ஜனங்க படும்பாடு... உண்மையை ஊத்தி மூடு!| Dinamalar

ஜனங்க படும்பாடு... உண்மையை ஊத்தி மூடு!

Added : ஜூன் 21, 2016
Share
'தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது சாரல்... இன்பச்சாரல்...'- தன்னை மறந்து ஜாலியாக பாடியபடி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.பின்னால் அமர்ந்திருந்த சித்ரா, ''என்னடி, பாட்டெல்லாம் பலமா இருக்கு... ஏதாவது விசேஷமா?''''அக்கா, பொள்ளாச்சி ரோட்டுல துாறல் மழைல நனைஞ்சுட்டு, ஸ்கூட்டர்ல போறோம். இந்த சிச்சுவேஷனுக்கு தன்னால பாட்டு வருது... ஏன் வாய்ஸ்
ஜனங்க படும்பாடு... உண்மையை ஊத்தி மூடு!

'தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது சாரல்... இன்பச்சாரல்...'
- தன்னை மறந்து ஜாலியாக பாடியபடி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.
பின்னால் அமர்ந்திருந்த சித்ரா, ''என்னடி, பாட்டெல்லாம் பலமா இருக்கு... ஏதாவது விசேஷமா?''
''அக்கா, பொள்ளாச்சி ரோட்டுல துாறல் மழைல நனைஞ்சுட்டு, ஸ்கூட்டர்ல போறோம். இந்த சிச்சுவேஷனுக்கு தன்னால பாட்டு வருது... ஏன் வாய்ஸ் சகிக்கலையா...?
''இந்த பொள்ளாச்சி ரோட்டை, நான்கு வழிப்பாதையா மாத்தப்போறாங்க. அப்ப, இந்த ரோட்டுல இருக்கற மரங்களையெல்லாம் வெட்டப்போறாங்க. அப்புறம் ரோடே வெறிச்சோடிக் கிடக்கும்,'' என்றாள் சித்ரா.
அப்போது எதிரே மாநகராட்சி குப்பை லாரி, ஹாரன் அடித்தபடி வேகமாக கிராஸ் செய்தது.
''என்ன மித்து, லாரியில இருந்து இப்படி 'கப்' அடிக்குது,'' என்றாள் சித்ரா.
''அக்கா, இதுக்கே இப்படி மூக்கப் பொத்திக்கிறயே, வெள்ளலுார் குப்பைக் கிடங்கு பக்கத்துல இருக்கறவங்க, எப்படி இருப்பாங்க நினைச்சுப் பாரு. இப்ப, மழை பெய்ய ஆரம்பிச்சதும், குப்பைக் கிடங்கை சுத்தி பயங்கர நாத்தம். ஈ தொல்லை அதிகமாயிடுச்சாம்,''
''இதுக்கெல்லாம் தீர்வே இல்லையா?'' என்றாள் மித்ரா.
''கார்ப்பரேஷன் அதிகாரிக, 'ஸ்வச் பாரத்' திட்டத்துல, வடமாநிலத்துக்கு 'விசிட்' போயிருக்காங்க. அங்க, குப்பையில இருந்து காஸ் வருதாம்... கரென்ட் வருதாம்... இயற்கை உரம் கிடைக்குதாம்... குப்பையை பல மாதிரியா மாத்தறதுல வருமானமும் கெடைக்குதாம்... அதையெல்லாம் இங்கயும் செயல்படுத்தி, குப்பை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாமுன்னு 'ஐடியா' பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''இங்க உள்ள அதிகாரிங்க, குப்பையில இருந்து உரம் தயாரிக்கிறோம்னு, பல வருஷமா ஏமாத்திட்டு இருக்காங்க. நடக்கும் போது பார்ப்போம். இன்னிக்கு பைப்புல தண்ணி வரும். கோவிலுக்கு போயிட்டு, சீக்கிரமா வீட்டுக்கு போகணும்,'' என்றாள் சித்ரா.
