புதுடில்லி: நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தல் மத்திய ஆளும் பா.ஜ., அரசுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது. காங்கிரசை விட கூடுதல் உறுப்பினர்கள் ஆளும் கட்சிக்கு கிடைத்துள்ளனர். இருப்பினும் மத்திய அரசுக்கு தேவையான ஆதரவு இன்னும் கிடைக்கவில்லை.
மாநில கட்சிகள் சார்பில் 89 பேர் இருந்தனர். நடந்த முடிந்த தேர்தலுக்கு பிறகு இதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. சமாஜ்வாடி கட்சி கூடுதலாக 4 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் ராஜ்யசபாவில் அக்கட்சி உறுப்பினர்களாக 19 பேர் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு சேர்த்து 12 உறுப்பினர்கள் உள்ளனர். திரிணமுல் காங்கிரஸ், அ.தி.மு.க.,வுக்கு தலா 12 உறுப்பினர்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 உறுப்பினர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 உறுப்பினர்களும், பிஜூ ஜனதா தள கட்சிக்கு 7 உறுப்பினர்களும், தி.மு.க.,வுக்கு 5 உறுப்பினர்களும் உள்ளனர். மொத்தமுள்ள 245 இடங்களில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 5 உறுப்பினர்கள் அதிகரித்து 74 உறுப்பினர்களை கொண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியின் உறுப்பினர்கள் பலம் 3 குறைந்து 71 ஆக உள்ளது.
கடந்த ஜூன் 3ம் தேதி 30 உறுப்பினர்கள் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்கள் 11 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பா.ஜ., சார்பில் 7 பேரும், தெலுங்கு தேசம் சார்பில் 2 பேரும், சிவசேனா மற்றும் சிரோன்மணி அகாலிதளம் சார்பில் தலா ஒரு உறுப்பினரும் தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் கூட்டணியில் 5 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். காங்கிரஸ் சார்பில் 4 பேரும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஒருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஐக்கிய ஜனதா தளம் -சார்பில் இரண்டு பேர், அதிமுக சார்பில் 4 பேர், ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் இரண்டு பேர் திமுக சார்பில் 2 பேர், பீஜூ ஜனதா தளம் சார்பில் 3 பேர் போட்டியின்றி தேர்வானார்கள்.
நேற்று நடந்த 27 உறுப்பினர்களுக்கான தேர்தலில் பா.ஜ., சார்பில் 12 பேர் வெற்றி பெற்றனர். அரியானாவில் இரண்டு பேரும், உ.பி.,யில் ஒருவரும், ராஜஸ்தானில் நான்கு பேரும், மத்திய பிரதேசத்தில் இரண்டு பேரும், ஜார்க்கண்டில் இரண்டு பேரும், கர்நாடகாவில் ஒருவரும் தேர்வானார்கள். காங்கிரஸ் சார்பில் 6 பேர் வெற்றி பெற்றனர். உ.பி., ம.பி., மற்றும் உத்தர்கண்டில் தலா ஒருவரும், கர்நாடகாவில் 3 பேரும் வெற்றி பெற்றனர்.
உ.பி.,மாநிலத்தில் காலியான 11 இடங்களுக்கு நடந்த தேர்தலில், சமாஜ்வாடி 7 உறுப்பினர்களையும், பகுஜன்சமாஜ் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு உறுப்பினரையும் பெற்றது. இன்னும் ராஜ்ய சபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு, பல மாநில கட்சிகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இன்னும் உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE