தோழிக்காக, சென்னை மருத்துவ கல்லுாரியில் தனக்கு கிடைத்த, எம்.பி.பி.எஸ்., இடத்தை மாணவி விட்டுக் கொடுத்த ருசிகர சம்பவம், மருத்துவ படிப்பு கலந்தாய்வில் நடந்தது.
தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. முன்னாள் ராணுவ வீரரின் வாரிசுகளுக்கான கலந்தாய்வில், 199.00 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் திருச்சி, சமயபுரத்தைச் சேர்ந்த மாணவி வர்ஷினி பங்கேற்றார்.
ஓசி என, அழைக்கப்படும், இதர பிரிவைச் சேர்ந்த இவருக்கு, சென்னை மருத்துவ கல்லுாரியான, எம்.எம்.சி.,யில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது. அவரது தோழி ஜனனி, 198.75 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் பங்கேற்றார். பிற்பட்டோர் பிரிவைச் சேர்ந்த இவருக்கு, இந்த ஒதுக்கீட்டில், எம்.எம்.சி.,யில் இடம் கிடைக்கவில்லை.
இதை அறிந்த வர்ஷினி, 'எனக்கு இந்த பிரிவில் இடம் வேண்டாம்' எனக்கூறி, தோழிக்கு விட்டுக் கொடுத்தார்; இதையடுத்து, ஜனனிக்கு, எம்.எம்.சி.,யில், எம்.பி.பி.எஸ்., இடம் கிடைத்தது.
இதுகுறித்து மாணவி வர்ஷினி கூறுகையில், ''ஜனனியும், நானும் ஒரே பள்ளியில் படித்தோம். எனக்கு முன்னாள் ராணுவத்தினருக்கான ஒதுக்கீட்டில் இன்று இடம் கிடைக்கவில்லை என்றாலும், பொது பிரிவு கலந்தாய்வில், இதே கல்லுாரியில் சேர முடியும். ஜனனிக்கு, எம்.எம்.சி.,யில் படிக்க ஆசை என்பதால், விட்டுக் கொடுத்தேன்; இதனால், எனக்கு எந்த பாதிப்பும் இல்லை,'' என்றார். இதை அவரது பெற்றோரும் ஏற்றனர்.
தோழியின் விருப்பத்தை நிறைவேற்றிய மாணவியை, மருத்துவக்கல்வி அதிகாரிகள், கலந்தாய்வுக்கு வந்த மாணவ, மாணவியரும் பாராட்டினர்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE