கோஷ்டி அரசியல் நடத்தியதாக, தன் மீது குற்றஞ்சாட்டிய இளைஞர் அணி நிர்வாகியை, பின்னணியில் இருந்து துாண்டிவிட்ட முக்கிய பிரமுகர் யார் என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதால், கட்சி நிர்வாகிகளிடம், த.மா.கா., மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், த.மா.கா., சார்பில் இன்று நடைபெற உள்ள, இப்தார் விருந்தில், கட்சி தலைவர் வாசனும், ஞானதேசிகனும், ஒன்றாக கைகோர்ப்பரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னையில் நடந்த த.மா.கா., இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாநில நிர்வாகி ஒருவர், 'ஞானதேசிகன் கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்' என்ற விமர்சனத்தை பகிரங்கமாக தெரிவித்தார். அதற்கு, 'என்ன ஆதாரம் இருக்கிறது?' எனக் கேட்டு, மேடையில் இருந்த தண்ணீர் பாட்டிலை துாக்கி வீசி விட்டு, கோபமாக
ஞானதேசிகன் வெளியேறினார். ஞானதேசிகனை விமர்சித்த இளைஞரணி நிர்வாகி மீது, 'சஸ்பெண்ட்' நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநில இளைஞரணி தலைவர் யுவராஜாவிடம், கட்சியின் தலைவர் வாசன் வலியுறுத்தினார். இதையடுத்து, யுவராஜா, சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ஞானதேசிகன் வீட்டிற்கு சென்று பேசினார். 'என்னை விமர்சித்த இளைஞரணி நிர்வாகி மீது, எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். ஆனால், அவரை விமர்சிக்க வைத்த பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளி யார் என்பது, தனக்கு தெரிந்தாக வேண்டும்' என, ஞானதேசிகன் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று, தென் சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, மதுரை, திண்டுக்கல் போன்ற பல மாவட்ட நிர்வாகிகள், ஞானதேசிகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'நீங்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். காங்., அல்லது அ.தி.மு.க.,வில் நீங்கள் இணைந்தால், நாங்களும், உங்களுடன் இணைவதற்கு தயாராக இருக்கிறோம்' கூறியுள்ளனர். அதற்கு, ஞானதேசிகன், 'நீங்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். நான் எந்த கட்சிக்கும் ஓடவில்லை. த.மா.கா.,வில் தான் தொடர்ந்து நீடிக்கிறேன். எனக்கும், வாசனுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து தான் செயல்படுகிறோம்' என, கூறியுள்ளார். இன்று மாலை, 5:00 மணிக்கு, த.மா.கா., சார்பில் இப்தார் விருந்து நிகழ்ச்சி, சென்னையில் உள்ள, ஒரு ஓட்டலில் நடைபெற உள்ளது. அதில் வாசன் பங்கேற்கிறார். ஞானதேசிகனும் பங்கேற்க வேண்டும் என, அவருக்கும்
அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஞானதேசிகன் பங்கேற்பாரா, புறக்கணிப்பாரா என்ற கேள்வி, கட்சியினரிடம் எழுந்து உள்ளது.
- நமது நிருபர் -