சென்னை: கவர்னர் உரை என்பது அரசின் உரை தான் என கடந்த காலத்தில் கருணாநிதி கூறியுள்ளார் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பேசி வருகிறார்.
அவர் பேசியதாவது: இரண்டாவது முறையாக என்னை முதல்வராக்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்கள் சக்தியை கொண்டு கடந்த காலத்தில் செயல்பட்டதால் தான் மக்கள் மீண்டும் ஆட்சியை வழங்கியுள்ளனர். மக்கள் நிம்மதியாக வாழ பல திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. இதனால் தான் மக்கள் மீண்டும் ஆட்சியை வழங்கியுள்ளனர். நல்ல திட்டங்களை அறிவார்ந்த மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். சட்டசபையில் ஸ்டாலின் பேசும் போது, கவர்னர் உரை அரசின் உரை எனக்கூறினார். கவர்னர் உரை என்பது அரசின் உரை என கருணாநிதி முன்னரே கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முறையாக கடன் செலுத்தும் விவசாயிகளுக்கு தொடர்ந்து கடன் மானியம் வழங்கப்படும். பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான வேளாண் துறைக்க கவனம் செலுத்தப்படுகிறது. இதனால் தான், தி.மு.க., ஆட்சி காலத்தை விட எனது ஆட்சியில் உணவு தானிய உற்பத்தி 63 சதவீதம் அதிகரித்துள்ளது. நுண்ணுயிர் பாசனத்திற்கு 100 சதவீத மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலம் ரூ.2,870 கோடி மதிப்பில் 5,693 ஏரிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. 198 ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன. 37 இடங்களில், கடல்அரிப்பை தடுக்க ரூ.116 கோடியில் தூண்டில் வளைவு திட்டம் அமைக்கப்பட்டு வருகிறது. உழவர் பாதுகாப்பு திட்டம், இலவச ஆடு மாடு வழங்கும் திட்டம் தொடரும். 60 ஆயிரம் பேருக்கு இலவச கறவைப்பசு வழங்கப்பட்டுள்ளது. 7 லட்சம் பெண்களுக்கு செம்மறி மற்றும் வெள்ளாடு வழங்கப்பட்டுள்ளது. எனது ஆட்சியில் 1406 கால்நடை மருத்துவமனை துவங்கப்பட்டுள்ளது.
54 புதிய கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. பள்ளி இடைநிற்றல் கடந்த 5 ஆண்டில் 11 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக குறைந்துள்ளது. தொடக்க கல்வி சேர்க்கை கடந்த 5 ஆண்டுகளில் உயர்ந்துள்ளது. உயர்கல்வியில், இந்தியாவிலேயே தமிழகம் 44. 8 சதவீதத்துடன் முதலிடம் வகிக்கிறது. டில்லிக்கு அடுத்த படியாக சென்னையில் மெட்ரோ ரத்த வங்கி அமைய உள்ளது. தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மி்ன்வெட்டு இல்லை.
குற்ற நிகழ்வுகள் குறைந்து தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. தி.மு.க., ஆட்சியை விட அ.தி.மு.க., ஆட்சியில் குற்றநிகழ்வு குறைந்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்பு குழு அமைக்க பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு முழு வெற்றி கிடைக்கும் என்பதில் அதிக நம்பிக்கையுள்ளது என்றார்.
கச்சத்தீவை கொடுத்த பிறகு தான் தனக்கு தெரியும் என கருணாநிதி கூறினார். கச்சத்தீவு தொடர்பாக கருணாநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கச்சத்தீவு பற்றி சட்டசபையில் பேசாமல், வெளியில் இருந்து பேசுகிறார். கேள்விகளுக்கு பயந்து தி.மு.க., வினர் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டுள்ளனர். கச்சத்தீவு பிரச்னையை எடுத்தாலே தி.மு.க.,வினர் ஓடுகின்றனர். கச்சத்தீவு விவகாரத்தில் வழக்குப்போடப்போவதாக வாஜ்பாய் சொல்லியும் கருணாநிதி ஏன் முன் வரவில்லை. கச்சத்தீவு குறித்து பதில் அளிக்க கருணாநிதியை திமுகவினர் சட்டசபைக்கு அழைத்து வர வேண்டும். திமுக தலைவர் யார் என்பதில் ஸ்டாலின், கருணாநிதிக்குள் குழப்பம் இருக்கிறது என்றார்.
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக கருணாநிதிக்கு ஜெ., கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வினர் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.