மேயரு கூட்டம்... ஆபீசருக ஓட்டம்...

Added : ஜூன் 14, 2016
Advertisement
மேயரு கூட்டம்... ஆபீசருக ஓட்டம்...

'அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே! விழியம் பொழுக மெத்திய மாதரும் வீதிமட்டே விம்மி விம்மி இரு கைத்தலை மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே! பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே...'என, இதழோரம் முணுமுணுத்தவாறு, கோவை அரசு மருத்துவமனை வளாக சவக்கிடங்கு வாசலில், சோகமே உருவாக நின்றிருந்தாள் சித்ரா.
அருகில் இருந்த மித்ரா கேட்டாள்....
''அக்கா, இப்ப நீ முணுமுணுத்தியே அது என்ன பாட்டு?''
''அதுவா மித்து, பட்டினத்தார் என்ற சித்தர் பாடினது. வீடுவரை உறவு... வீதி வரை மனைவி... காடுவரை பிள்ளை... கடைசி வரை யாரோ?'' ன்னு, நம்ம கவியரசு கண்ணதாசன் சினிமா பாட்ட எழுதினாரே. அது, இந்த சித்தர் பாடலை வச்சுத்தாண்டி...,''
''ஆமா, எதுக்கு அத இப்ப பாடின?'' என்றாள் மித்ரா.
''கோடி, கோடியா சம்பாதிக்குற மனுஷன், செத்த பின்னாடி சுடுகாடு போகும்போது, கூட ஒண்ணத்தையும் எடுத்துட்டு போக முடியாது. பெத்த, பொறப்புனு யாரையும் கூட்டிட்டும் போக முடியாது. ரெண்டே ரெண்டுதான் கூட வரும். ஒண்ணு நாம செஞ்ச புண்ணியம்; இன்னொண்ணு, நாம செஞ்ச பாவம்னு அந்த பாட்டு சொல்லுது,'' என்றாள் சித்ரா.
''நீ ஒண்ணு, பாவமாவது... புண்ணியமாவது. இப்பெல்லாம் யாரு அத நெனைக்குறாங்க. அடுத்தவங்கள அடிச்சு எப்படி உலையில போடலாம்... கெடச்சவரைக்கும் எப்படி சுருட்டலாம்னுதானே பல பேரு நெனைக்குறாங்க. பணத்தோட, பாவத்தையும் குடும்பத்துக்கும் சேர்த்தே சம்பாதிக்கிறாங்க...,'' என, வேதனையைக் கொட்டிய மித்ரா, இடுப்பில் செருகியிருந்த கர்ச்சீப்பை எடுத்து, முகத்தில் வியர்வையை துடைத்தாள்.
''என்னடி, வெறுத்துப்போயி பேசுற...,'' என்ற சித்ராவின் விசாரிப்புக்கு பதிலளித்த மித்து...
'பின்ன என்னக்கா. விஷயத்த சொல்றேன் கேளு. நம்ம கார்ப்பரேஷன் லிமிட்ல, சிட்டிய ஒட்டி இருக்குது அந்த போலீஸ் ஸ்டேஷன். மருதமலை முருகனோட பேரு வச்ச 'இன்ஸ்' போடுற ஆட்டத்தப்பார்த்து, அங்கிருக்கிற ஜனங்க மிரண்டு போயி கெடக்குறாங்களாம். செங்கல் லாரி, மணல் லாரின்னா மாசம் அஞ்சாயிரம், டாஸ்மாக் 'பார்'னா மாசம் 5,000 ம்னு, ஒவ்வொண்ணுக்கும் ஒரு 'ரேட்' இருக்கு,'' என, மித்ரா முடிப்பதற்குள்...
''இதெல்லாம் போலீஸ்ல சர்வ சாதாரணம்... இந்தக்காலத்துல இதெ போயி பெருசா பேசற?'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.
''அக்கா... அதுவல்ல மேட்டர். நான் சொல்றத முழுசா கேளு. அந்த ஸ்டேஷன்ல கட்டப்பஞ்சாயத்தும் நடந்திட்டிருக்கு. இதுக்கு ஒத்தாசையா, தேனியில இருந்து ஒரு ஆசாமிய கூட்டிட்டு வந்து வச்சுருக்காரு இன்ஸ். அந்த ஆசாமிதான், இவரோட 'கலெக்ஷன் கருமாந்திர' வேலையயெல்லாம் கரெக்டா பண்ணிட்டு இருக்காரு...,''
''இன்ஸ்கிட்ட யாராச்சும், ஏதாச்சும் எதிர்த்து கேள்வி கேட்டா... 'நான் யாருன்னு தெரியுமா... ஓ.பி.எஸ்., சொந்தக்காரனாக்கும். எஸ்.பி., மேடமே என்ன எதையும் கேட்க முடியாதுன்னு' ன்னு, சொல்லி மெரட்டு மெரட்டுனு மெரட்டுறாராம். இது, ஓ.பி.எஸ்.,சுக்கு தெரியுமான்னு தெரியல...,''
''இவர மாதிரி ஆளுங்க பண்ற தப்பெல்லாம் கண்டுபிடிச்சு, மேலிடத்துக்கு அப்பப்ப 'ரிப்போர்ட்' அனுப்புற, உளவுப் போலீஸ் அதிகாரிங்க ஏன் மவுனமா இருக்காங்கன்னு டவுட்டா இருக்கு,'' என்றாள் மித்ரா.
குறுக்கிட்ட சித்ரா, சிட்டி போலீஸ் பக்கம் கவனத்தை திருப்பினாள்.
''கோவை சிட்டியில, கடந்த வாரத்துல மட்டும் நான்கைந்து வீடுகள்ல துணிச்சலா பூட்ட உடைச்சு, 200 பவுனுக்கு மேல தங்க நகைகள கொள்ளை அடிச்சிருக்காங்க. 'ரிட்டையர்' ஆன டி.எஸ்.பி., வீடும் தப்பல...,'' என்றாள்.
இடைமறித்த மித்ரா, ''சிட்டி போலீஸ் ஒண்ணும் அசைஞ்சு கொடுத்தா மாதிரி தெரியலையே. சிட்டி கிரைம் 'டிசி'யா இருந்த ரம்யாபாரதி, ரூரல் எஸ்.பி.,யா டிரான்ஸ்பராகி போன பின்னாடி, புது ஆபீசர இன்னும் நியமிக்கலையே...,'' என்றாள்.
''நியமிக்காட்டி என்ன, கமிஷனர் அமல்ராஜ் கண்டிப்பானவர்; அதிரடியானவர்னு சொல்றாங்க. அவர் இருந்தும் இந்த நிலைமையா...,'' என, வேதனையை வெளிப்படுத்தினாள், சித்ரா.
''அதுவும் சரிதான். இதுக்கு முன்னால இவரு இருந்த இடங்கள்ல எல்லாம் அதிரடியா செயல்பட்டாரு; கிரிமினல்கள கன்ட்ரோல் பண்ணினார்ன்னு சொன்னாங்க. இங்க ஒண்ணும் காணோமே...,'' என்ற, மித்ரா, கார்ப்பரேஷன் விஷயத்துக்குத் தாவினாள்.
'கார்ப்பரேஷன் மேயரு ராஜ்குமாரு ரொம்பவே அப்செட்டா இருக்காராம். கடந்த வாரம் இவரு மண்டலம் வாரியா, ஆய்வுக்கூட்டம் நடத்துனாரு. கமிஷனர், டெபுடி கமிஷனர் யாருமே அதுல கலந்துக்கல. கார்ப்பரேஷன் இன்ஜினியர் கூட கலந்துக்கல. ஏதோ மேலிட உத்தரவாம். உயரதிகாரிங்க யாருமே கலந்துக்காத நெலைமையில, வெறுத்துப்போய் பேருக்கு ஆய்வுக்கூட்டத்த நடத்திட்டு, ஆபீசுக்கு திரும்பிட்டாராம்,'' என்றாள்.
