ஏணியும் தோணியும் இளைஞனின் தேவை| Dinamalar

ஏணியும் தோணியும் இளைஞனின் தேவை

Added : ஜூன் 27, 2016 | கருத்துகள் (1)
ஏணியும் தோணியும் இளைஞனின் தேவை

'இன்றைய இளைஞர்கள் ஆடம்பரத்தையே விரும்புகிறார்கள், பெரியவர்களை மதிப்பதில்லை, பெற்றோருடன் வாதிடுகின்றனர், ஆசிரியர்களை மதிப்பதில்லை, வீண்வாதம் செய்கின்றனர்'இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் மீது பெற்றோர், பெரியோர்கள், ஆசிரி யர்கள் கூறும் குற்றச்சாட்டுகள் இவை. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அனைத்தும் இளைஞர்கள் மீது சுமத்துவது சரியா? பேச்சு, நடத்தை, செயல், பண்பாட்டு அடிப்படையில் பல குற்றச்சாட்டுகளை நாம் கூறினாலும் அவை நம் இளைஞர்களின் பிறவிக் குணமல்ல. இளைஞர்கள் மீதான இந்த குற்றச்சாட்டுகள் சரியென்றால் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்திற்கு யார் அடிப்படைக் காரணம்? அவர்களிடம் வேறு எந்த நற்குணங்களும் இல்லையா? என்ற இந்த இரண்டு கேள்விகள் நாம் கேட்க வேண்டியது அவசியம்.
சுய பரிசோதனை :'வீடு நல்ல முறையில் இருக்க தாய், தந்தையர் பங்கே முக்கியம். சமுதாயம் சிறந்திட ஆசிரியர்கள் மற்றும் பெரியோர்களே சிறந்த ஆதாரம். நாடு நல்ல நிலையில் வளர்ந்திட இளைஞர்களே ஆதாரம்' என்கிறார் வீரத்துறவி விவேகானந்தர்.மொத்தத்தில் இளைஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என்ற இந்த மூவர் கூட்டணிதான் ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதாரம். குழந்தைகளைப் பெற்று வளர்க்கிறோம். ஆனால் நாம் நல்ல பெற்றோர்களாக இருக்கிறோமா?நன்றாக படித்து ஆசிரியராகிவிட்டேன்; ஆனால் நான் நல்ல ஆசிரியராக இருக்கிறேனா? நல்ல கல்வி கற்று நிறைய சம்பாதிக்கிறேன்;- ஆனால் நான் சமூக பிரக்ஞையுடைய இளைஞனாக இருக்கிறேனா?இதுபோன்ற அடிப்படைக் கேள்விகளை நாம் நம்முன் கேட்க தவறியதால் தான், இன்றைய இளைய சமுதாயம் சீரழிந்துவிட்டது என நம்மால் சட்டென சொல்லிவிட முடிகிறது. முதலில் நம்மை சுயப்பரிசோதனை செய்து கொள்ளாமல் இருப்பதினால் தான் சுலபமாக எந்த பிரச்னைக்கும் மற்றவர்களை கைகாட்டி தப்பித்துவிட முடிகிறது.
