கேரள செண்டை மேளங்களுக்கு தமிழகத்தில் மவுசு அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கேரள செண்டை மேளங்களுக்கு தமிழகத்தில் மவுசு அதிகரிப்பு

Added : டிச 27, 2010

தர்மபுரி : தமிழகத்தில் பெரும்பாலான விழாக்கள், கோவில் திருவிழா, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வரவேற்பு என, சமீப காலமாக கேரள செண்டை மேளங்களுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. தமிழக கோவில்கள், திருவிழாக்கள், வீடுகளில் நடக்கும் மங்கள நிகழ்ச்சிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்களை வரவேற்க கடந்த காலங்களில் தவில், நாதஸ்வரம் இணைந்த இசையுடன் வரவேற்பது பாரம்பரியமாக தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இக்கலைஞர்கள் முக்கிய பண்டிகை நாட்களில் இன்றும் வீடுகளுக்குச் சென்று இசைக் கருவிகளை வாசிக்கின்றனர். தமிழகத்தைப் போல் கேரள கோவில்களில் தோல் கருவியான செண்டை மேளம், காற்று வாத்தியமான கொம்பு குழல் வாத்தியங்கள் இசைக்கப்படுவது பாரம்பரியமாகும். ஆண்டுதோறும் கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் விழாவில், மாநிலம் முழுவதும் உள்ள செண்டை மேளக் கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி இசைக் கருவிகளை இசைப்பதை ரசிக்க, பல மாநில மக்கள் அங்கு கூடுவர். செண்டை மேளங்கள் அதிர்வு இசை, அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் இருக்கும். தமிழகத்தில் தவில், நாதஸ்வர கலைஞர்களைப் போல் கேரளாவில் செண்டை மேளக் கலைஞர்கள் அதிகம் உள்ளனர். செண்டை மேள அதிர்வுகளில் சுண்டி இழுக்கப்பட்டு தற்போது தமிழகத்தில் பெரும்பாலான விழாக்களுக்கு கேரள செண்டை மேளங்களை இசைக்க வைத்து வருகின்றனர். கேரளாவில் நடக்கும் விழாக்களை போல் தற்போது அதிகம் தமிழக விழாக்கள், திருமண ஊர்வலங்கள், கோவில் விழாக்கள், அரசியல் கட்சி ஊர்வலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு வரவேற்பு என செண்டை மேளங்களை பார்க்க முடிகிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரவேற்பு காரணமாக, கேரளாவை விட தமிழக நிகழ்ச்சிகளில் கேரள செண்டை மேளக் கலைஞர்கள் அதிகம் பங்கேற்று வருகின்றனர்.


இது குறித்து பாலக்காடு, பல்லஞ்சினாவைச் சேர்ந்த செண்டை கலைஞர் சுந்தரன், "நமது' நிருபரிடம் கூறியதாவது: தமிழகத்தில் சமீப காலமாக செண்டை மேளங்களுக்கு நல்ல மரியாதையும், வரவேற்பும் கிடைத்து வருகிறது. எங்களுக்கு இங்கு திருச்சி, மதுரை, கோவை, சென்னை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் ஏஜன்டுகள் உள்ளனர். அவர்கள் மூலம் தமிழக நிகழ்ச்சிகளில் நாங்கள் அதிகம் பங்கேற்கிறோம். கேரளாவில் எங்கு பார்த்தாலும் செண்டை மேளக் கலைஞர்கள் அதிகம் இருப்பதால், அங்கு இல்லாத வரவேற்பு தமிழகத்தில் எங்களுக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு சுந்தரன் கூறினார்.


செண்டை குழுவில் 10 பேருக்கு வாய்ப்பு : கேரள செண்டை மேளக் குழுவில் குறைந்தது 10 முதல் 15 கலைஞர்கள் இடம் பெறுகின்றனர். அதிகபட்சம் எத்தனை பேர் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். 10 முதல் 15 பேர் கொண்ட செண்டை குழுவில் இரண்டு பேர் கொம்பு குழல் வாத்தியங்களையும், இரண்டு பேர் தப்பட்டையும், இரண்டு பேர் சாலராவையும், மீதியுள்ளவர்கள் அனைவரும் செண்டை மேளத்தையும் இசைப்பர்.
ஒரு குழுவைச் சேர்ந்த கலைஞர்கள் 15 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரையில் வசூலிக்கப்பட்டு வருகிறது. பணத்துக்கு ஏற்ப குழுவில் உள்ள கலைஞர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க செண்டை மேளத்தின் அதிர்வும் அதிகரிக்கும்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X