பா.ஜ.,வின் தேசிய செயற்குழு கூட்டம், சமீபத்தில், உ.பி., மாநிலம் அலகாபாத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற, தமிழக பா.ஜ., தலைவர்களிடம், கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனியாக பேசினார்.
அப்போது, 'தமிழகத்தில், பா.ஜ.,வை வளர்க்க வேண்டும் எனில், தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவை பெறும் வகையில், கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். தலித் மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடன் சாப்பிட வேண்டும்; தலித்களுக்காக, மோடி அரசு நிறைவேற்றி உள்ள திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும்' என, ஆலோசனை வழங்கினார்.
இந்த உத்தரவை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம், சென்னை, எழும்பூரில் உள்ள திடீர் நகர் பகுதிக்கு, தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்றார். அங்குள்ள தலித் மக்களிடம் பேசிய அவர், 'பா.ஜ., ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபடும் இயக்கம்' என, தெரிவித்ததோடு, தலித் மக்களுக்காக, மோடி அரசு அமல்படுத்தியுள்ள திட்டங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார். பின், அந்த மக்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
- நமது சிறப்பு நிருபர் -