பெற்றோர் கடமை உயிரெழுத்து சொல்லித்தரும் பள்ளி முதல், வாழ்வாதாரத்திற்கு தேவையான தொழிற்கல்வி கற்றுத்தரும் கல்லூரி வரை, பணத்தை செலவழித்து நல்ல கல்வியை பிள்ளைகளுக்கு (வாங்கி) கொடுப்பது தங்கள் தலையாய கடமை என எண்ணுகின்றனர் பெற்றோர். அது மட்டுமல்ல அவர்களின் கடமை. இன்றைய கணினி யுகத்தில் என்ன படிப்பு வேண்டுமானாலும் படிக்கலாம்; ஆனால் புத்தகப் படிப்பைத் தாண்டி தனித்திறன் உள்ளவர்களுக்கே வேலை. எனவே கல்வியை மட்டும் தம் பிள்ளைகளுக்கு வழங்குவதுடன் பெற்றோர்கள் நில்லாமல் அவர்களின் தனித்திறனைக் கண்டறிந்து வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல கல்வியோடு உடல் ஆரோக்கியம், உறவுகளின் மகத்துவம், தியாகம், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, பகிர்ந்துண்ணுதல் போன்ற நற்குணங்களை இளைஞர்களுக்கு வழங்குவோம். நானெல்லாம் எங்கப்பா முன்னால நின்று பேசவே பயப்படுவேன்! என்ற பழைய வாதத்தை விடுங்கள். ஆற்றல்மிக்க எதற்கும் அஞ்சாத உங்கள் பிள்ளைகள்தான் இன்றைய சமூகத்தின் அவசரத் தேவையென அறிந்து அரசியல், சமூகம் பற்றிய ஞானத்தை அவர்களுக்கு புகட்டுங்கள். அரசியலா? உனக்கு எதுக்குடா வேண்டாத வேலை என்று சொல்வதைத் தவிர்த்திடுவோம்.இன்றைய இளைஞர்கள் காற்றாடி போல் சுதந்திரமாக வானுயர பறந்து சமூகத்தைப் புரிந்து சாதனை என்னும் இலக்கை அடைய வேண்டியவர்கள். ஆனால் கட்டுப்பாடு என்னும் நூலைப் பிடித்துக் கொண்டு இளைஞர்களின் சமூக சிந்தனைக் காற்றாடியை பறக்க விடாமல் பிடித்து வைத்திருக்கும் பெற்றோர்களும், பெரியோர்களும் மாற வேண்டியது தான் மிக முக்கியமான இன்றைய தேவை.
தடம் பதிக்கும் ஆசிரியர் :நான் சொல்வதுதான் சரி, நான் சொன்னதைச் செய், நான் சொன்னதை மட்டும் படி, கேள்விகள் எதுவும் கேட்காதே என போதிப்பவர் திறமையான ஆசிரியரா? அவ்வாறு போதிக்கும் ஆசிரியரின் பெயர் கூட விரைவில் மாணவர்களின் மனதிலிருந்து மின்னலாய் மறைந்து விடும். ஏனெனில் இன்றைய இளம் மாணவர்கள் எதிலும் எதையும் கேள்வி கேட்டு நன்கு தெரிந்த பின்னரே அவற்றை ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்களிடம் அளவற்ற ஆற்றல் உள்ளது.
அவற்றை வெளிப்படுத்த உதவும் ஒரு தடமே ஆசிரியர். மாணவர்களிடம் ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேட்கும் திறனை வளர்க்கும் ஆசிரியர் மாணவர்கள் மனதில் அழுத்தமான தடத்தைப் பதிப்பதோடு மாணவனின் வாழ்நாள் குருவாகவும் உயர்கிறார். மாணவர்கள் கேள்வி கேட்பதை பிடிக்காத ஆசிரியர்களும், அதே வேளையில் வகுப்பில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்காகவும் தனித்தனியாக சிந்திக்கும் உயர்ந்த ஆசிரியர்களும் நம் தேசத்தில் இருக்கவே செய்கின்றனர்.
'ஆசிரியர் பணியே அறப்பணி:அதற்கு உன்னை அர்ப்பணி' என்ற சொல்லிற்கேற்ப புத்தகப் படிப்பைத் தவிர விளையாட்டு, பேச்சு, எழுத்து, ஓவியம், நடனம் போன்ற பல துறைகளில் சிறந்து விளங்கும் மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கப்படுத்தி சாதனையாளராக்க, அர்ப்பணிப்புள்ள ஆசிரியர்களால் தான் முடியும். ஆற்றல்மிக்க இளைஞர்களை இந்த சமூகத்திற்கு வழங்கும் தலையாய பணி ஆசிரியர்களுடையதே.
