என் பார்வை - சாலையோரம் சாப்பிடலாமா| Dinamalar

என் பார்வை - சாலையோரம் சாப்பிடலாமா

Added : ஜூன் 22, 2016 | கருத்துகள் (9)
என் பார்வை - சாலையோரம் சாப்பிடலாமா

சித்தாள் வேலை செய்யும் அந்தப் பையனுக்கு இருபது வயது இருக்கும். அடிக்கடி சிறுநீர் ரத்தமாகப் போகிறது என்று என்னிடம் சிகிச்சைக்கு வந்தான். பல பரிசோதனைகள் செய்து பார்த்தும் காரணம் புரியவில்லை. சிகிச்சை தரும்போது பிரச்னை சரியாவதும் சில வாரங்களில் மீண்டும் அதே பிரச்னையுடன் அவன் சிகிச்சைக்கு வருவதும் தொடர்ந்தது. அவனுடைய உணவுப்பழக்கத்தைத் தீர விசாரித்தபோது தினமும் அவன் வேலை முடிந்து வரும்போது, வழியில் சாலையோர உணவுக்கடையில், 'சில்லிச் சிக்கன்' சாப்பிடுவது வழக்கம் என்பது தெரிந்தது. அந்த உணவில் செயற்கை நிறத்துக்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு 'கலப்பட வேதிப்பொருள்' அவனுடைய சிறுநீரகத்தைப் புண்ணாக்கி, ரத்தம் கசியக் காரணமாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டது. சாலையோரக் கடையில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கச் சொன்னதும் அவனுக்கு அந்தச் பிரச்னை சரியாகிவிட்டது. இது 'ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்'.
உலகச் சுகாதார நிறுவன எச்சரிக்கை : சமீபத்தில் உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் 'இந்தியாவில் மஞ்சள் காமாலை, டைபாய்டு, காலரா, வாந்திபேதி, சீதபேதி போன்ற தொற்றுநோய்கள் அதிக அளவில் ஏற்படுவதற்கு சுற்றுப்புறம் சுத்தமாக இல்லை என்பது முக்கியக் காரணம். சுத்தமில்லாத குடிநீர், பாதுகாக்காத உணவுகள், உணவுக் கலப்படம் போன்றவற்றால் இந்தத் தொற்றுநோய்களின் ஆதிக்கம் மக்களிடம் அதிகரித்து வருகிறது. இவற்றில் பல பிரச்னைகள் சாலையோர உணவுக்கடைகளில் மக்கள் சாப்பிடுவதால்தான் ஏற்படுகின்றன,' என்று அறிவித்துள்ளது. “இதற்கு மத்தியச் சுகாதாரத்துறை முறைப்படி நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் தொற்றுநோய்த் தடுப்புக்கு இப்போது செய்யும் செலவை விட இன்னும் பல நுாறு கோடிகளை ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்" எனும் அதிர்ச்சித் தகவலைத் தந்துள்ளது.
சுத்தம் முக்கியம் : சுகாதாரமற்ற சாலையோர உணவுக் கடைகளால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் ஏழைகள்தான்; மலிவு விலை என்பதால் அங்கு சாப்பிட்டுவிட்டு பின்னர் மொத்தமாக மருத்துவமனையில் செலவு செய்கிறார்கள். தண்ணீர் வைத்திருக்கும் பாத்திரங்கள் அழுக்கடைந்து போன பிளாஸ்டிக் குடங்களாகத்தான் இருக்கும். சமைக்க அல்லது சாப்பிடப் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், டம்ளர்கள், தட்டுகள் சுத்தமாக இருப்பதில்லை. உணவு வழியாக நமக்கு நோய்கள் பரவுவதைத் தடுக்க வேண்டுமானால் உணவு, பாத்திரம், குடிநீர் இவை சுத்தமாக இருக்க வேண்டியது முக்கியம்.
நோய்கள் தாக்கும் : தள்ளு வண்டிகளில், திறந்த வெளிகளில் உணவு வியாபாரம் செய்யும் பெரும்பாலோர் சமைத்த உணவுகளை மூடிப் பாதுகாப்பதில்லை; நுகர்வோரைக் கவர்வதற்காகத் திறந்த பாத்திரங்களில்தான் உணவுகளை வைத்திருப்பார்கள். மீன், இறைச்சி போன்றவற்றைப் பல துண்டுகளாக்கி அவற்றில் மசாலாவைத் தடவி சிவப்பு நிறத்தில் ஒரு செயற்கை நிறமூட்டியைப் பூசி, எண்ணெய்யில் வறுப்பதற்குத் தயாராக வைத்திருப்பார்கள். அதேநேரத்தில் சாலையில் கிளம்பும் புழுதியும் வாகனங்கள் கக்கும் புகையும் மாசு நிறைந்த காற்றும், ஈக்களும் இந்த உணவுகளில் பட்டுப் புதைந்து நச்சுக்கிருமிகளை வளர்க்கும். இதனால் டைபாய்டு, காலரா, வாந்திபேதி, மஞ்சள்காமாலை ஏற்படும். உணவில் தரமில்லை என்றால் செரிமானக் கோளாறு, நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம், வாயுக்கோளாறு போன்ற பிரச்னைகள் தலைகாட்டும். இரைப்பைப் புண்ணில் தொடங்கி, குடலில் ரத்தக்கசிவு ஏற்படக் கூடிய அபாயம் வரை பிரச்னைகள் சங்கிலிப் பின்னலாகத் தொடரும்.
