இருவர் அணி; பிடிச்சது 'சனி'

Added : ஜூன் 14, 2016
Share
Advertisement
இருவர் அணி; பிடிச்சது 'சனி'

நிழல் தந்த, பல நுாறு மரங்களைத் தின்று தினவெடுத்த மிதப்பில் அகலக்கால் விரித்திருந்த அவிநாசி சாலையில் அனல் காற்று வீச, கானல் நீரைக் கிழித்து ஸ்கூட்டரில் பறந்துகொண்டிருந்தாள் சித்ரா.
தலையில் ஹெல்மெட். விரல் முதல் முழங்கை வரை இறுகப்பற்றிய வெண்ணிற கிளவுஸ். தோளிலிருந்த துப்பட்டா, கழுத்தைச் சுற்றி கருநாகமென காற்றிலாடிக் கொண்டிருந்தது.
ஹோப் காலேஜ் சிக்னலை கடக்குமுன், சிணுங்கியது சித்ராவின் மொபைல். 'ஹலோ... இதோ பக்கத்துல வந்துட்டேன்...' என்றவாறு, அழைப்பை 'கட்' செய்து பயணத்தைத் தொடர்ந்தாள்.
வழியில், பளிச்சென பச்சை நிற பட்டுச்சேலை கெட்டப்பில் நின்றிருந்த மித்ரா, கையசைத்து சைகை காண்பிக்க, சட்டனெ நிறுத்தி 'பிக்கப்' செய்துகொண்டாள். 'என்னக்கா... 9 மணிக்கு வர்றேன்னு சொல்லிட்டு, இப்படி லேட்டா வர்ற? கல்யாணமே முடிஞ்சு, ஜோடிக மறுவீடு போயிடுவாங்க போல...' என, மித்ரா கூற...
'இல்ல மித்து, வழியில சின்ன வேல. கஸ்டம்ஸ் ஆபீஸ் வரைக்கும் போக வேண்டியதா போயிடுச்சு...' என்றாள் சித்ரா.
'அப்படி என்னக்கா அங்க அவசர ஜோலி. கோல்டு, கீல்டு கிலோ கணக்குல பிடிச்சுருக்காங்களா என்ன?' என்றாள் மித்ரா.
'இல்ல மித்து, அங்க வேல செய்யற ஆபீசர், எங்க வீட்டுப்பக்கத்துல தான் குடியிருக்கார். ஏதோ அவசர வேலையா அவரு காலங்காத்தாலயே ஆபீசுக்கு கிளம்பி போயிட்டாரு. அதனால, அவங்க வீட்டுக்காரம்மாவ நான் தான் ஸ்கூட்டர்ல அழைச்சுட்டுபோய், கஸ்டம்ஸ் ஆபீஸ் வரைக்கும் விட்டுட்டு வந்தேன்; எங்கோ, விசேஷத்துக்கு போகணுமாம்...'
'ரொம்ப நாளா, அந்த கஸ்டம்ஸ் ஆபீஸ்ல ஒரு பிரச்னை ஓடிட்டுட்டு இருந்தது மித்து. அந்த ஆபீஸ்ல வேல பார்த்த ரெண்டு பேரு, கள்ளக்கடத்தல்காரங்ளோட கமுக்கமா கூட்டணி போட்டுட்டு, சட்ட விரோத சம்பாத்தியத்துல சக்கப்போடு போட்டுட்டு இருந்தாங்களாம்...'
'அதனால, கோவை ஏர்ப்போர்ட்ல, பல மாசமா கடத்தல் தங்கம், போதைப் பொருளுன்னு எதுவுமே பிடிபடல. கடத்தல்காரங்க, கம்பீரமா வந்துட்டு போயிட்டு இருந்தாங்க...' என, சித்ரா முடிப்பதற்குள்...
'அட அநியாயமே! என்னக்கா இது? அரசாங்கத்துல சம்பளம் வாங்கிட்டு, சட்டவிரோத கும்பலோட கைகோர்த்துட்டாங்களா?' என, ஆதங்கப்பட்டாள் மித்ரா.
'சொல்றத முழுசா கேளு மித்து. ரொம்ப நாளா, இது, ஆபீசுக்குள்ளாற புகைஞ்சுட்டே இருந்துச்சு. இது எப்படியோ மோப்பம் பிடிச்ச உயதிகாரிங்க, கடத்தல் கூட்டணி அதிகாரிகள கோவை ஆபீஸ்ல இருந்து கழற்றி, வேறு எங்கோ துாக்கியடிச்சுட்டாங்க. ஒரு வழியா, இருவர் அணிக்கு, 'சனி' பிடிச்சுருச்சு...' என்றாள் சித்ரா.
'இனிமேலாச்சும், நம் ஏர்ப்போட்ல ஏதாச்சும் சிக்குதா பார்ப்போம்க்கா...' என்ற மித்ரா, 'அக்கா...அக்கா... இன்னொரு விஷயம் கேள்விப்பட்டியா?' என, பீடிகை போட்டவாறு பேசத்துவங்கினாள்.
