புதுடில்லி: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம், மூன்றாவது வாரத்தில் துவங்கும் என, தகவல் வெளியாகியுள்ளது. பார்லிமென்ட் வட்டாரங்கள் கூறியதாவது: பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர், ஜூலை, 18ல் துவங்கி, ஆகஸ்ட், 13ல், நிறைவடையக் கூடும் என தெரிகிறது. மழைக்காலக் கூட்டத்தொடர் கூடும் தேதியை முடிவு செய்ய, வரும், 29ல், பார்லிமென்ட் விவகாரங்களுக்கான, கேபினட் குழு கூடவுள்ளது. இக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். ராஜ்யசபாவில், ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு ஆதரவு பெருகி வருகிறது. மம்தா தலைமையிலான திரிணமுல் காங்., ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது. இவ்வாறு பார்லிமென்ட் வட்டாரங்கள் கூறின. ஜி.எஸ்.டி., மசோதா குறித்து, நிதியமைச்சர் ஜெட்லி சமீபத்தில் கூறுகையில், 'ஜி.எஸ்.டி., மசோதாவை நிறைவேற்ற, தமிழகம் தவிர, மற்ற அனைத்து மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன' என்றார். இதனால், இம்மசோதா, மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் வாய்ப்புள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE