஆணு எம்.ஹெச். குரேஷி என்பவர் பிஹார் மாநில அரசுக்கு எதிராக வாதிட்டார். அதாவது அந்த மாநில சட்டத்தின்படி, பசு, எருது போன்றவை வதை செய்யப்படக்கூடாது எனும் சட்டமானது, அவற்றைக் கொன்று இறைச்சி வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் தொழில் செய்யும் உரிமையான அடிப்படை உரிமையாகிய ஆர்டிகில் 19 (1) (a) -வை பாதிக்கின்றாது என வியாபாரிகள் தரப்பிலிருந்து வாதம் முன் வைக்கப்பட்டது. ஆனால், நெறியுறுத்தும் கொள்கையின் படி அதாவது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகில் 48ஐ வைத்துப் பார்த்தால், (ஆர்டிகில் 48-கால்நடை பராமரிப்பு மற்றும் அதை வதை செய்தல் கூடாது) அடிப்படை உரிமையான தொழில் செய்யும் உரிமை மீதான நியாயமான கட்டுப்பாடாகவே இதைக் கொள்ளலாம் என தீர்ப்பளிக்கப்பட்டது. அதாவது இந்த வழக்கில் அடிப்படை உரிமைகள் மீது நியாயமான கட்டுப்பாட்டினை நெறியுறுத்தும் கொள்கைகள் கட்டமைக்கும் எனில் அது ஏற்கத்தக்கதே எனக்கூறி, நெறியுறுத்தும் கொள்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் இந்த இடத்தில் இருப்பதை நீதிமன்ற தீர்ப்பு சுட்டியது.அடிப்படை உரிமைகளே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியப் புள்ளி எனினும், அதிலும் நியாயமான கொள்கைகள், நெறியுறுத்தும் கொள்கைகள் கட்டமைக்கப்படுமாயின் அதுவும் ஏற்கத்தக்கதே எனும் சட்ட வளர்ச்சி கவனிக்கத்தக்கதே. அதை இனி வரும் கட்டுரைகளில் இணைந்து அறிவோம்.-ஹன்ஸா (வழக்கறிஞர்)legally.hansa68@gmail.com