'நாங்கல்லாம் பாஸ்; நீங்கல்லாம் பெயில்!'
சட்டசபையில் நேற்று விவாதம் நடந்தபோது, காங்., தலைவர் கே.ஆர்.ராமசாமி, சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலைப் பற்றி புள்ளி விவரம் வாசித்தார். அ.தி.மு.க., 1.76 கோடி ஓட்டுகள் பெற்றதாகவும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, 1.75 கோடி ஓட்டு பெற்றதாகவும் கூறி, சதவீத அடிப்படையில் இரண்டு கட்சிகளுக்கான வித்தியாசம், 1.1 மட்டுமே என்றார். அடுத்த நொடியிலேயே, ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் பன்னீர்செல்வம் எழுந்து, 'அதிக சதவீதம் ஓட்டுகள் பெற்றதால், நாங்கள் பாஸ்; நீங்கள் பெயில்' என்றார். சபையில் சிரிப்பலை எழுந்தது!
ஆசிரியர் கவுன்சிலிங் தேதி எப்போது?
ஆசிரியர் கவுன்சிலிங்கில் வெளிப்படைத்தன்மை வேண்டுமென, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்; விவாதம் தி.மு.க.,வை எதிர்த்துத் திரும்பியதால், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், கவுன்சிலிங் தேதி குறித்து மீண்டும் நினைவுபடுத்தினார். அதற்கு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வீரமணி, ''புதிய ஆட்சி அமைந்துள்ளது; புதிய அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார். விரைவில் தேதியை முதல்வர் அறிவிப்பார்,'' என, பதிலளித்தார்.
88 ஆயிரம் மின் இணைப்புகள்
தமிழகத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், கிட்டத்தட்ட, 88 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, காங்., சட்டசபை தலைவர் கே.ஆர்.ராமசாமியின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த, மின் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
87 கடிதங்கள்! : தமிழக மீனவர்களிடம் இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ள படகுகளை மீட்கக் கோரி, தி.மு.க., - எம்.எல்.ஏ., கார்த்தி வலியுறுத்திப் பேசுகையில், மீனவர்கள் நலனுக்காக, முதல்வர் ஜெயலலிதா, இதுவரை, 87 கடிதங்களை, பிரதமருக்கு எழுதி உள்ளதாக, மீன் வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு
சட்டசபையில், கவர்னர் உரை மீதான விவாதத்தில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், பகல், 12:45 மணிக்கு, தன் பேச்சை துவக்கினார். அவர் பேசும்போது, அமைச்சர்கள் குறுக்கிட்டு, நீண்ட விளக்கம் அளித்தனர். இறுதியாக ஸ்டாலின், சட்ட சபை தேர்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து பேசினார். அதை சபாநாயகர் தனபால், சபை குறிப்பில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஸ்டாலின் தலைமையில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். சபாநாயகர் தனபால், ''நாளை காலை, 10:00 மணிக்கு சபை மீண்டும் கூடும்,'' என, அறிவித்துவிட்டு புறப்பட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி எம்.எல்.ஏ.,வும், 'நாங்களும் வெளிநடப்பு செய்கிறோம்; பதிவு செய்து கொள்ளுங்கள்' எனக் கூறியபடி புறப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE