செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் அரிச்சந்திரன் கல்லில் சிற்பம்| Dinamalar

தமிழ்நாடு

செஞ்சி அருகே சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் அரிச்சந்திரன் கல்லில் சிற்பம்

Added : டிச 27, 2010

செஞ்சி:செஞ்சி அருகே சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் உள்ள அரிச்சந்திரன் கல்லில் சிற்பமும், கல்வெட்டும் இருப்பது தெரியவந்துள்ளது.விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ள சமண படுக்கைகள் குறித்து தொல்லியல் ஆய்வாளர் அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டுள்ளார். இவர் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனத்தில் தமிழ் நாட்டில் சமணம் - கி.பி. 6ம் நூற்றாண்டு என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்த ஆய்விற்காக நேற்று செஞ்சி அருகே உள்ள ஊரணித்தாங்கல் மலை மீது சமண படுக்கைகளை ஆய்வு மேற்கொண்டார்.மேல்கூடலூரில் உள்ள சமணபடுக்கைகளை ஆய்வு செய்ய செல்லும் வழியில் செ.குன்னத்தூரில் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த அரிச்சந்திரன் கல் குறித்து ஆய்வு செய்தார்.இது குறித்து அவர் கூறியதாவது:வழக்கமாக கிராமப்புறங்களில் சுடுகாட்டிற்குச் செல்லும் வழியில் சற்று முன்னதாக அரிச்சந்திரன் உருவம் செதுக்கிய கல் நடப்பட்டிருக்கும்.


இங்குள்ள கல்லில் அரிச்சந்திரனின் சிற்பத்துடன் மேலும் சிற்பங்கள் காணப்படுகின்றன. இது போன்ற கூடுதல் சிற்பங்களுடன் அரிச்சந்திரன் கல் இப்பகுதியில் கிடைத்திருப்பது இது முதன் முறை.இந்த கல்லின் பின்புறம் உள்ள கல்வெட்டில் இருந்து செ.குன்னத்தூரை சேர்ந்த முனிபத்தரர் மனைவி ககாயதி இறந்த நினைவாக முனிபத்ரால் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி இந்த அரிச்சந்திரன் கல் அமைக்கப்பட்டது.இதில் உள்ள சிற்பத்தில் அரிச்சந்திரன் பரந்த நீண்ட தலைமுடியுடன், கையில் உள்ள நீண்ட எரிகோலால் எரியும் பிணத்தை கிளறுவது போல் உள்ளது.


அரிச்சந்திரன் முகத்தில் தொங்கு மீசை பெரிதாகவும், கைகளின் மேல்பகுதியில் வளையமும், கீழ் பகுதியில் காப்பும், கால் முட்டி வரை ஆடையும், கால்களில் கழலும் காணப்படுகின்றன. அகன்ற மார்பில் பூணூலும், வலிமை பொருந்திய கைகளில் தொங்கும் சலங்கையும் காணப்படுகின்றன.அரிச்சந்திரனின் உருவத்திற்கு வலது காலுக்குக் கீழாக பெண் உருவம், முட்டியிட்டும், இதன் எதிரே விறகு கட்டைகள் எரிவது போன்றும், இப்பெண்ணுக்கு கீழாக நின்றுள்ள பெண் பசு மாடு ஒன்றை கயிறு கட்டி இழுத்து வருவது போன்றும் உள்ளது.இதன் மேல் பகுதியில் வாண் வெளியில் இருப்பதை போன்று பெண் ஒருவர் காணப்படுகிறது. இது இறந்த பெண் மோட்சம் பெற்றதைக் குறிப்பதாக கருதலாம். பசுவுடன் பெண் ஒருவரை வடித்திருப்பது மற்ற இடங்களில் உள்ள அரிச்சந்திரன் கல்லில் இல்லாத ஒன்று. இறந்த பெண்ணின் நினைவாக பசுவை தானம் வழங்கியதைக் குறிப்பிடுவதாக கருதலாம். இந்த அரிச்சந்திரன் கல்லை, ஒரு இறந்த மனைவிக்காக கணவன் வைத்த நினைவு கல்லாகவும் கருதலாம்.இவ்வாறு அனந்தபுரம் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X