மாரடைப்பை வரவேற்கும் : இன்னொரு முக்கிய விஷயம் சாலையோர உணவுக் கடைகளில் சமையலுக்குப் பெரும்பாலும் வனஸ்பதியையும், பாமாயிலையும்தான் பயன்படுத்துகிறார்கள். இவற்றில் 'எல்.டி.எல்.' எனும் கெட்ட கொழுப்பு அதிகம். இதன் காரணமாக, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு பத்து மடங்கு அதிகரிக்கிறது என்று 'இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம்' ஒரு புள்ளிவிவரம் தந்துள்ளது.எண்ணெய் சிக்கனத்திற்காக ஏற்கனவே பயன்படுத்திய எண்ணெய்யை திரும்பத் திரும்பக் கொதிக்க வைத்து உணவு தயாரிப்பார்கள்; பலகாரம் சுடுவார்கள். இதில்தான் பெரிய ஆபத்து உள்ளது. எண்ணெய்யைத் திரும்பக் கொதிக்க வைக்கும்போது 'டிரான்ஸ் கொழுப்பு அமிலம்' உற்பத்தியாகிறது. கொழுப்புகளிலேயே மிகவும் ஆபத்தான இது மாரடைப்பை வரவேற்கும். பலகாரங்களின் சுவையைக் கூட்டவும் நுகர்வோரைக் கவரவும் 'தேசிய உணவு மற்றும் மருந்துத் தரக்கட்டுப்பாட்டுத்துறை' அனுமதிக்காத செயற்கை நிறமூட்டிகளையும், தரமில்லாத எசன்ஸ் போன்றவற்றையும் கலப்பதுண்டு. இந்த ரசாயனங்களால் ஆரம்பத்தில் அஜீரணம், வயிற்றுப்போக்கு, ரத்தசோகை ஏற்படும். அதே உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது சிறுநீரகம் கெட்டுவிடும். இரைப்பை குடல், கணையப் புற்றுநோய் வரும் வாய்ப்பும் உண்டு.
என்ன செய்ய வேண்டும் : சாலையோரங்களில் புற்றீசல் போல உணவுக்கடைகளை ஆரம்பித்து போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு பகுதிக்கும் எத்தனை உணவுக் கடைகள் எங்கு அமைக்க வேண்டும் என்பதை உள்ளாட்சிகள் முடிவு செய்ய வேண்டும். சாக்கடை, வாறுகால், கழிவுநீர் ஓடை இல்லாத இடங்களில் தான் உணவுக் கடைகள் இருக்க வேண்டும். உணவகத்தைச் சுத்தமாகப் பராமரிப்பது, சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வது, சாலையோர மாசுக்களிடமிருந்து உணவைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது, எண்ணெய், இறைச்சி போன்றவற்றில் கலப்படம் செய்வதைத் தடுப்பது, உணவைப் பரிமாறும் பணியாளர்கள் கையுறை அணிவது போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இரவில் வியாபாரம் முடிந்ததும், உணவுக்கழிவுகளைச் சாலையில் கொட்டாமல், அவற்றை அப்புறப்படுத்தத் தகுந்த ஏற்பாடு செய்ய வேண்டும். சாலையோர உணவுக் கடையை ஆரம்பிக்க லைசென்ஸ் பெறுவதைக் கட்டாயமாக்க வேண்டும். உணவின் தரத்தைக் கண்காணிக்கவும், உணவுக் கலப்படத்தைத் தவிர்க்கவும் சுகாதார அதிகாரிகள் முறையான இடைவெளிகளில் ஆய்வு செய்து தரச்சான்றிதழ் வழங்க வேண்டும். இவற்றில் குறைபாடு காணப் படுமானால், கடையின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். அப்போதுதான் சாலையோர உணவுக்கடைகள் மூலம் நம் ஆரோக்கியம் கெடுவதைத் தடுக்க முடியும்.
-டாக்டர் கு.கணேசன்மருத்துவ இதழியலாளர்ராஜபாளையம்.gganesan95@gmail.comWe use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X