சென்னை:மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் கொலையாளியை, சென்னை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். 'அவனை, இன்று கைது செய்து விடுவோம்' என, நம்பிக்கையும் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவர் சந்தான கோபாலகிருஷ்ணன். மத்திய அரசு அதிகாரியாக பணியாற்றிய இவர், மே மாதம் ஓய்வு பெற்றார். சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவில், குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இவரது இளைய மகள் சுவாதி, 24, செங்கல்பட்டு அடுத்த பரனுாரில், பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை பார்த்து வந்தார். இம்மாதம், 24ம் தேதி காலை, 6:30 மணிக்கு, சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மின்சார ரயிலுக்கு காத்திருந்த போது, மர்ம நபரால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
தமிழகத்தையை உலுக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வந்தனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் அருகே உள்ள கட்டடங்களின் கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, கொலையாளியை அடையாளம் கண்டனர்.
கொலையாளி, சுவாதியை கொன்ற பின், மின்னல் வேகத்தில் தண்டவாளத்தை கடந்து, சூளைமேடு வழியாக தப்பிச் செல்லும் வீடியோ ஆதாரமும் ரயில்வே போலீசாருக்கு கிடைத்தது.
கொலை நடந்த போது ரயில் நிலையத்தில் இருந்தவர்களிடம் வீடியோ ஆதாரத்தை காட்டிய போலீசார், 'அவன் தான் கொலைக்காரன்' என, உறுதி செய்துள்ளனர். எனினும் ரயில்வே போலீசாரால், அவன் பதுங்கியிருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் நேற்று, சுவாதி கொலை வழக்கு, சென்னை மாநகர போலீசாருக்கு மாற்றப்பட்டது.
திருவல்லிக்கேணி துணை போலீஸ் கமிஷனர் பெருமாள் தலைமையில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் என, 25 பேர் இடம் பெற்ற, மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளியை சுற்றி வளைக்கும் பணி துவங்கியது.
தனிப்படை போலீசார், கொலையாளி விட்டுச் சென்ற, அரிவாளில் பதிவாகி இருந்த கைரேகை மற்றும் அவன் சட்டை பட்டன், தலைமுடி ஆகியவற்றை, நவீன தொழில்நுட்ப உதவியுடன் ஆய்வு செய்து கொலையாளியின் முகவரியை கண்டுபிடித்துள்ளனர்; ஆனாலும், ரகசியம் காத்து வருகின்றனர்.
இதுகுறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:
சுவாதி கொலை வழக்கில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சூளைமேடு, சவுராஷ்டிரா தெரு வழியாக, தந்தையுடன் சுவாதி, இருசக்கர வாகனத்தில் செல்வதை நோட்டமிட்டு, மர்ம நபர் பின் தொடர்ந்து செல்லும் வீடியோ காட்சியும் கிடைத்துள்ளது. கொலையை நேரில் பார்த்த ஒருவர், கொலையாளி பற்றி துப்பு கொடுத்துள்ளார். கொலையாளி சுற்றி வளைக்கப்பட்டுள்ளான்; விரைவில் அவன் கைது செய்யப்படுவான்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
'விசாரணை சரியில்லை'போலீசாரை 'காய்ச்சிய' நீதிபதிகள்
'சுவாதி கொலை வழக்கு விசாரணையில் ரயில்வே போலீசாருக்கும், மாநகர போலீசாருக்கும் இடையே ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை' என, ஆங்கில பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியானது.குற்ற வழக்குகளை விசாரிக்கும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, பாரதிதாசன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', நேற்று காலையில் கூடியதும், பத்திரிகையில் வந்த செய்தி குறித்து அரசு வழக்கறிஞரிடம் விளக்கம் கோரியது.
போலீசார் மத்தியில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை என்றால் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தது. அரசு குற்றவியல்
வழக்கறிஞர், பிற்பகலில் உண்மை நிலவரத்தை தெரிவிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, பிற்பகலில், 'பெஞ்ச்' கூடியதும், அரசு குற்றவியல்
வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் ஆஜராகி, ''இவ்வழக்கு, நுங்கம்பாக்கம் போலீஸ்
விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது; உதவி ஆணையர் தேவராஜ் தலைமையில் குழு
அமைக்கப்பட்டுள்ளது; துணை ஆணையர், விசாரணையை கண்காணிக்கிறார். 'சைபர்
கிரைம்' போலீசார், சி.பி.சி.ஐ.டி., போலீசார், புலன் விசாரணைக்கு உதவி
செய்கின்றனர்,'' என்றார்.இதையடுத்து, நீதிமன்றத்தில் நடந்த வாதம் வருமாறு:
நீதிபதி நாகமுத்து: எப்போது இந்த வழக்கு மாற்றப்பட்டது; வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்தது; இன்று திங்கள் கிழமை; விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக, பத்திரிகைகளில் விரிவான செய்திகள் வந்துள்ளன; விவாதங்களும் நடந்துள்ளன. பத்திரிகையில் வந்த செய்தியில், 'போலீசாரிடம் ஒருங்கிணைந்த நடவடிக்கை இல்லை' என, கூறப்பட்டுள்ளது.அரசு வழக்கறிஞர்: சம்பவ இடத்தை, டி.ஜி.பி.,யும் சென்னை மாநகர போலீஸ் ஆணையரும் பார்வையிட்டுள்ளனர். போலீசார் மத்தியில் ஒருங்கிணைப்பு உள்ளது.
நீதிபதி: புலன் விசாரணையை மாற்றுவதில் ஏன் இவ்வளவு தாமதம்; நாங்கள், காலையில் கருத்து தெரிவித்த பின் விசாரணை மாற்றப்பட்டதா?
அரசு வழக்கறிஞர்: விசாரணை இன்று மாற்றப்பட்டுள்ளது. ௨௫ போலீசார், இவ்வழக்கில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
நீதிபதி: நாங்கள் எங்கள் கவலையை தெரிவித்தோம்; பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். ரயில்வே போலீசாருக்கும், மாநகர போலீசாருக்கும் இடையே பிரச்னை உள்ளதாக செய்தி வந்ததே?அரசு வழக்கறிஞர்: அது, சரியான செய்தியல்ல; அனைவரும் ஒத்துழைக்கின்றனர்.
நீதிபதி: அப்படி என்றால் நாங்கள் திருப்தி அடைகிறோம். இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்கிறோம். போலீஸ் தரப்பில் மெத்தனம் இருப்பதாக கருதினால், தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பின், நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும்.
அரசு வழக்கறிஞர்: நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
நீதிபதி: அந்த பெண்ணின் உடல், இரண்டு மணி நேரமாக அங்கு கிடந்துள்ளது; உடலை, துணி போட்டு மறைக்கவில்லை. அப்போது, போலீசார் எங்கு இருந்தனர்? மரணமடைந்தவர்களுக்கும், கண்ணியமான உரிமை உள்ளது; அந்த பெண்ணின் மரணத்துக்கு பின்னும், அதற்கான உரிமையை மறுக்கக் கூடாது. எதற்காக, கண்காட்சி போல இரண்டு மணி நேரமாக சடலம் கிடந்துள்ளது. உரிய நடைமுறைகளை மேற்கொள்ள, ஏன் அவ்வளவு நேரமாகியது. ரயில்வே போலீஸ், உங்கள் கட்டுப்பாட்டில் தானே வருகிறது.
வழக்கை, உடனடியாக மாற்றியிருக்க வேண்டும். ரயில்வே போலீசாருக்கு, என்ன வசதிகள் உள்ளன. ரயில் நிலையத்தில் ஏன் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை. கேமராக்கள் பொருத்துவதில் என்ன கஷ்டம்?
அரசு வழக்கறிஞர்: அனைத்து ரயில் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்; இதை முன்கூட்டி செய்திருக்க வேண்டும்.
