கற்கை நன்றே... கற்கை நன்றே! (என் பார்வை)| Dinamalar

கற்கை நன்றே... கற்கை நன்றே! (என் பார்வை)

Updated : ஜூன் 09, 2016 | Added : ஜூன் 09, 2016 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கற்கை நன்றே... கற்கை நன்றே! (என் பார்வை)

படிப்பு வாழ்க்கையின் மிக முக்கியமான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் பாடப்புத்தகங்கள் மட்டுமே கடவுள் என்றவாறு அணுகுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நாம் படித்ததை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுகளில் எழுதி வைத்து மதிப்பெண்களுக்காக மட்டுமே வாழ்க்கையை தொலைத்தவர்களைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது.பள்ளிகள் திறந்துவிட்டன. பட்டாம்பூச்சிகள் போன்ற கலர் கனவுகளோடு பறக்கத் தொடங்கிவிட்டனர் மாணவ, மாணவிகள். குழந்தைகள் மிகச்சிறந்த கல்விகற்று மாநில அளவிலே சாதனை படைக்க வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனால் அவர்களை மனதளவிலே அதற்கு தயார் செய்திருக்கிறோமா என்ற கேள்வி எழுகிறது.அதிகாலையில் பெரும்பாலும் நச்சரிப்போடுதான் அவர்களின் விடியல்கள் ஆரம்பமாகிறது என்பதே துரதிருஷ்டமான ஒன்றாகிவிடுகிறது. மதிப்பெண்கள் என்ற போட்டியோடு மட்டுமே பலநேரங்களில் இந்த மாணவ பட்டாளங்களை தயாரித்து வருகிறோம். காலையில் 5 மணிக்கு டியூசன், மறுபடியும் 6 மணிக்கு ஒன்று, திரும்பவும் மாலை வந்ததும் ஒன்று என்றபடி அலையும் பள்ளிச்சிறார்கள். அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு விடுமுறைகள் கூட கிடைக்காத நிலையில், ஏதோ ஒரு விடுமுறைநாளில் உறக்கம் கூட இப்படிப்பட்ட அர்ச்சனையோடு விடிந்தால், எதிர்காலம் பற்றிய அதிகப்படியான பயமும் கல்வியின் மீது எரிச்சலும் உருவாகிவிடுகிறது.மாணவர்களுக்கு புத்துணர்ச்சி தேவைப்படும். ஓய்வும் அவசியம். ஓய்வான நேரத்தில் அவர்களுக்கு பிடித்தமான வேலையை அழகாகச் செய்வார்கள். இத்தனை அழகான விடுமுறை நாட்களை அவர்கள் எத்தனை மகிழ்வாக கொண்டாடி இருப்பார்கள். எத்தனை மகிழ்ச்சியோடு அவர்கள் பள்ளிக்குச் செல்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்'உங்கள் குழந்தைகள் உங்களுக்காக வந்தவர்களில்லை உங்கள் வழியாக வந்தவர்கள்'என்று கலீல் ஜிப்ரான் பாடியிருப்பார். நம்முடைய குழந்தைகள் நம்முடைய ஆசைகளையும் கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஆசை. ஆனால் அதைமட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்பது பேராசைதானே.குழந்தைத்தனம் சிறுவயதில் குழந்தைத்தனங்களோடு இருப்பதே அவர்களுக்கான அடையாளம். அதனை மறந்து விட்டு குழந்தைகளை பெரியமனிதர்களாக மாற்றும் முதிர்ச்சியற்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். ஒவ்வொரு வருடமும் தேர்வுமுடிகள் பல மாணவ, மாணவிகளின் வாழ்க்கையை முடித்துக்கொள்ள காரணமாகிவிடும் அவலங்களையும் சந்தித்து வருகிறோம். பல்வேறு கனவுகளோடு அவர்களை பள்ளிக்கும் கல்லுாரிகளுக்கும் அனுப்பிவைக்கும் பெற்றோர்களின் நிலைமையும் பரிதாபமே. ஆனால் சவால் நிறைந்த வாழ்க்கையை தைரியமாக வாழ்வதற்கு வழி செய்ய, அறநெறிகளையும் மனோதிடத்தையும் கற்பிக்காத கல்வியால் எந்த மாதிரியான சமூகத்தை தந்துவிட இயலும். மனதில் மிகப்பெரிய நம்பிக்கையோடும் கனவுகளோடும் சிறகுவிரித்து பறக்க வேண்டிய பிஞ்சுகள் மனதிலே, தேவையற்ற அழுத்தத்தை கொடுத்து அவர்களின் கனவுகளைச் சிதைக்கும் வேலையினை, இன்றைய சமூகம் செய்துவருகிறது.தேர்வு வாழ்க்கை அல்ல 'தேர்வுகள் மட்டுமே வாழ்க்கையல்ல; தேர்வுகள் இல்லாமலும் வாழ்க்கையில்லை' என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிய சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு, பின்னர் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றதை மறுக்க இயலாது. படித்த காலத்தில் பாடத்தில் தோல்வி அடைந்ததாக பாரதி புலம்பியதில்லை. இப்போது பாரதி வரிகள் தாங்காத, தமிழ் நுால்கள் கிடையாது. தோல்விகளைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் கோழைகளாக வாழ்ந்திட கூடாது. வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்குத் தயாராகும்போதும் நெருக்கடிகளைச் சந்திப்பது போலவே பயந்து கொண்டே அணுகும்போதே, தேர்வு என்பது நமக்கு முன்னர் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுக்கிறது.'