'நாடெங்கும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளுக்கு, அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வின் அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பு வெளியான உடனே, தமிழகத்திலுள்ள அரசியல் தலைவர்கள், 'உச்சநீதிமன்ற தீர்ப்பு, தமிழக மாணவர்களின் உரிமையை பறிப்பதாக உள்ளது' என, நீலிக்கண்ணீர் வடிக்க துவங்கி விட்டனர். ஒரு போட்டியாளரின் தகுதியை தீர்மானிக்க, நுழைவுத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அல்லாத மற்றொரு சிறந்த அளவுகோல் கண்டிப்பாக இருக்க முடியாது. கிராம நிர்வாக அதிகாரி பணிக்கும், தமிழ்நாடு தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 எனப்படும், எஸ்.எஸ்.எல்.சி.,க்கான கீழ்நிலை பணிகளுக்கும் கூட நுழைவுத் தேர்வு மூலம் தான், தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு தகுதியான கிராம அதிகாரியை தேர்வு செய்வதற்கே நுழைவுத் தேர்வு தேவைப்படும்போது, உயிர் காக்கும் மருத்துவம் பயிலும் மாணவருக்கு, தகுதித் தேர்வு தேவையில்லை என்று கூறுவது அபத்தமல்லவா? தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த நுழைவுத் தேர்வு, கிராமத்து மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி, 10 ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசால் நிறுத்தப்பட்டு விட்டது. நகர்ப்புற பள்ளிகளுக்கும், கிராமத்துப் பள்ளிகளுக்கும் பிளஸ் 2 பாடத் திட்டத்திலும், பயிற்றுவிக்கும் முறையிலும் யாதொரு வித்தியாசமும் இல்லாதபட்சத்தில், நுழைவுத் தேர்வு, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்னும் வாதம் ஏற்புடையதல்ல. கிராமத்து மாணவர்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்தால், அங்குள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளைப் பெருக்க வேண்டும். நுழைவுத் தேர்விற்கான சிறப்புப் பயிற்சியை கிராமப்புற மாணவர்கள் பெற வழி வகுக்க வேண்டும். அதை விடுத்து, அந்த மாணவர்களின் திறமையையும், ஆசிரியர்களின் தகுதியையும் குறைத்து எடை போடுவது நியாயமற்றது. ஏற்கனவே, தமிழக மாணவர்களிடமிருந்து இந்தி படிக்கும் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்த இங்குள்ள தமிழ்ப் பற்றாளர்கள், தேசிய நீரோட்டத்தில் பயணிக்க விடாமல் நம் மாணவர்களைத் தடுப்பதில், தீவிர முனைப்பைக் காட்டி வருகின்றனர்.
வேலுார் சி.எம்.சி., புதுச்சேரி ஜிப்மர், டில்லி எய்ம்ஸ் போன்ற தரமான மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு, நம் மாணவர்கள் அதிக அளவில் போட்டியிட முடியாமல் போவதற்கு இதுவும் ஒரு காரணம். நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில் நுழைவுத் தேர்வு நடைமுறையில் இருக்கும்போது, இங்கு மட்டும் நுழைவுத் தேர்வு ரத்து செய்திருப்பதால், பிற மாநில மாணவர்களோடு போட்டியிடும் தகுதியை நம் மாணவர்கள் இழக்க நேரிடுகிறது. ஒரு காலத்தில், தமிழகத்தில், எம்.டி., - எம்.எஸ்., போன்ற மருத்துவ பட்ட மேல்படிப்புகளுக்கு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தான், மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால், இன்று நாடு முழுவதும்,
அந்தந்த மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு இல்லாமல், குறைந்த செலவில், ரஷ்யா, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில், எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறும் நம் மாணவர்கள், இந்திய மருத்துவ கவுன்சிலால் நடத்தப்படும் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு தான், இங்கு மருத்துவர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். நாட்டின் கவுரவம் மிக்கதாக, கடினமானதாக, கவர்ச்சிகரமானதாக கருதப்படும், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., மற்றும் ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில் நுட்பக் கல்லுாரிகளுக்கான நுழைவுத் தேர்வுகளில், சமீப காலமாக தமிழகம் மிகவும் பின்தங்கி இருப்பது வேதனை அளிக்கும் விஷயம். கடந்த, 2015ல், ஐ.ஏ.எஸ்., தேர்வில், தமிழகத்திலிருந்து, பிரதான தேர்வில் தேர்ச்சி பெற்று, நேர்முகத் தேர்வுக்கு செல்லும் தகுதி பெற்றோர், 263 பேர். 2010ல், இந்த எண்ணிக்கை, 350க்கும் மேலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் ஐ.ஏ.எஸ்., நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றோரின் எண்ணிக்கையில், 2009ல், 14 சதவீதமாக இருந்த தமிழரின் பங்களிப்பு, 2015ல், வெறும், 6 சதவீதமாக சரிந்திருக்கிறது. இதில், சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கல்வியில் பின் தங்கிய மாநிலம் என்று முத்திரை குத்தப்பட்ட பீஹாரிலிருந்து, 2015ல், பிரதான தேர்வில் வெற்றி பெற்றிருப்பவர்களின் எண்ணிக்கை, 1,078; அதாவது, தமிழகத்தை விட நான்கு மடங்கு. அதேபோல், ஜே.இ.இ., எனப்படும், ஐ.ஐ.டி.,க்கான பொது நுழைவுத் தேர்விலும், தமிழக மாணவர்களின் பங்களிப்பு திருப்திகரமாக இல்லை. அண்டை