'அக்கா, கோவை வடக்குத் தொகுதியில டிஎம்கே சார்புல போட்டியிட்ட மீனா லோகுவைத் தெரியுமா? அவங்க, தேர்தல்ல தோத்துப்போன பின்னாடி, சமீபத்துல சென்னைக்குப் போயிருந்தாங்களாம். அங்க, கட்சித் தலைவர் கருணாநிதிய நேர்ல பார்க்கவும் சான்ஸ் கெடைச்சுதாம்...'
'அப்ப, 'அய்யா, என் தொகுதியில, கூடஇருந்த சொந்தகட்சிக்காரங்களே குழியப்பறிச்சுட்டாங்கய்யா...' ன்னு சொல்லி, 'விசுக்விசுக்குன்னு' விம்மி விம்மி அழுதுட்டாங்களாம்.
'எதுக்கு அழுற. உனக்கு எதிர்காலம் இருக்கும் போ...' என, ஆறுதல் சொல்லி அனுப்பி வச்சாராம் தலைவரு! தேர்தல் தோல்வியால துவண்டுபோன தன்னை, தலைவரோட வார்த்தைதான் துாக்கி நிறுத்துச்சுன்னு சொல்லி, அந்தம்மா புது தெம்போட கோயம்புத்துாருக்கு கெளம்பியிருக்காங்க' என, முடித்தாள் மித்ரா.
பேச்சின் சுவாரஸ்யத்தில், கல்யாண மண்டபத்தை கடந்து சென்றுவிட்டதை அறிந்து உஷாரடைந்த சித்ரா, திடீரென வண்டியை திருப்பி, ரோட்டின் வலது பக்க மண்டப வாசலுக்குள் நுழைந்து நிறுத்தினாள்.
வண்டியிலிருந்து துள்ளிக் குதித்திறங்கிய மித்ரா, கலைந்திருந்த உடையை சரி செய்ததாள். இக்னிஷியன் கீயை ஆப் செய்த சித்ரா, ஹெல்மெட், கையுறை, ஸ்பெக்ஸ் என, ஒவ்வொன்றையும் கழற்றி, ஸ்கூட்டரின் சீட்டடி பெட்டிக்குள் வைத்து பூட்டியபின் இருவரும் நடந்தனர்.
அரங்கின் நுழைவாயிலில் நின்றிருந்த சிறுவர்கள் பன்னீர் தெளித்து வரவேற்க, சந்தனம், குங்குமத்தை நெற்றியிலிட்டபடி, மணமேடைக்கு விரைந்த இருவரும், மணமக்களை வாழ்த்தியபின் சீட்டுப்
பிடித்து அமர்ந்தனர்.
அருகில் காக்கி யூனிபார்மில் அமர்ந்திருந்த, டிஎஸ்பி ஒருவர், மனைவியுடன் காரசாரமாக எதையோ, சற்று கடுப்பாக கதைத்துக்கொண்டிருந்தாள்.
'இங்க பாரு... நான் மட்டுமல்ல என்னைப்போல பல பேரும் இப்படித்தான் மாட்டிகிட்டோம். டிஎம்கே வரும்னு நம்பித்தான், தேர்தல் நேரத்துல அப்படி, இப்படின்னு அவங்களுக்கு பல உதவிகள செஞ்சோம். ரிசல்ட் திடீர்னு மாறி, ஏடிஎம்கே வந்துடுச்சு. 'இன்டலிஜென்ஸ்'காரங்களோட ரிப்போர்ட்ட வாங்கிட்டு, எங்காச்சும் துாக்கியடிக்கப் பார்க்குறானுங்க. நான் என்னடி பண்ணுவேன்...' என, அழாத குறையாக புலம்பிக் கொண்டிருந்தார்.
அருகிலிருந்த மனைவியோ விடவில்லை. 'உனக்கெதுக்குய்யா இந்த வேல. காக்கிச்சட்டையப் போட்டு, அதுக்குமேலேயும் எதுக்கு கரைவேட்டிய கட்டிக்குற. அப்புறமா வந்து, இப்படி நடந்துடுச்சேன்னு செவுத்துல முட்டிக்குற? நீ பாட்டுக்கு டிரான்ஸ்பர் காகித்த வாங்கிட்டு போயிடுவ. நானும், கொழந்தைங்களும் என்ன பண்றதாம்...?' னு வெளுக்கத்துவங்கினார்.
'வாடி, வா... இதுக்கு மேல இங்கிருந்தா. நடக்கப்போற சம்பவத்துக்கு, நாம விட்னஸ் ஆகிடுவோம்னு' கிசுகிசுத்த சித்ரா, மித்ராவை இழுத்துக்கொண்டு டைனிங் ஹாலுக்குள் விரைந்தாள். இருவருக்கும் சர்வர்கள் இலைபோட்டு பரிமாற, ஸ்வீட்டை ருசித்தவாறு புசிக்கத்துவங்கினர். 'சாப்பிடும் போது பேசக்கூடாது' என, ஏற்கனவே மித்ராவிடம் சொல்லியிருக்கிறாள் சித்ரா!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X