படிக்கவில்லை என்றால் பிச்சைதான் எடுக்கவேண்டும்' என்று வீட்டிலே கோபமாகக் கத்திவிட்டு வரும் பெற்றோர்களைப் பார்க்கும்போதே, அவர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அவர்களின் முகமும், ஒருவித மன உளைச்சலும் அவர்களை யாரென்று காட்டிக் கொடுத்து விடும். பலநேரங்களில் நம்முடைய குழந்தைகளுக்கு நாம் தரும் அதீத கட்டுப்பாடுகளே, அவர்களை எதிர்மறையாக யோசிக்க வைத்து விடுகிறது.நமது பெற்றோர்களின் அதீத அன்பே அவர்களை அவ்வாறு சொல்ல வைக்கிறது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு நிமிடமும் நமது வளர்ச்சியினை ரசிக்கும் நமது பெற்றோர்கள், உங்கள் மேல் உள்ள அதீத அன்பாலும் தாங்கள் வாழ்விலே பட்ட கஷ்டங்கள் எக்காரணம் கொண்டும் குழந்தைகள் படக்கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொள்கிறார்கள்.முன்னேற்றத்தை ரசிப்பவர்கள் மாதா, பிதா, குரு தெய்வம் என்ற வரிசையில் ஒரு உண்மை ஒளிந்திருப்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இவர்கள் யாரும் நம்மிடம் ஏதும் எதிர்பார்க்காமல் நமது முன்னேற்றத்தை ரசிப்பவர்கள். நாம் சம்பாதித்து என்ன செய்தாலும் அது அவர்களுடைய சேவைக்கும் அன்பிற்கும் ஈடாகாது. மாணவர் பருவம் என்பது வாழ்விலே மறக்க இயலாத பருவம் என்பது, ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் தெரியும். அந்தப் பருவத்தின் உன்னதங்களை நம்முடைய குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்க வேண்டும். 'தோல்விகளைத் தாங்கிக் கொள்பவனால்தான் வெற்றியையும் வெற்றியையும் தாங்க முடியும்' (சதா பாரதி)வெற்றி தோல்விகள் என்பது அவரவர் மன நிலையின் திருப்தியை பொறுத்தே அமையும். ஆனால் தோல்வியை விட கொடுமையானது நாம் தோல்வி அடைந்து விடுவோமா என்ற எண்ணமே.சிறந்த ஆசிரியர்கள் தோல்விகள் நமக்கு மிகச் சிறந்த ஆசிரியர்கள். அவற்றிடமிருந்து நாம் நிறைய அனுபவங்களை கற்றுக்கொள்ள முடியும். தொடர்ச்சியான முயற்சிகள் நம்மை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு கடின முயற்சி இருந்தால் போதுமானது.'கடமையைச் செய் பலனை எதிர்பார்க்கதே' என்கிறது பகவத் கீதை. தேர்வுகள் எழுதும் போதோ, படிக்கும்போதோ அதன் பின்னர் இதுவெல்லாம் கிடைத்துவிடும் என்ற நினைப்பிலேயே எழுத ஆரம்பிக்கும் போதோ, நமக்கு கவனச்சிதறல் உண்டாக ஆரம்பித்துவிடும்.எவ்வித நெருக்கடியின்றி மனம் இயல்பாக இருக்கும்படி படியுங்கள். மகிழ்ச்சியோடு படிக்கும்போது பாடங்கள் மிக எளிமையாக மனதிற்குள் நுழைகிறது. ஓவ்வொரு முறையும் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கத்தான் செய்யும். இன்னமும் வேகமாகவும் இயல்பாகவும் எழுத வேண்டும்.சுவாமி விவேகானந்தர் ஒரு முறை துப்பாக்கி கண்காட்சிக்கு சென்றிருந்தார். அங்கே துப்பாக்கி ஒன்றை அவரிடம் கொடுத்து ஒரு இலக்கை காட்டி 'இதை குறி தவறாமல் சுட முடியுமா?' என்று கேள்வி எழுப்பிய அடுத்த நிமிடம், குறி தவறாமல் சிறிதும் தாமதிக்காமல் அவர் சுட்டது அந்த இலக்கை உடைத்தது.எல்லோரும் சுவாமியைப் பார்த்து, 'இவ்வளவு வேகமாகவும் லாவகமாகவும் சுட்டுவிட்டீர்களே. எவ்வளவு காலங்கள் உங்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்பட்டது?' என கேட்டனர்.'எந்த பயிற்சியும் நான் இதுவரை எடுத்ததில்லை. என் மனம் எப்போதும் விழிப்பாகவே இருக்கும். என் மனம் என்ன நினைக்கிறதோ அதை செய்யும் வலிமை எனக்கு உண்டு. மனதை ஒருமைப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆகவே எனக்கு இது ஒரு பெரிய காரியமாகத் தெரியவில்லை. மனதை ஒருமுகப்படுத்துங்கள்' என்றார்.மனம் ஒரு குழந்தை போல. நாம் எவ்வாறு பழக்கப்படுத்துகிறோமோ அவ்வாறே அது இயங்கவும் செய்யும். உங்கள் மனதால் செய்ய இயலாத காரியங்கள் ஏதுமில்லை. மனதினை ஒருமுகப்படுத்துங்கள். தேவையற்ற சிந்தைனைகளை துாக்கி எறியுங்கள். நல்ல சிந்தனையும், நம்பிக்கையும் பெற்ற மனிதராக உலா வாருங்கள்.
நா.சங்கர்ராமன், பேராசிரியர்

