""மாவட்ட தலைநகர் உடுமலைக்கு மாறிடுச்சோனு சந்தேகமா இருக்குதுப்பா...'' என்றபடி வந்தாள் சித்ரா.
""மாவட்டத்தோடு சேர மாட்டோம்னு அடம் பிடிச்சாங்க... இப்ப தலைநகர் ஆகிடுச்சா?'' என, ஆச்சரியத்துடன் கேட்டாள் மித்ரா.
""திருப்பூர்ல அமைச்சர் இருந்த வரைக்கும், பெரும்பாலான அரசு விழா இங்கதான் நடந்துச்சு. உடுமலை, மடத்துக்குளம் பக்கத்துல, முக்கியமான விழாக்கள் மட்டும் நடந்துச்சு. இப்ப, உடுமலை எம்.எல்.ஏ., அமைச்சரா இருக்கறதால, இதுவரை அரசு விழாக்கள் எல்லாமே அங்கதான் நடந்திருக்கு. கலெக்டர் ஆபீசு மட்டும் கட்டாம இருந்திருந்தா, திருமூர்த்தி மலை அடிவாரத்துலயே கட்டியிருப்பாங்க போலிருக்கு. திருப்பூர் எம்.பி., எப்படி சம்பந்தமில்லாம போயிட்டாங்களோ, அதே மாதிரி அமைச்சரும் திருப்பூர்ல இருந்து தூரமா போயிட்டாரு,'' என, வருத்தப்பட்டாள் சித்ரா.
""எம்.பி.,னு சொன்னதும் ஞாபகம் வருது, "மாஜி' எம்.பி., பனியன் கம்பெனி கம்பெனியா போயி, பேசிக்கிட்டு இருக் காராமே, தெரியுமா?'' என்றாள் மித்ரா.
""என்னப்பா சொல்றே? உள்ளாட்சி தேர்தலுக்கு இப்பவே தயாராகிறாரா? அவரைத்தான் கட்சியை விட்டே விலக்கிட் டாங்களே,'' என, கேட்டாள் சித்ரா.
""அவர் அரசியல்வாதி மட்டுமல்ல, பள்ளிக்கூடம், சாய ஆலை, பிரின்டிங் ஆலைனு ஏகப்பட்டது நடத்திக்கிட்டு இருக்காரு. சில மாசத்துக்கு முன்னாடி, கடலூர்ல சாய ஆலை திறந்திருக்காரு; அங்க "ஜீரோ டிஸ்சார்ஜ்' பிரச்னை இல்லை. தன்னோட ஆலைக்கு, கம்பெனிக்காரங்க ஆதரவு கொடுக்கணும்னு, தெரிஞ்சவங்க கிட்ட "ஆர்டர்' கேட்டுக்கிட்டு இருக்காரு,'' என்றாள் மித்ரா.
""படிப்படியா மது விலக்கை அமல் படுத்துவோம்னு சொன்னாங்க. ஆனா, இப்படி ஏமாத்துவாங்கன்னு எதிர்பார்க் கலை,'' என, ஆவேசப்பட்டாள் சித்ரா.
""என்னாச்சுக்கா, அதான், 500 கடைகளை மூடிட்டாங்களே... அப்புற மென்ன,'' என, மித்ரா அப்பாவியாய் கேட்டாள்.
""நம்ம மாவட்டத்துல, 249 மதுக்கடைகள் இருக்கு; இதுல, வெறும் எட்டே எட்டு கடைகளை மட்டும் மூடியிருக்காங்க. திருப்பூர்ல வெறும் மூன்று கடைகளை மட்டுமே மூடியிருக்காங்க. அதிலும், விற்பனை இல்லாத கடைகளா பார்த்து மூடியிருக்காங்க. பழைய பஸ் ஸ்டாண்டை சுத்திலும் ஏகப்பட்ட மதுக்கடை இருக்கு. அதுல, ஒரு கடையை கூட மூடலை. மாதர் சங்கத்தினர் கொதிச்சுப் போயிருக்காங்க,'' என சித்ரா, சொல்லி முடிப்பதற்குள், இஞ்சி டீ கொடுத்து ஆசுவாசுப்படுத்திய மித்ரா, ""20 கடைகளை மூடப்போறதா சொல்லி யிருந்தாங்களே,'' என, இழுத்தாள்.
""ஆமாப்பா... மாவட்டம் வாரியாக "லிஸ்ட்' வாங்குனாங்க. முதலில், பொதுமக்கள் எதிர்க்கிற கடைகள், பள்ளி, கல்லூரி, கோவில், மருத்துவமனை அருகில் உள்ளவைன்னு, 41 கடைகளை மூட பட்டியல் தயாரிச்சு, உயரதிகாரிகள் பார்வைக்கு அனுப்புனாங்க. இப்ப என்னடான்னா, எட்டு கடைகளை மட்டும் மூடச்சொல்லி உத்தரவு வந்திருக்கு. அதைப்பார்த்து, அதிகாரிகளே அதிர்ச்சியாகிட்டாங்க. மறுபடியும் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் தலைதூக்குமோன்னு, பீதியில் உறைஞ்சு போயிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""உள்ளாட்சி தேர்தலை மனசுல வச்சுட்டு, தெற்கு எம்.எல்.ஏ., அதிகாரிகளோடு போயி, நன்றி சொல்லிட்டு இருக்காராம்...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் மித்ரா.
""ஓட்டுப் போட்டவங்களுக்கு நன்றி சொல்றதுக்கு, எதுக்கு அதிகாரிக போறாங்க...'' என்றாள் சித்ரா.
""ரொம்பவும் கஷ்டப்பட்டு, எதிர்நீச்சல் போட்டுத்தானே ஜெயிச்சியிருக்காரு. வடக்கை போல தெற்கையும் கோட்டையாக்கணும்னு திட்டம் போட்டிருக்காரு. வார்டு வாரியா, இரவு நேரத்துல போயி, மக்களுக்கு நன்றி சொல்லிட்டு இருக்காரு. மாநகராட்சி அதிகாரிகளும் கூடவே போறாங்க. யாராவது குறை சொன்னா, மக்கள் முன்னாடியே அதிகாரிகளை கூப்பிட்டு பதில் கேட்கறாரு. பதில்ல திருப்தி இல்லேன்னா, "ஒடனே செய்யுங்கன்னு' உத்தரவு போடுறாருக்கா,'' என்றாள் மித்ரா.
டீயை உறிஞ்சி முடித்த சித்ரா, ""மாநகராட்சியில என்ன நடக்குதுனே தெரியலை. சட்டசபை தேர்தல் பிரசாரம் ஆரம்பிச்சப்ப காணாம போன "சிட்டி மம்மி', போன வாரம் திடீர்னு அம்மா உணவகத்துக்கு போயி, ஆய்வு செஞ்சாங்க. அதுக்கப்புறம், இதுவரை நடந்த எந்த அரசு விழாவுலயும் கலந்துக்கலை. கட்சி சார்பில் நடந்த நன்றி அறிவிப்பு கூட்டத்துக்கும் வரலை. பதவி முடியப்போகுதுனு சோகமா? இல்ல, மறுபடியும் வாய்ப்பு கிடைக்காதுங்கற கவலையானு தெரியலை,'' என்றாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE