நாகர்கோவில், :''மக்கள் நல கூட்டணி மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது,'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நாகர்கோவிலில் கூறினார்.
2015 செப்., 27-ம் தேதி குமரி மாவட்டம் கருங்கல்லில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன் முதல்வர் ஜெ., பற்றி அவதுாறு பேசியதாக நாகர்கோவில் கோட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று அவர் நேரில் ஆஜரானார். நீதிபதி
சதிகுமார் வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.பின்னர் இளங்கோவன் நிருபர்களிடம் கூறியதாவது:என் மீதான வழக்கிற்கான ஆதாரங்களை உரிய நேரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்வேன். தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் சிறப்பு இடம் என்பதை விட முதன்மையான இடம் தரவேண்டும்.
பிரதமர் மோடியை முதல்வர் ஜெயலலிதா 50 நிமிடங்கள் சந்தித்து பேசியுள்ளார். கருணாநிதி கூறியுள்ளது போல கடந்த ஆண்டுகளில் வைத்த கோரிக்கையைதான் இப்போதும் வைத்துள்ளார்.
ஜெயலலிதா மக்கள் நலனுக்காக பிரதமரை சந்திக்கவில்லை.முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள புதிய முதல்வர் பினராயி விஜயன் ஆரம்பத்தில் கூறிய கருத்தை வரவேற்கிறேன். முல்லைப்பெரியாறு, காவிரி என எந்த பிரச்னையாக இருந்தாலும் தமிழக மக்கள் நலன் பாதிக்காத விதத்தில் காங்கிரஸ் செயல்படும். சிலை கடத்தல் விவகாரத்தில் அரசியல்வாதிகளுக்கு உள்ள தொடர்பை விசாரிக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையிலும் பெட்ரோல், -டீசல் விலையை மத்திய அரசு
உயர்த்தியுள்ளதன் மூலம் மக்களை சுரண்டும் அரசு மத்திய அரசு என்பதை உணர்த்தியுள்ளது.குளச்சல் வர்த்தக துறைமுகத்தை சிலரது சொத்துகளை பாதுகாப்பதற்காகதான் வேறு இடத்துக்கு கொண்டு செல்ல மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முயற்சிக்கிறார்.
குளச்சல் துறைமுகம் குளச்சலில்தான் அமைய வேண்டும். மக்கள் நல கூட்டணி மண்ணில் புதைக்கப்பட்டு விட்டது.முதல்வர் ஜெயலலிதாவின் அணுகுமுறை மாறியுள்ளதா? என எனக்குத் தெரியாது. அவரது தற்போதைய தோற்றம் நிஜமா? மாயமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இலங்கை மீது ஜெ., படையெடுப்பாரா
துாத்துக்குடி : சட்டசபை கவர்னர் உரையில் விசேஷமாக எதுவும் இல்லை. 'கச்சத்தீவை மீட்போம்' என கூறப்பட்டுள்ளது. கச்சத்தீவை ஜெயலலிதா எப்படி மீட்க முடியும்; தமிழக போலீசாரை வைத்து இலங்கை மீது படை எடுப்பார்களா?
மீனவர் பிரச்னையை தீர்க்க, தேர்தல் நேரத்தில் கூறியது போல் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும்; ஆனால் அமைக்கவில்லை.காங்., ஆட்சி காலத்தில், இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களை விரைவாக மீட்டதுடன், படகுகளும் மீட்கப்பட்டன.தற்போது மோடி அரசு தாமதமாக மீட்கிறது. ஆனால் படகுகள் மட்டும் மீட்கப்படவில்லை. கவர்னர் உரையில் மோடியை கண்டித்து வாசகங்கள் இடம் பெற்றிருந்தால் பாராட்டலாம். கவர்னர் உரையில் 'அம்மா புராணம்' படிக்கப்பட்டுள்ளது, என்றார்.