நட்பு என்னும் உன்னத வரம் - என்பார்வை| Dinamalar

நட்பு என்னும் உன்னத வரம் - என்பார்வை

Added : ஜூன் 09, 2016 | கருத்துகள் (1)
Advertisement
 நட்பு என்னும் உன்னத வரம் - என்பார்வைதேர்ந்தெடுக்கும் நிறம் உன் குணம் காட்டும். ஆனால் நீ தேர்ந்தெடுக்கும் நட்போ உன்னையே காட்டும். உன்னை யாரென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? உன் நண்பனை அடையாளம் காட்டு என்பார்கள். அந்தளவு நட்பு புனிதமானது... வலிமையானது... ஆத்மார்த்தமானது... மழை நீர் போல இயற்கையிலேயே சுத்தமானது. பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு பின்
வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிப்பது நண்பர்கள் மட்டும் தான். வீட்டுக்கு எல்லை உண்டு, ஊருக்கு எல்லை உண்டு,
நாட்டுக்கு எல்லை உண்டு, ஆனால் நட்புக்கு எல்லையே கிடையாது.
ஒரே பள்ளியில் படித்தவர்கள், ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள், ஒரே பேருந்து, ஒரே ரயிலில் பயணம் செய்பவர்கள், ஒரே உணவகத்தில் சாப்பிடுபவர்கள், ஒரே டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருப்பவர்கள், ஒரே அறையில் தங்குபவர்கள் என பல்வேறு நிலைகளில் நட்பு உருவாகலாம். ''கண்கள் அழுதால் துடைப்பது கைத்துண்டு, இருதயம் அழுதால் துடைப்பது நட்பு,'' அந்தளவு நட்பு உயர்வானது. போற்றப்படக்கூடியது.
நட்பிலே மூன்று வகை

கஸாலி என்ற மாமேதை நட்பினை மூன்று வகையாக பிரிக்கிறார். முதலாவது வகை நட்பு உணவை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவை. இரண்டாவது வகை நட்பு மருந்தினை போன்றது. இந்த வகை நட்பு எப்போதாவது தேவை. மூன்றாவது வகை நட்பு நோயை போன்றது. இந்த வகை நட்பு எப்போதும் தேவையில்லை என்பார். சாக்ரடீஸ் ஒரு வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். அந்த வழியாக வந்த ஒருவர், 'ஐயா! நீங்கள் ஏன் மிகச்சிறிய வீட்டை கட்டி கொண்டிருக்கிறீர்கள், இது உங்களுக்குப் போதுமா?' என்று கேட்டார். உடனே தத்துவ அறிஞர் சாக்ரடீஸ், இந்த சிறிய வீட்டை நிரப்புவதற்கு உண்மையான நண்பர்கள் கிடைப்பார்களா எனத் தெரியவில்லை என்றாராம்.
''நீ உலகின் அதிபதியாய் இருப்பினும் ஒரு நண்பன் இல்லாவிடில் ஏழை தான்,'' என யங் என்ற அறிஞர் கூறுகிறார்.
வித்தியாச விளக்கம்
ஒரு கூட்டத்திலே பேசும் போது கூட்டத்தை பார்த்து, ''நட்புக்கும், காதலுக்கும் என்ன வித்தியாசம்?,'' என கேட்டேன். ஒருவர் வேகமாக எழுந்து, ''நட்பு உயிரை கொடுக்கும், காதல் உயிரை எடுக்கும்,'' என்றார். ஒரு கல்லுாரி விழாவிலேயே பேசும்போது, இதே கேள்வியை மாணவர்களிடம் கேட்டேன். ஒரு மாணவன் வேகமாக எழுந்து, ''நட்பு என்பது நோட்டு போன்றது யார் வேண்டுமானாலும் கையெழுத்து போடலாம். ஆனால் காதல் என்பது செக்புக் போன்றது. அக்கவுண்ட் உள்ளவங்க மட்டும் தான் கையெழுத்து போட முடியும்,'' என்றார். இந்த வித்தியாசமான பதிலை கேட்டு கூட்டம் கலகலப்பானது.
பள்ளியிலோ அல்லது கல்லுாரியிலோ, மதிய உணவு இடைவெளியில் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்போது அவரவர் வீட்டு உணவுகள் அடுத்தவர் தட்டுக்கு பரிமாறப்படும். அங்கே பரிமாறப்படுவது உணவுகள் மட்டுமல்ல, இருதயங்களும் தான். பொதுவாக வேறுபாடுகளை களையும் விஸ்வரூப விருட்சம் தான் நட்பு.
நட்பு என்னும் நல்ல உறவு
பொதுவாக மனித உறவுகளை நான்காகப் பிரிப்பார்கள். முதல் உறவு 'பெற்றோர் உறவு'. இரண்டாவது உறவு 'உடன் பிறந்தவர்கள்'. மூன்றாவது உறவு 'கட்டிய மனைவி'. நான்காவது உறவு பெற்ற 'பிள்ளைகள்'. இவை அனைத்தும் பிறப்பால் வருவது. இளமை காலத்தில் சிலருக்கு வருவது காதல் எனும் உறவு. இது திருமணம் வரை நீடிக்கலாம் அல்லது கானல் நீர் போல் காணாமல் போகலாம். ஆனால் குழந்தைப் பருவத்தில் நினைவு தெரியும் நாட்களில் தொடங்கி நினைவு விடை பெறும் காலம் வரை நீடித்து நிலைத்து நிற்பது நட்பு என்னும் உறவு மட்டும் தான். நண்பர்கள் மாறலாம். ஆனால் நட்பு
மாறாதது.''பறவைக்கு கூடு
சிலந்திக்கு வலை
மாட்டுக்குத் தொழுவம்
மனிதனுக்கு நட்பு''
மனிதன் தங்குவது இருதயம் கலந்த ஆழமான நட்பில் மட்டும் தான். ''நட்பு என்பது மின் விசிறியல்ல. இயற்கை காற்று, அதற்கு மின் தடையே வராது''.
நட்பும் ஆறுதலும் எப்படி இரவு பகலை பிரிக்க முடியாதோ; இன்பம் துன்பத்தைப் பிரிக்க முடியாதோ; அதுபோல மனிதனிடமிருந்து பிரச்னைகளை பிரிக்க முடியாது. ''பிரச்னைகள் இல்லாதவன் வாழத் தெரியாதவன்,'' என அன்னிபெசன்ட் அம்மையார் கூறுவார். என்ன தான் நமக்கு பிரச்னை என்றாலும், அதை மனதுக்குள்ளே பூட்டி வைத்தால், அது நம்மை நோய் பாதிப்புக்கும் கொண்டு போய் விட்டு விடும். ஏனெனில் தாய், தந்தையிடம் பேச அளவு உண்டு. உறவினர்களிடம் பேச அளவு உண்டு. காதலியிடம் பேச அளவு உண்டு. ஆனால் இருதயத்தின் ஆழத்தில் உள்ள உண்மைகளை ஒளிக்காமல் ஒருவன் பேசுவது தன் நண்பனிடம் மட்டும் தான்.
நண்பனிடம் நம் பிரச்னைகளை சொல்லும்போது, அவன் நமக்குத்தரும் இனிமையான ஆறுதல் மூலம் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது. துன்பம் பாதியாக குறைகிறது. ''நுாறு மருத்துவர்கள் செய்ய முடியாத சிகிச்சையை, ஒரு நண்பன் தரும் 'ஆறுதல்' செய்யும்'' என்றார் கவிஞர் வைரமுத்து.
பழைய திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்...''கொண்டு வந்தால் தந்தைகொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்சீர் கொண்டு வந்தால் சகோதரிகொலையும் செய்வாள் பத்தினிஉயிர் காப்பான் தோழன்''ஆபத்து என்று வந்து விட்டால் தன் உயிரை கொடுத்தாவது நண்பன் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று போராடுவது நட்பு. அதனால் தான் நட்பை ஒரு சக்தி வாய்ந்த மருந்து என்றார்கள்.
நட்பும் திருக்குறளும் திருக்குறளில் நட்பின் மேன்மையை திருவள்ளுவரும், நட்பு, நட்பு ஆராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களில் அருமையாக விளக்குகிறார். நட்பு என்பது முகம் பார்த்து பழகுவதல்ல. அது இருதயம் கலந்து பழகுவது. உதட்டிலிருந்து பேசும் பேச்சுக்களால் நீடிப்பதல்ல, உள்ளத்தில் இருந்து வரும் ஆழமான வார்த்தைகளால் நீடிப்பது.
ஒரு புதுக்கவிதை சொன்னது...புன்னகை என்ற முகவரிஉங்களிடம் இருந்தால்நண்பர்கள் என்ற கடிதம்வந்து கொண்டே இருக்கும் என்று.இன்னுமொரு குறளில்...
''உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கேஇடுக்கண் களைவதாம் நட்பு''இடுப்பில் கட்டியிருந்த ஆடையானது நழுவும் போது எப்படி இரண்டு கைகளும் உடனடியாக ஆடையை இறுகப் பற்றுகின்றனவோ, அதுபோல நண்பனுக்கு துன்பம் வந்தால் தொலைவில் நின்று வேடிக்கை பார்க்காமல் உடனே உதவக்கூடியது நட்பு.
நல்ல நட்பு வளர்பிறை போன்றது. அது நாளுக்கு நாள் வளரும். தீயநட்பு தேய்பிறை போன்றது. அது சிறிது சிறிதாக தேய்ந்து பின்னர் மறைந்து போகும். எனவே நல்ல நட்பை நேசிப்போம்! நல்ல நட்பை வாசிப்போம்!! நல்ல நட்பையே சுவாசிப்போம்!!!
- ச.திருநாவுக்கரசு, பேச்சாளர், மதுரை. 98659 96189வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Andal Priyadarshini - chennai,இந்தியா
10-ஜூன்-201610:29:50 IST Report Abuse
Andal Priyadarshini ரொம்ப superb. வேறு எந்த வார்த்தையும் சொல்ல வரலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X