ஐரோப்பிய யூனியனில் இருந்து, பிரிட்டன் வெளியேற வேண்டும் என்ற பொது ஓட்டெடுப்பின் முடிவு, உள்நாட்டு அரசியலிலும், உலக அளவில் பொருளாதார குறியீடுகளிலும், அதீத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
உடனடியாக இந்திய பங்கு மற்றும் பணச் சந்தைகளிலும் இது எதிரொலிக்கிறது. என்றாலும், இரு நாட்டு பொருளாதார உறவுகளை மேம்படுத்தவும், இது உதவலாம்.பிரிட்டன் மக்களின் இந்த முடிவு, எதிர்பார்க்காதது அல்ல; மாறாக, பொது ஓட்டெடுப்பிற்கான பிரசாரம் துவங்கிய நாளில் இருந்தே வெளிவந்த கருத்து கணிப்புகள், மாறி மாறி ஆதரவு- மற்றும் எதிர்ப்பு நிலைகளையே, தொடர்ந்து பிரதிபலித்து வந்துள்ளன.
தற்போது, பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு செய்திருப்பது, பங்கு மற்றும் பணச் சந்தை குழப்பங்களுக்கு மகுடம் சூட்டுவதாக இருக்கிறது. ஆனால், அவரது முடிவே கூட, சந்தைகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து, அவற்றை சமநிலைப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தி விட முடியும். கேமரூனின் இந்த முடிவு காரணமாக, பிரிட்டனில் மீண்டும் பார்லிமென்ட் தேர்தல் நடக்கலாம். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர வேண்டும் என்றே, அவர் ஆதரவு திரட்டினார். ஆனால், பொது ஓட்டெடுப்பில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, பதவி விலக அவர் முடிவெடுத்து விட்டார்.
பொது ஓட்டெடுப்பு, கேமரூனின் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் எதிர் அணியான தொழிலாளர் கட்சியை இரண்டாக பிரித்துள் ளது. எனவே, அடுத்து பார்லி., தேர்தல் நடைபெற்றால், அதில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று உடனடியாக சொல்லி விட முடியாது.
பிரிட்டனின் முக்கிய அங்கமான இங்கிலாந்தில், ஐரோப்பிய யூனியனில் தொடர்வதற்கு எதிராக, அதிகமான மக்கள் ஓட்டளித்துள்ளனர். ஆனால், நாட்டின் பிற பகுதிகளான ஸ்காட்லாந்து, அயர்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய பகுதிகளில், பெருவாரி மக்கள், ஆதரவு ஓட்டுகளை அளித்துள்ளனர்.
சூரியன் அஸ்தமிக்காத நாடு: அண்மை காலத்தில், பிரிட்டனில் இருந்து ஸ்காட்லாந்து பிரிய வேண்டும் என்ற கருத்து கணிப்பிலும், இது போன்று சிறிய ஓட்டு வித்தியாசத்திலேயே அந்த பகுதி, நாட்டின் பிற பகுதிகளுடன் தொடர்ந்து வருகிறது. தற்போதைய ஓட் டெடுப்பை தொடர்ந்து, எதிர்வரும் ஆண்டு களில் அதே கோரிக்கையும், போராட்டமும் மீண்டும் உயிர் பெறலாம். அவ்வாறு நடக்குமேயானால், 'சூரியன் அஸ்தமிக்காத நாடு' என்று தன்னை போற்றிக் கொண்டிருந்த பிரிட்டனின் தற்போதைய
நிலையே கேள்விக்குறி ஆகிவிடும்.
ஆனால்,
நாட்டின், இங்கிலாந்து பகுதி மக்களிடையே, இன்னமும் தாங்கள் உலகை ஆண்டு
கொண்டு இருக்கிறோம் என்ற மனப்பான்மை பெரும்பாலும் தொடர்ந்து வருகிறது. இதன்
காரணமாகவும், அந்த நாட்டில் மன்னராட்சி ஒழிப்பது குறித்த சர்ச்சை
அவ்வப்போது உயிர் பெற்றாலும், எந்த முடிவை எடுப்பதிலும், தடுமாற்றமே
நிலவுகிறது.
மன்னராட்சி போலவே, இங்கிலாந்து மக்கள் தங்களது
நாணயமான, 'பவுண்ட்' மீது மட்டற்ற நம்பிக்கையும், நேசமும் கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரானாலும், பிரிட்டன் மட்டுமே, அதன் நாணயமான,
'யூரோ'-விற்கு மாறாததும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பியயூனியனில் பிரிட்டன் தொடர்வதை எதிர்க்க, பிற காரணங்களும் உள்ளன. ஒன்றிய உறுப்பினர்களாக உள்ள கிரீஸ், போர்ச்சுகல் போன்ற நாடுகள், தங்களது பொருளாதாரத்தை தாறுமாறாக முன்னெடுத்துச் சென்றதால் ஏற்பட்ட பிரச்னைகள், இங்கிலாந்து உள்ளிட்ட பிற ஒன்றிய நாடுகளையும், வெகுவாக பாதித்தன.
சோவியத் யூனியன் பிளவுபட்டதை தொடர்ந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள், ஒன்றியத்தில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை உறுப்பினர்களாக சேர்த்த விவகாரம், அரசியல் ரீதியாக வலு சேர்த்தாலும், அந்த அமைப்பின் பொருளாதார பின்னடைவிற்கு வழிவகுத்து விட்டது என்று, பிரிட்டன் வாழ் மக்கள் கருதினர். அவர்களை பொறுத்தவரை, புதிய உறுப்பினர்களை சேர்த்ததன் மூலம், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற பிரிட்டனின் பரம எதிரி நாடுகள், ஐரோப்பிய அரசியலில், தங்கள் நாட்டை தனிமைப்படுத்துவதாகவும் கருதினர்.