மாநிலமான ஆந்திரா மாணவர்களின் சாதனையில், 50 சதவீதம் கூட, நம் மாணவர்கள் எட்டவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.சென்ற ஆண்டு, ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் முதல் ஆயிரம் ரேங்க் எடுத்தவர்களின் தர வரிசையை அலங்கரித்த, ஆந்திரப் பிரதேச மாணவர்கள், 193 பேர். ஆனால், அந்த பட்டியலில் இடம் பெற்ற தமிழக மாணவர்களின் எண்ணிக்கையோ, 41 மட்டுமே.தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மொத்த எண்ணிக்கையில், 14.7 சதவீதம் ஆந்திராவைச் சேர்ந்தவர்களும், 2.5 சதவீதம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். இந்தப் பந்தயத்தில் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை, பீஹார் மாணவர்கள் நிரூபிக்கத் தவறவில்லை; கயா நகருக்கு அருகில் உள்ள பங்கரோன் என்ற ஒரே கிராமத்தைச் சேர்ந்த, ஒரு பெண் உட்பட, 18 மாணவர்கள் ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் சாதனை புரிந்திருக்கின்றனர். இந்த, 18 பேரும் நகரவாசிகளல்ல; பக்கா கிராமவாசிகள். ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில், 60 ஆண்டுகளில், 2001ல் மட்டும் ஒரே ஒரு முறை இந்திய அளவில் முதல் ரேங்க் எடுத்து சாதனை புரிந்திருக்கிறது தமிழகம். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பது குறைந்து, 'எங்களுக்கு நுழைவுத் தேர்வே வேண்டாம்' என, கூக்குரலிடும் அளவுக்கு நம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருக்கிறோம். தமிழக மாணவர்களின் செயல்திறன் இந்த அளவுக்குக் குறைந்ததற்கு
பலவிதமான காரணங்கள் கல்வித் துறை நிபுணர்களால் முன் வைக்கப்படுகின்றன.முதலாவதாக, இங்குள்ள கல்வியின் தரம் மற்றும் பாடத் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு இணையாகவோ, சி.பி.எஸ்.இ.,க்கு நிகராகவோ இல்லை. புத்தகத்தில் உள்ளவற்றை கரைத்துக் குடித்து, விடைத்தாளில் அப்படியே வாந்தி எடுக்க வைக்கும் கல்வித் திட்டம், மாணவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கச் செய்து விடுகிறது. ஆந்திரா மாநில பிளஸ் 2 பாடத் திட்டம், கிட்டத்தட்ட, சி.பி.எஸ்.இ.,க்கு நிகராக இருப்பதால், அதிக அளவில், ஆந்திர மாணவர்கள், ஐ.ஐ.டி., தேர்வுக்கு போட்டியிடுகின்றனர். தமிழகத்திலிருந்து, ஐ.ஐ.டி., தேர்வில் வெற்றி பெற்ற, 451 பேரில், மாநிலப் பாடத் திட்டத்தின் மூலம் சென்ற, 33 பேரை தவிர்த்து, மீதமுள்ள அத்தனை பேருமே, சி.பி.எஸ்.இ., வழிக் கல்வி பயின்றவர்கள். தமிழகத்தில், 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகள் இருப்பதால், பிளஸ் 2 தேர்வில் பாஸ் மார்க் எடுத்தாலே ஏதாவது ஒரு கல்லூரியில், பி.இ., சீட்டு கிடைத்துவிடும் என்ற சூழ்நிலையில், கீழ்த்தட்டு மாணவர்கள், ஐ.ஐ.டி., பற்றி சிந்திக்கவே அஞ்சுவதாகவும் கல்வியாளர்கள் கருதுகின்றனர். தவறான கல்விக் கொள்கையாலும், இங்குள்ள பாடத் திட்டத்தாலும் பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாம் எந்த அளவுக்குப் பின் தங்கி இருக்கிறோம் என்பதற்கு, இதைவிட வேறு சான்று தேவை இல்லை. கேரளாவில் உள்ளதுபோல், 50:50 என்ற அடிப்படையில் பிளஸ் 2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களையும், நுழைவுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் கணக்கிலெடுத்து தர வரிசைப்
பட்டியல் வெளியிட வேண்டும். கல்வியின் தரத்தை உயர்த்தி, தேசிய அளவில் நடைபெறும் உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தி, அதற்கான பயிற்சியையும் வழங்க வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளுக்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு, இன்றைய சூழ்நிலையில் நடைமுறையில் சாத்தியமில்லை என்றாலும், மாநில அளவில் கண்டிப்பாக நுழைவுத் தேர்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும். தேசிய அளவில் தமிழன் தலை நிமிர்ந்து நிற்கவும், சர்வதேச அரங்கில் தமிழனின் புகழ் ஓங்கவும் கல்வியின் தரத்தை உயர்த்த ஆட்சியாளர்கள் தீர்க்கமான முடிவெடுப்பர் என நம்புவோம்.
டி.ராஜேந்திரன் , மருத்துவர், சமூக ஆர்வலர்
இ-மெயில்: rajt1960@gmail.com