''தண்ணின்னு சொன்னதும்தான், ஞாபகத்துக்கு வருதுக்கா. இனி போக, போக தண்ணி கஷ்டம் ஜாஸ்தியாயிரும்னு, பேப்பர்ல போட்டிருக்காங்க பார்த்தியா? தட்டுப்பாட்ட சரி பண்ண, மாநகராட்சியில ஏதாவது புது திட்டம் வச்சிருக்காங்களா?'' என ஏக்கப் பெருமூச்சு விட்டாள் மித்ரா.
''அப்படி ஏதாவது பண்ணா பரவாயில்லை. புதுசா கனெக்ஷன் குடுக்கறதுலதான் இப்ப கவனமெல்லாம். புதுசா பொதுக்குழாய் கனெக்ஷன் கொடுக்கக்கூடாதுன்னு அரசு உத்தரவு இருக்கு. ஆனா, இந்த உத்தரவை மீறி, செல்வபுரம் கல்லாமேடு பகுதில, புதுசா பொதுக்குழாய் இணைப்பு கொடுக்கறதுக்கு வேலை நடக்குது.
ஆளுங்கட்சி வி.ஐ.பி.,க்குதான், இதுல முக்கிய ரோல். செல்வபுரம், தெலுங்குபாளையம், ஆர்.எஸ்.,புரம் லாலி ரோடு, பால் கம்பெனி பகுதியில, 200 பொதுக்குழாய் இணைப்பு கொடுக்க, உத்தரவு போட்டுருக்காராம். கார்ப்பரேஷன் அனுமதியில்லாம, கார்ப்பரேஷன் அதிகாரிகளே விதிகளை மீறி, இணைப்பு கொடுக்க போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''ஊரெல்லாம் காய்ச்சல், அது இதுன்னு சொல்றாங்க...விதிமீறி குடுக்கற தண்ணியையும் நல்லா சுத்திகரிச்சு, சுகாதாரமா சப்ளை பண்ணினா நல்லாயிருக்கும்,''
அதற்கு சித்ரா, ''சுகாதாரம்னு சொன்னவுடனேதான் ஞாபகம் வருது. சுகாதார துறையில இருக்கறவர் போடுற உத்தரவுனால, பல டாக்டர்ஸ் கடுப்பா இருக்காங்களாம்,'' என்றாள்.
''ஏன்...என்ன விஷயம்?''
''மாவட்டத்துல பல பகுதிகள்ல, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கு. இதை கட்டுப்படுத்த வேண்டிய சுகாதார துறை அதிகாரி, 'டெங்கு காய்ச்சலுக்கு அனுமதிக்கப்படும் நோயாளிகள் குறித்து, தகவல் தெரிவிக்க வேண்டாம்'னு உத்தரவு போடுறாராம்,'' என்றாள் சித்ரா.
''கவர்ன்மென்டே டாக்டர்களுக்கு அப்படித்தான் சொல்லிருக்காமா?'' எதிர்கேள்வி கேட்டாள் மித்ரா.
''அங்கதான் டுவிஸ்ட் இருக்கு. கோவை மாவட்டத்துல இவரு இருக்காரு. இவரு வீட்டுக்காரம்மா திருப்பூர்ல இருக்காங்க. ரெண்டு மாவட்ட தகவலையும் தரவேண்டாம்னு இவரு சொல்றதுதான், டாக்டர்கள்கிட்ட கடுப்பை கிளப்பியிருக்கு. 'ஜனங்க படும்பாடு... உண்மையை ஊத்தி மூடு'ங்கற மாதிரிதான் நடக்குது சம்பவம்,'' என, கண் சிமிட்டினாள் சித்ரா.
''குளிருக்கு ஒரு இஞ்சி டீ குடிச்சுட்டு போகலாம்,'' என்றபடி ஒரு பேக்கரி முன் ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா.
சூடான இஞ்சி டீயை உறிஞ்சியபடி, ''கேள்விப்பட்டியா...மாவட்ட தி.மு.க.,வுல நிர்வாகிங்கள்லாம் ஆடிப் போயிருக்காங்களாம்,''
''கட்சி மேல்மட்டமே கூப்பிட்டு, 'லெப்ட் அண்டு ரைட்' வாங்குன விவகாரம்தானே... இன்ட்ரஸ்டிங்... சொல்லு,'' என்றாள் சித்ரா.
''பழைய மாவட்ட செயலாளர், அவரோட ஆதரவாளர்களோட சென்னைக்கு போயி, தன் தரப்பு விளக்கத்தை தர 'டிரை' பண்ணாராம். ஆனா தலைமை, 'போய் கட்சி வேலைய பாருங்க'னு கடிச்சு அனுப்பிருச்சாம். விரக்தியோட திரும்பி வந்த அவரும், அவரது ஆதரவாளர்களும், புது மாவட்ட செயலாளர் பதவியேற்புல கலந்துக்கல. இது எப்படியோ தலைமைக்கு தெரிஞ்சு போச்சு. புது மாவட்டத்துக்கு கோப்பரேட் பண்ணலைன்னா, எல்லாரையும் கட்சியிலிருந்து துாக்கிட்டு, அந்த இடத்துல புதுசா ஆளுங்கள போட தயங்க மாட்டோம்னு 'வார்ன்' பண்ணிருக்காங்க. கட்சி கண்காணிக்கறது தெரிஞ்சதும், 'கப்சிப்' ஆயிட்டாராம்,''
என்றாள் மித்ரா.
பேக்கரியில் இருந்து வெளியே வந்தபடி, ''கண்காணிப்புங்கற பேர்ல, ஆள் வச்சு வசூல் நடக்குது...தெரியுமா?'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''தி.மு.க., வுலயா?''
''இல்ல...இது போலீஸ் மேட்டர். சிட்டில ராத்திரி ரோந்து பணிக்கு போற போலீசுக்கு ெஹல்ப் பண்ண, 'சிட்டி விஜிலென்ஸ் கமிட்டி' அமைச்சிருக்காங்க. கமிட்டியில, ேஹாம்கார்டு, ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ், இளவட்டங்கள்லாம் இருக்காங்க. ஆனா போலீஸ்காரங்க, இந்த கமிட்டிய விட்டுட்டு, அவங்களுக்கு நெருக்கமானவங்கள வேலைக்கு வெச்சுக்கிட்டு, சோதனைங்கற பேர்ல வசூல் பறிக்கறாங்க. காசு டேஸ்ட் பார்த்த இளசுக, சும்மா இருப்பாங்களா? போலீசா நடிச்சு தனியாவும் வசூல்ல எறங்கிட்டாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''நானும் ஒரு கிரைம் மேட்டர் சொல்றேன். ஓட்டல் நிர்வாகிகளால பாலியல் தொல்லைக்கு ஆளான சில சின்ன பொண்ணுக, போலீசுக்கு ரகசியமா புகார் அனுப்பியிருக்காங்க,''
''அடடா...பொண்ணுங்களுக்கு இப்பல்லாம் பாதுகாப்பே இல்லாம போச்சு. ஆமா...எப்படி இப்படி மாட்டினாங்க?''
''அந்த ஓட்டல், சிட்டி மால்ல இருக்கு. அங்க ஹவுஸ்கீப்பிங் வேலை செய்யற பொண்ணுகள, அங்க வேலை செய்ற, சில பேரு தனிமைப்படுத்தி, கட்டாயப்படுத்தி மது குடிக்க வச்சதோட, பாலியல் பலாத்காரமும் செஞ்சிட்டதா, புகார் கிளம்பியிருக்கு. பொண்ணுங்க பேருல போலீஸ் உயரதிகாரிங்களுக்கு, கண்ணீர் கடிதம் போயிருக்காம். அதுல, 'பாதிக்கப்பட்ட பொண்ணுங்கள வீடியோ எடுத்திருக்காங்க. இன்டர்நெட்டுல போடப் போறதா மிரட்டியிருக்காங்க,''ன்னு, எழுதியிருக்காம்.
''அப்படி ஒரு சம்பவம் நடந்துச்சான்னு, போலீஸ் விசாரிச்சிட்டிருக்காங்க. இன்னும் சில
நாள்ல ஏதாவது அதிரடி நியூஸ் வரும் பாரு,''
''சரி...சரி, கோவில் வந்தாச்சு...கீழே இறங்கு,'' என்றபடி ஈச்சனாரி கோவில் முன் ஸ்கூட்டரை நிறுத்தினாள் மித்ரா.
இருவரும் இறங்கி கோவிலுக்குள் சென்றார்கள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X