இளைஞர் சக்தி ;இன்றைய இளைஞர்கள் பலர் தனித்திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளனர். கடந்த தலைமுறையைவிட இக்கால இளைஞர்கள் அதிக நேரம் பணிபுரிகின்றனர். மிகப்பெரிய பதவி வகித்தல், மிகப்பெரிய மனிதர்களுடன் சந்திப்பு ஆகியவற்றை சவாலாக எதிர்கொண்டு சாதனையாக்கி வருகின்றனர்.
சுந்தர்பிச்சை, நாதெள்ளா சத்யா போன்ற இளம் சாதனையாளரின் பட்டியல் மிக நீளம். எடுத்த காரியத்தில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற வேட்கை, அதற்கான தீவிர தேடல் மற்றும் உழைப்புதான் இளைஞர்களின் சக்திக்கு வலுவூட்டுகிறது. இந்திய இளைஞர்களை பொறுத்த வரை லட்சியம் மற்றும் இலக்குகளை நிர்ணயம் செய்துவிட்டால் உறுதி கொண்ட நெஞ்சனராக மாறிவிடுகின்றனர் என மேற்கத்திய நாடுகள் தம் புருவங்களை உயர்த்தி பார்கின்றன.
பெரிய செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாகவே இருந்தாலும், இளைஞனாக இருந்த போதே தேச விடுதலைப் போராட்டத்தில் கட்டாந்தரையில் படுத்துக் கிடந்தவர்தானே நமது ஜவஹர்லால் நேரு. வன அலுவலராக அரசுப் பணியில் இருந்த போதிலும், தேச விடுதலையுணர்வால் தமது பதவியைத் தூக்கியெறிந்து, தான் பெற்ற பச்சிளம் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல், ஆஷ்துரையைத் கொன்று தனது தேசக் கடமையை நிறைவேற்றி விட்டேன் என்று மனஉறுதியுடன் இம்மண்ணைவிட்டு மறைந்த வீர இளைஞன் தானே வாஞ்சிநாதன். இத்தகு தியாக இளைஞர்களின் வேட்கை, உறுதி, கடின உழைப்பு அவர்களின் வழித்தோன்றல்களிடம் மறைந்து விடுமா என்ன?
'இந்திய ராணுவப் பணிக்கு ஆட்கள் தேவை' என்ற அறிவிப்பு வந்தவுடன் காலை கதிரவன் உதிக்கும் முன்பே, மைதானத்தை நிரப்பும் இளைஞர்கள் நமது தியாக இளைஞர்களின் வாரிசுகளல்லாமல் வேறென்ன?
இளைஞர்களுக்கு விழிப்புணர்வு :சாதியுணர்வு, மதபேதம், பயங்கரவாதம் போன்ற ஆழிச்சுழல்களில் சிக்காமல் இந்த இளைஞர்களைக் காக்க தோணிகளே இன்றைய தேவை. கிரேக்க சிந்தனையாளர் சாக்ரடீஸ் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டார் என்பது நாம் அறிந்தது தான். எதற்காக தெரியுமா?
ஏன்? எப்படி? என்ற கேள்விகளைக் கேட்ட பின்பே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டியதே. சாக்ரடீஸ் போல நாமும் ஏன்? எதற்கு? என்ற கேள்வி கேட்க இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டாம். ஆனால் ஏன்? எப்படி? எதற்கு? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருக்கும் சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளித்து, கேள்விக்குறிகளாக நாம் பார்க்கும் இந்த இளைஞர் கூட்டத்தை, நாளை இவ்வுலகம் ஆச்சர்யகுறியாக பார்க்க கடமையாற்றுவோம். அன்பு நிறைந்த உள்ளத்தையும், உலகையே மாற்றவல்ல தன்னம்பிக்கையையும், இளைஞர்களிடத்தில் கொண்டு செல்ல நம்மால்தான் முடியும் என்று நம்புவோம். தடம் மாறும் இளைஞர் களுக்கு ஏணியாகவும், தோணியாகவும் இருப்போம்.-முனைவர். சி. செல்லப்பாண்டியன் அருப்புக்கோட்டை78108 41550

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X