இருவரும் பேசிக்கொண்டிருந்த போது, இவர்களை கடந்து சென்ற டிப்டாப் நபர் ஒருவர், மொபைல் போனில் யாருடனோ பேசிக்
கொண்டிருந்தார்...
'ஆமாம், நான் வணிகவரித்துறை ஆபீசர்தான் பேசுறேன். நீங்க சொல்ற ஆபீசர்க எல்லாம் இப்ப இங்க இல்ல... வணிகவரித்துறையில அமலாக்கம், டெரிட்டரின்னு ரெண்டு பிரிவு இருக்கு. இதுக்கு முன்னாடி ஜாயின்ட் கமிஷனர்களா மரியம் சாதிக், அஜய் யாதவ்லாம் இருந்தப்ப கோவை, திருப்பூர் வணிக நிறுவனங்கள்ல அதிரடியா ரெய்டெல்லாம் நடத்துனாங்க. பல கோடி ரூபா அபராதமும் விதிச்சாங்க...,''
''இப்ப அவங்க ரெண்டு பேரையுமே மாத்திட்டாங்க. புதுசா வந்துருக்கிற ஆபீசர்க ரொம்ப நல்லவங்க. ரெய்டு, கிய்டுனு எங்கேயும் போறதில்லை. எதுவா இருந்தாலும் நீங்க நேர்ல வாங்க, பார்த்துக்கலாம்...,'' என்றபடி இணைப்பைத் துண்டித்துவிட்டு, திரும்பி நடந்தார்.
''கேட்டியா மித்து... நாடு உருப்பட்டாப்புல தான்...,'' என்ற சித்ரா, ''இவங்கள மாதிரி ஆட்கள உள்ளே தள்ளுற, லஞ்ச ஒழிப்புத்துறைக்காரங்க என்னதான் பண்றாங்களாம். அந்த பிரிவையே ஒழிச்சிட்டாங்களா என்ன? ரொம்ப நாளாவே கோவையில ரெய்டும் இல்லே; அரஸ்ட்டும் இல்லையே...,'' என்றாள்.
''அவங்கள பத்தின முக்கியமான ஒரு மேட்டர அடுத்த வாரம் சொல்றேன். இப்ப வேணாம்...,'' என்ற மித்ரா, ''நம்ம பள்ளிக்கல்வித்துறை சி.இ.ஓ., இணை இயக்குனர் ப்ரமோஷன் லிஸ்ட்ல முதல்ல இருக்காராமே...,'' என்றாள்.
''அவரு கோவைக்கு வந்து ரெண்டு வருஷம் ஓடிப்போயிருச்சு. எந்த ஒரு விஷயத்தையும் சீரியசாவே கண்டுக்க மாட்டாராம். எத கேட்டாலும் எனக்குத் தெரியாதுன்னு மட்டும் தெளிவா சொல்றாராம். இதனால டீச்சர்ஸ் எல்லாரும் கடும் அதிருப்தியில இருக்காங்க...,'' என்ற சித்ரா மேலும் தொடர்ந்தாள்.
''அவரு நல்ல மனுஷன்தான். ஆனா, நிர்வாகத் திறமை பத்தாதுன்னு சொல்றாங்க. எங்க நாம ஏதாவது பண்ணப்போய் ப்ரமோஷன் பாதிக்குமோங்கற பயத்துல எதையுமே பண்றதில்லையாம். தப்பும் பண்ண மாட்டாரு; நல்லதும் பண்ணமாட்டாரு. இவரெல்லாம் இணை இயக்குனராகி, சபிதா மேடத்த, எப்படி சமாளிக்கப் போறாரோன்னு, அவரு ஆபீசுக்குள்ளேயே பேசிக்கிறாங்க...,'' என்றாள்.
இருவரும் உரையாடிக்கொண்டிருந்தபோது, ஆஸ்பத்திரி ஊழியர் ஓடிவந்து, 'மேடம் வாங்க...' ன்னு அழைக்க, பேச்சை முடித்துக்கொண்டு வேக வேகமாய் உடன் நடந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X