வாஷிங்டன் : அமெரிக்காவில், இரவு விடுதியில், துப்பாக்கியுடன் புகுந்த நபர், கண்மூடித்தனமாக சுட்டதில், 50 பேர் பலியாயினர்; 53க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்; இது, பயங்கரவாத தாக்குதலா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
அமெரிக்காவில், பொது இடங்களில், எந்த காரணமும் இன்றி, துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. ஒரலாண்டோ பகுதியில், வெள்ளியன்று இரவு, இசை நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பாப் பாடகி, கிறிஸ்டினா கிரிம்மி, 22, சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்து, 24 மணி நேரத்திற்குள், அதே பகுதியில், மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. ஒரலாண்டோவில், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான இரவு விடுதி செயல்படுகிறது. அங்கு, நேற்று அதிகாலை, வழக்கமான கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருந்தன.அப்போது, இரவு விடுதிக்குள் புகுந்த மர்ம நபர், தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்தவர்களை நோக்கி, சரமாரியாக சுட்டான். அப்போது, அந்த விடுதியில், 300க்கும் மேற்பட்டோர் இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைக்க, அவன் முயற்சித்தான்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அவனுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால் அவன், துப்பாக்கியை கீழே போடாமல், மீண்டும் மீண்டும் சுட்டான். இதையடுத்து, அந்த இடம், போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசரகால ஏற்பாடுகள் விரைவாகச் செய்யப்பட்டன. கட்டடத்தை தகர்த்து உள்ளே சென்ற போலீசார், அவன் மீது தாக்குதல் நடத்தினர். சிறிது நேரம், இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இதில், அந்த நபர், சுட்டுக் கொல்லப்பட்டான். மர்ம நபர் நபர் நடத்திய தாக்குதலில், 50 பேர் வரை உயிரிழந்ததாக, போலீசார் தெரிவித்தனர். 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், 'இரவு விடுதியில் இருந்தவர்கள், அந்த மர்ம நபர் சுட்டதால் இறந்தனரா அல்லது போலீசாருக்கும், அவனுக்கும் நடந்த மோதலில் இறந்தனரா என்ற தகவல், உறுதியாக தெரியவில்லை' என்றனர்.
பயங்கரவாதியா?
சம்பவம் நடந்தபோது, துப்பாக்கி மட்டுமின்றி, வெடிகுண்டு உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருப்பதாக, அந்த மர்ம நபர் கூறினான். இதனால், அவன் பயங்கரவாதியாக இருக்கும் என்ற சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது: துப்பாக்கியால் சுட்டவனின் பெயர், ஒமர் மேட்டின், 29, என தெரிய வந்துள்ளது. புளோரிடா மாகாணத்தில், போர்ட் செயின்ட் லுாயிஸ் பகுதியில் வசித்து வந்துள்ளான். ஆப்கானிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த அவனுக்கு, ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என, கருதப்படுகிறது. எனினும், இது பயங்கரவாத தாக்குதலா என விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஒபாமா ஆலோசனை:
துப்பாக்கிச்சூடு சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அதிபர் ஒபாமா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தயாராகி வரும், ஹிலாரியும், டொனால்டு டிரம்பும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிக்கு கட்டுப்பாடு:
அமெரிக்காவில் 2015ம் ஆண்டில் மட்டும் பொது இடங்களில் 372 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,870 பேர் காயமடைந்துள்ளனர். இது போன்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து, பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள, கட்டுப்பாடு விதிக்க வகை செய்யும் சட்டத்தை, அதிபர் ஒபாமா கொண்டு வர முயன்றார். ஆனால் துப்பாக்கி தயாரிப்பு நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அந்நாட்டு பார்லிமென்ட் இந்த சட்டத்தை முடக்கி வைத்துள்ளது.