தமிழகத்தில் எல்லாரும் தோற்றாயிற்று. கருணாநிதி, ஜெயலலிதா கட்சிகள் தான், மகத்தான வெற்றி பெற்றன. காங்கிரசின், எட்டு இடங்கள் கூட, தி.மு.க., போட்ட பிச்சை தான்.
இளங்கோவனைக் கேட்டால், 'தி.மு.க., 81 இடங்களில் வெற்றி பெற காங்கிரசின் ஓட்டுகளே
காரணம்' என்று ஏதாவது உளறிவிட்டு, டில்லி வரை மாட்டிக் கொள்வார்.'மிஸ்டு கால் மூலமாக, 60 லட்சம் உறுப்பினர்கள் தமிழகத்தில் சேர்ந்து விட்டனர்' என்று, நம்மை வியக்க வைத்த பா.ஜ., பெற்ற மொத்த ஓட்டுகள் வெறும், 12 லட்சங்களே! பல தொகுதிகளில் அதன் வேட்பாளர்கள் பிளஸ் 2 மாணவனை விட, குறைவான ஓட்டுகளே பெற்றிருக்கின்றனர். மீதி, 48 லட்சம் ஓட்டுகள் என்னவாயிற்று என, அமித் ஷா முதல் வானதி வரை, கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர்.
குஜராத்தில், மோடியின் சிறப்பான, 10 ஆண்டு கால செயல்பாடு, லோக்சபா தேர்தலின்போது, அவரது நேரடியான ஒளிபரப்பு பேச்சுகளை கேட்டு, 'மிஸ்டு கால்' கொடுத்து உறுப்பினரானவர்களில் நானும் ஒருவன். தேர்தலுக்கு முன்னால், வட சென்னையிலிருந்து, தென் சென்னைக்கு குடி வந்து, வாக்காளர் பட்டியலுக்கு குடும்பத்தோடு விண்ணப்பித்தேன். நான்மறந்திருந்த வேளையில், என் மொபைலில் ஒரு அழைப்பு வந்தது.'நீங்க தானே மிஸ்டர் ராமச்சந்திரன்? வாக்காளர் அடையாள அட்டை உங்களுக்கு வந்திருக்கு; வந்து வாங்கிக் கொள்ளுங்கள்' என்று ஒரு பெண்மணி அழைக்க, நானும், என் மனைவியும்,
மகனும், மருமகளும் அப்பள்ளிக்கு போனோம்.வரிசையில் நின்று கூப்பிட்டவுடன், என் கையில் அடையாள அட்டை கொடுத்தனர்; திடுக்கிட்டேன்.
பெயர் என்னுடையது. படம் நானல்ல; முகவரியும் வேறு ஏதோ. விஷயம் சொல்ல, தேடினர்; கிடைக்கவில்லை பின், என் மனைவி பெயர் அவளுடையது; போட்டோவில் வேறு யாரோ பெண்மணி. ஆனால் என் முகவரி.'இப்படி எத்தனை லட்சம் பேரோ; யாரிடம் முறையிடுவது? பா.ஜ.,விற்கு மட்டுமல்ல; மற்ற கட்சிக்காரர்களுக்கும் இப்படி ஆகியிருக்கலாம். ஆனால், 'மிஸ்டு கால்' கொடுத்து, கட்சியில் சேர்ந்த பலருக்கு, என் கதி நேரிட்டிருக்கலாம். இருந்தாலும், மோடியை விரும்புகிறவர்கள், ஓட்டளிக்காமல் இருக்க மாட்டார்கள் என்றாலும், தமிழகத்தின் திராவிட மாயையின் வேலை, இன்னமும் முடியவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.
ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோ தங்கள் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கிற மாதிரி, ஏதும் செய்யவில்லை. அறிவியல் வளர்ச்சி எனும் பெயரில், கருணாநிதி கொடுத்த, 'டிவி' இப்போது எத்தனை வீடுகளில் இருக்கிறது? மிகச் சிறப்பாக செயல்பட்ட உழவர் சந்தையும், சமத்துவபுரமும் இன்று எத்தனை இடங்களில் சிறப்பாக செயல்படுகின்றன? பின் வந்த ஆட்சியின் மீது பழி சுமத்துவரே தவிர, வேறு எதையும் கூறி, ஓட்டு கேட்க முடியாது. அதேபோல், இந்த முறை கருணாநிதி வந்திருந்தால், அம்மா உணவகங்களையும், அம்மா குடி நீரையும் நிறுத்தியிருப்பார்.
இதுதான், 1967 முதல் நடக்கிறதே தவிர, மக்களுக்காக எந்த அரசும் இல்லை. எனக்கு தெரிந்து
அரசியலில் குப்பை கொட்ட தெரியாத பலர், சைக்கிளில் சென்றவர்கள் கவுன்சிலராகி, ஸ்கார்ப்பியோ காரில் செல்வதும், மாளிகை போன்ற வீடுகளில் வசிப்பதும், இப்போது சகஜமாகி விட்டது. அதனால் தானே வேட்பாளர் தேர்தல் நேர்காணலில், 'எவ்வளவு செலவு செய்வாய்?'
என்கிற சம்பந்தமில்லாத கேள்வி உருவாகியது?பா.ஜ., ஏன் இப்படியாகி விட்டது? மத்தியில் மோடி அரசு; மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாவிட்டால்... கேரளாவில் கூட ஒரு இடம் பிடித்த பா.ஜ., தமிழகத்தில் ஏன் தரைமட்டமாயிற்று? தலை வர்கள் ஆயிரம் சொல்லலாம்.
ஆனால், முக்கியமானது, ஒரு கட்சியில் அற்புதமாகவும், ஆவேசமாகவும், ஆணித்தரமாகவும் பேச, நல்ல பேச்சாளர்கள் ஒரு சிலராவது இருக்க வேண்டும். பா.ஜ.,வில், அது பூஜ்யம். 'டிவி' சேனல்களில் பங்கேற்கும் பலர், மிக மிகப் புதியவர்கள் மட்டுமல்ல; சரியாக பேச தெரியாதவர்கள். தன்னை மடக்குகிறவர்களை அதை விட மேலாக மடக்கத் தெரியாதவர்கள் தான், 'டிவி' நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ்.,சின் குருமூர்த்தி போன்றவர்களை தமிழக பா.ஜ., முன்னிறுத்தியிருக்க வேண்டும். இல.கணேசன் அற்புதமான பேச்சாளர்; ஆனால், வயதாகி விட்டது. எச்.ராஜா ஆவேசமாக பதிலளிக்கக் கூடியவர். ஆனால், திராவிட கட்சிகள் அவரை சரியாக பேச விடவில்லை. மற்றதெல்லாம் ஓட்டை. திராவிடக் கட்சிகள் அனைத்தும், நெற்றியிலே விபூதி, குங்குமம் இட்டு, பா.ஜ.,வை, 'மதவாத கட்சி' என்றன; அசட்டு மக்கள் நம்பினர்.
பா.ஜ.,வை மதவாதக் கட்சி என்றவர்கள், முஸ்லிம் லீக்கோடும், கிறிஸ்தவ ஜனநாயக முன்னணியோடும் கூட்டு வைத்துக் கொண்டனர். அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக மதுரை ஆதீனம் மேடையேறினார். அன்புமணி, பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். மிகப்பெரும் ஈ.வெ.ரா., சீடர்களின் மனைவிமார்கள், கோவில் கோவிலாக சுற்றி, யாகங்கள் செய்தனர். ஆனாலும், இவர்களுக்கு, பா.ஜ., இந்து மதம், வெறி பிடித்த கட்சி. இப்படி ஒரு மாயையை திராவிட கட்சிகள், பா.ஜ.,வின் மேல் வேண்டுமென்றே மத சாயத்தை பூசி, பரப்பின. இப்படி பா.ஜ.,விற்கு கெட்ட பெயர் உண்டாக்கி, திராவிட கட்சிகள் வளர்ந்தன; தேசியக் கட்சிகள்
தேய்ந்தன.