இது தவிர, கடந்த நுாற்றாண்டின் பிற்பகுதியில், மார்கரெட் தாட்சர் பிரதமராக ஆவது வரை, பிரிட்டனின் தொழிற்சங்கங்கள், அந்நாட்டு அரசியலையும், பொருளாதாரத்தையும் ஆட்டிப் படைத்தன. தாட்சரின் அதிரடி வைத்தியம் காரணமாக, பிரிட்டனின் பொருளாதாரம் வெகுவாக முன்னேறியது. அதுவே, பிற ஐரோப்பிய நாட்டு அரசியல் மற்றும் அரசு தலைமை
களுக்கும், முன்னோடியாக அமைந்தது.
தற்போது, ஐரோப்பிய யூனியனில் தொடர்வதன் மூலம், அரசியல் மற்றும் பொருளாதார பிரச்னைகளில், யூனியன் நாடுகளின் தொழிற்சங்க கூட்டமைப்புகளின் சர்வாதிகாரத்தில், பிரிட்டனின் பொருளாதாரமும் சிக்கிச் சீரழியும் என்று, பல அரசியல் தலைவர்களும், பொருளாதார நிபுணர் களும் கூட கருதுகின்றனர்; இதே கருத்தை, பொது மக்களில் பலரும் பிரதிபலிக்கின்றனர். இதனால் தான், பிரிட்டன் மக்கள், யூனியனில் இருந்து வெளியில் வர விரும்புகின்றனர்.
இந்தியாவில் தாக்கம்: எதிர்பார்த்தது போலவே, பிரிட்டன் மக்களின் முடிவு, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் பங்கு மற்றும் பணச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது. அந்த நாட்டு மக்களின் முடிவு, யூனியனில் தொடர்வதற்கு ஆதரவாக
இருந்திருந்தால், இந்திய பங்கு சந்தையிலும் ஆதரவான சூழ்நிலை தோன்றி
இருக்கும். இரண்டுமே, பங்குச்சந்தைகளுக்கே உரிய, 'மனநிலை' பொறுத்த
முடிவாகவே இருந்திருக்கும். அதுவே ஓரிரு நாட்களிலோ, வாரங்களிலோ மாறி
விடலாம்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான தாராள வர்த்தக உடன்படிக்கை, பல
ஆண்டுகளாக பேச்சு நிலையிலேயே தொடரு கிறது. காரணம், ஒன்றியத்தின் உறுப்பு நாடுகள் பலவும், பல விதமான எதிர்பார்ப்பு களை முன் வைப்பது தான். சரித்திர மற்றும் சமகால காரணங்களுக்காக, இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில் முதலீடு, எப்போதுமே முன்னேற்ற பாதை யிலேயே இருந்து வரு கிறது. தற்போதைய பிரிட்டனின் முடிவால், இதை வேகப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது.
இரண்டாவது உலக போருக்கு பின், பிரிட்ட னின் பவுண்ட், தன் சர்வதேச கரன்சி மதிப்பை அமெரிக்க டாலரிடம் இழந்தது. அதை மீண்டும் ஐரோப்பாவிற்கு மீட்டெடுக்கவே ஒன்றிய நாடுகள், 'யூரோ'வை தோற்றுவித்தன. ஆனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் சீரழிந்த பொருளாதாரத்தை துாக்கி நிறுத்துவதிலேயே, 'யூரோ' தன் வலிமையை வெகுவாக இழந்தது.
தற்போது, யூனியனில் இருந்து வெளியேறு வதால், பிரிட்டன் தன் கரன்சிக்கு மீண்டும் உயிர் கொடுக்க முடியும் என்று, இந்தியா விலும் பல வல்லுனர்கள் கருதுகின்றனர். இதை, இந்தியாவிற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், இந்தியாவுக்கும், பிரிட்டனுக்கும் இடையே பலமான வர்த்தக உறவு உள்ளது.
பிரிட்டன், ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவதால், உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்; அதே சமயம், இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டு விடாமல் இருக்க, அரசு ஆவன செய்துள்ளதாக, மத்திய நிதி செயலர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
அது எவ்வாறானாலும், கடந்த வார கடைசியில், தான் ரிசர்வ் வங்கி கவர்னராக தொடரப் போவது இல்லை என்று ரகுராம் ராஜன் கூறிய போது, அந்த அறிவிப்பு இந்திய பங்குச்சந்தை மற்றும் அன்னிய முதலீடுகளை பாதிக்காமல், மத்திய அரசு பார்த்துக் கொண்டது; ராணுவம் மற்றும் மருந்து போன்ற துறைகளில், 100 சதவீத அன்னிய முதலீடுகளை அனுமதிப்பது உள்ளிட்ட, அரசின் பல்வேறு அறிவிப்புகள் பிரிட்டன் ஓட்டெடுப்பு முடிவை எதிர்கொள்ளவே தயாரிக்கப்பட்ட கொள்கை முடிவுகள் என்று கருத இடமிருக்கிறது. அதுவும், ரகுராம் ராஜனின் முடிவை எதிர்கொள்வதற்காக, அரசு சில நாட்கள் முன்னதாகவே, அதிரடியாக வெளியிட்டதாக கருதவும் இடமிருக்கிறது.
- என்.சத்தியமூர்த்தி -
இயக்குனர், அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (7)
Reply
Reply
Reply