கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல், எலும்பு வங்கி: தென் மாநிலங்களுக்கான பிரத்யேக மையம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல், எலும்பு வங்கி: தென் மாநிலங்களுக்கான பிரத்யேக மையம்

Added : ஜூன் 14, 2016
 கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தோல், எலும்பு வங்கி: தென் மாநிலங்களுக்கான பிரத்யேக மையம்

சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தென் மாநிலங்களுக்கான தோல் மற்றும் எலும்பு சிறப்பு வங்கி அமைகிறது. இதற்கான ஒப்பந்தம், தமிழ்நாடு அரசு மற்றும் உடல் உறுப்பு மாற்று தான ஆணையத்துக்கு இடையே, கையெழுத்தாக உள்ளது.
சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், தீக்காயத்திற்கான சிறப்பு பிரிவு உள்ளது. சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இருந்து, தீக்காய சிகிச்சைக்காக நோயாளிகள் இங்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். ஆந்திராவில் இருந்தும் சிகிச்சைக்கு வருகின்றனர். அவர்களில், 50 சதவீதத்தினரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது.
தீ விபத்திற்கு பின் தோல் கருகி விடுவதால், அதில் தொற்று பாதிப்பு ஏற்படுவதே, சிக்கலுக்கு காரணம். தோல் மாற்று சிகிச்சை அளிக்க முடிந்தால், காப்பாற்றப்படுவோரின் சதவீதம் மேலும் அதிகரிக்கும். அதனால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பிரத்யேக தோல் வங்கி, அதனுடன் கூடிய எலும்பு வங்கியும் அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பாக, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையம் மற்றும் தமிழக சுகாதாரத்துறைக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம், சில நாட்களில் கையெழுத்தாக உள்ளது.

5 ஆண்டுகள் சேமிக்கலாம்
* இறந்தவரிடம் இருந்து உடல் உறுப்புகள் தானம் பெறுவது போல், தோல் தானம் பெறப்பட்டு, வங்கியில் சேமிக்கப்படும்
* இறந்த, 6 மணி நேரத்திற்குள், அவரது உடலில் இருந்து தோலை எடுக்க வேண்டும்
* 18 வயதுக்கு மேல் உள்ள யாரிடம் இருந்தும், தோல் தானம் பெறலாம்
* எந்த ரத்தப் பிரிவைச் சார்ந்தவரின் தோலையும், யாருக்கும் பயன்படுத்தலாம்
* உடல் உறுப்பு தானம் மூலம் பெறப்படும், தோலை, ஐந்து ஆண்டுகள் வரை சேமித்து வைத்து, பயன்படுத்த முடியும்.



இந்த தோல் வங்கி, தமிழகம் மட்டுமின்றி, தென் மாநிலங்களுக்கான சிறப்பு மண்டல மையமாக செயல்படும். இதனால், தீக்காயம் பட்டோருக்கு, தோலை மாற்றி அறுவைச் சிகிச்சை செய்து, எளிதாக குணப்படுத்தலாம்; சிகிச்சையின் தரம் மேம்படும்; காப்பாற்றப்படுவோர் சதவீதம் மேலும் அதிகரிக்கும்.
நாராயணபாபு டீன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், திசு வங்கி, எலும்பு வங்கிக்கான கட்டமைப்பு வசதிகளை அமைக்க, 75 லட்சம் ரூபாய் செலவாகும். ஒப்பந்தம் சில நாட்களில் கையெழுத்தாகும். இரண்டு மாதங்களில், இந்த மையம் முழு வீச்சில் செயல்பாட்டுக்கு வரும்.
அமலுார்பவநாதன் உடல் உறுப்பு தான ஆணைய அதிகாரி .- நமது நிருபர் -

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X