சோ சொல்வது போல, காங்., அழிந்து விடக் கூடாது என்றாலும், அதன் தலைவர்கள், அதை அழிக்காமல் விட மாட்டார்கள். நம்மவர்களுக்கு ஓர் ஆத்திரம். புதிதாக ஒருவர் பதவியேற்ற மறு நாளிலிருந்தே விலைவாசிகள் குறைய வேண்டும்; உப்பு, புளி, பருப்பு முதல் பெட்ரோல் வரை, கணிசமாக விலை குறைந்து, பாலும், தேனும் தெருவில் ஓட வேண்டும். 120 கோடி மக்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.இது என்ன மந்திரத்தில் மாங்காய் விளைகிற விஷயமா? ஒபாமாவும், புடினுமே கையை பிசைந்து கொண்டிருக்கின்றனர். ஆனால், இங்கே மோடி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று பேச்சு!
அனைவருமே, '2ஜி' ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல், போபர்ஸ் ஊழல், அகஸ்டா ஹெலிகாப்டரில் ஊழல் என்று, எதிலும் மெகா ஊழல் செய்த காங்கிரசை மறந்து விட்டனர். 'ரயில்வே பிளாட்பாரத்தில், தேநீர் விற்றவர் எப்படி பிரதமராகலாம்' என்று தான் இப்போதைய கவலை. தமிழகத்திலேயே, 'மோடி, லேடி, டாடி' என்று தான் தேர்தல் நேரப் பேச்சு!பா.ஜ., தோற்றதற்கு காரணம், திராவிட மாயை தான். 'கழகம் ஒரு, 16 வயது பருவ மங்கையைப் போல. தளதளக்கும் மாம்பழம் போன்ற உடல்; கருவண்டு கண்கள்; வாலிபரை சுண்டியிழுக்கும் அதரங்கள்' இப்படி சொல்லி, கட்சியை வளர்த்தார் அண்ணாதுரை.
மோடி மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சார்ந்தவர். பிற்படுத்தப்பட்டவர்களின் தலித்துகளின் தலைவன் என்று தன்னை சொல்லிக் கொள்கிறவர்கள் எல்லாம், இன்று மோடியை எதிர்க்கின்றனர்.
மோடியின் இரண்டாண்டு கால ஆட்சியில், மத்தியில் எந்த ஊழலும், லஞ்சமும் கிடையாது. '2ஜி' போன்றவை, நிலக்கரி போன்றவை ஒதுக்கீட்டில் இணையதளங்கள் மூலம் விடப்பட்டன. பொருளாதார ரீதியில், 4.5 சதவீதமாக மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்த வளர்ச்சி இப்போது, 7.5 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. விலைவாசி அவ்வப்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உற்பத்தி, 12.6 சதவீதம் அதிகரித்திருக்கிறது. இந்தியாவின் அன்னிய செலாவணியின் இருப்பு, 23.59 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.தேசிய நெடுஞ்சாலைகள் இப்போது, 10 ஆயிரம் கி.மீ., ஆண்டொன்றுக்கு உயர்ந்திருக்கிறது. ஜன் தன் யோஜனா, துாய்மை இந்தியா, அடல் பிஹாரி ஓய்வூதியத் திட்டம், பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டம், எழுச்சிமிகு பாரதம் போன்ற பல்வேறு திட்டங்களை, மோடி செயல்படுத்தி வருகிறார். 28 கோடி ஏழைகளுக்கு வங்கிக் கணக்கு துவங்கப்பட்டுள்ளது.
இன்னும் இரண்டாண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் மின்வசதி, இப்படி பல திட்டங்களை தீட்டி, பிரதமர் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா முன்னேற வேண்டும் என்பதே, மோடியின் லட்சியம். அதனால்தான் எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக செயல்படுகின்றன. தமிழர்கள் திராவிடத்தை விட்டு வெளியே வந்தால் தான், இதெல்லாம் புரியும்!
இ-மெயில்: bsr_43@yahoo.com
- பா.சி.ராமச்சந்திரன் -
மூத்த பத்திரிகையாளர்