குமாரபாளையம், 99941 71074

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gopinath - BANGALORE ,இந்தியா
14-ஜூன்-201613:39:17 IST Report Abuse
gopinath மிகவும் அருமையான கட்டுரை ..... நன்றி
Rate this:
Share this comment
Cancel
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
09-ஜூன்-201606:23:10 IST Report Abuse
Jagath Venkatesan ஆழமான ...அதே நேரத்தில் ..சிந்திக்கவேண்டிய உற்சாக ," மன" மருந்து ..10ம் ,12ம் வகுப்பில் மாநிலத்தில் முதலாக வந்தவர்கள் ..மருத்துவம் படித்து மக்களுக்கு இலவச சேவை செய்யப்போகிறேன் என்று சொன்னவர்கள் போன இடம் தெரியவில்லை ...மனப்பாடம் படித்து வாந்தி எடுப்பது போன்ற கதை தான் மாநிலத்தில் முதல் என்பது ...மாணவப்பருவம் விந்தையான திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான பருவம் ...பாடங்களை மகிழ்வோடு படிக்கும்போது பாடங்கள் மிக எளிமையாக மனதிற்குள்..நுழையும் ...அதனை கட்டாயப்படுத்தி பதிவிடவேண்டாம் ..கட்டாயமாக பதிவிடப்படுபவை ஒரு நாள் தொலைந்து போகலாம் ..படிப்புடன் கூடிய பொது அறிவு கட்டாயம் தேவை ..அது பள்ளியில் சொல்லிக்கொடுப்பதாக தெரியவில்லை ...கவன சிதறல் இல்லாமல் இருந்தாலே அதுவே வாழ்க்கையின் வெற்றி என்பதற்கு உதாரண புருஷர் விவேகானந்தர் ...கட்டுரை தெளிந்த ஓடை ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X