நீதிபதி: அவ்வாறு ஒருவரை துாண்டுவதற்கு, ஒருவர் உயிரிழக்க வேண்டுமா; அதிகாரிகளிடம் அக்கறை, தொலைநோக்கு பார்வை இருக்க வேண்டும்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைதான வழக்குகளில், ௯௦ சதவீதம் ரத்தாகி உள்ளது. காலதாமதம் என்ற காரணத்துக்காகவே, இந்த வழக்குகள் ரத்தாகிஉள்ளன. இதுகுறித்து, போலீஸ் தரப்பில் ஆய்வு செய்யப்பட்டதா; குறைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதா?
இவ்வாறு நீதிமன்றத்தில் வாதம் நடந்தது.
மனித உரிமை ஆணையம் 'நோட்டீஸ்'
சுவாதி
கொலை தொடர்பாக, நாளிதழ்களில் வந்த செய்தியின் அடிப்படையில், மாநில மனித
உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. ஆணைய தலைவர் டி.மீனாகுமாரி பிறப்பித்த உத்தரவு:
இந்த சம்பவம் குறித்தும், உடலை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்வது மற்றும் வழக்கு பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்தும்,
சென்னை போலீஸ் கமிஷனர், ரயில்வே போலீஸ் ஐ.ஜி., மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையின் தலைமை பாதுகாப்பு ஆணையர் ஆகியோர், இரண்டு வாரத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
:கொலை நகரான சென்னை மாநகரம்'*ஸ்டாலின் காட்டம்
சென்னை, சூளைமேட்டில் உள்ள சுவாதியின் இல்லத்திற்கு நேற்று சென்று, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.பின், அவர் அளித்த பேட்டி:
சி.பி.ஐ., இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராகவன், பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில், 'சுவாதி கொலை, தமிழக போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் வெட்கக்கேடானது. சென்னை போலீசார் மீது படிந்திருக்கும் இந்த கறையை துடைக்க முடியாத அளவுக்கு, ஒரு சூழ்நிலை உருவாகி இருக்கிறது' என, குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, 2013ல், 'பெண்களுக்கு உரிய பாதுகாப்புச் சட்டம்' என, 13 அம்ச சட்ட திட்டங்கள் கொண்ட ஒரு அறிவிப்பை ஜெயலலிதா வெளியிட்டார். அது செயல்படுகிறதா என தெரியவில்லை.
மே மாதம், ஜெயலலிதா மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தார். அதன்பின், சென்னை மாநகரம், கொலை நகரமாக மாறி வருகிறது. இதனால், வீட்டில் இருக்கும் பெண்களும் அச்சப்படுகின்றனர். தமிழக அரசு, உடனடியாக சட்டம் - ஒழுங்கை நிலை நாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
* மகளிர் காங்., தலைவி ஆறுதல்
தமிழக மகளிர் காங்., தலைவர் ஜான்சி ராணி, சுவாதி பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில், ''பொது இடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. கொலையாளியை வெகுவிரைவில் கைது செய்ய வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, காவல் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
* பெண்களை பாதுகாக்க தனி சட்டம்
இந்து மக்கள் கட்சியின் சென்னை மண்டல தலைவர் செந்தில்குமார், முதல்வர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனு:பெண்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க, தமிழக அரசு, பெண்கள் பாதுகாப்பு சிறப்பு தனி சட்டத்தை, சட்டசபையில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். சுவாதி குடும்பத்திற்கு, ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* 'இலவச துப்பாக்கி'
தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், முதல்வர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மனு:கடந்த, 2012ல், பாலியல் வன்கொடுமையால் இறந்த டில்லி மாணவி நிர்பயாவின் நினைவாக, அவரது பெயரில், 'நிர்பீக்' என்ற துப்பாக்கியை, மத்திய அரசு, 1.22 லட்சம் ரூபாய் விலையில், பெண்களுக்கு சில நிபந்தனைகளுடன், 2014ல் வழங்கியது. ஆனால், வறுமை காரணமாக, அனைத்து பெண்களும் பயன்பெற முடியவில்லை.
எனவே, தமிழக பெண்களுக்கு, 'நிர்பீக்' துப்பாக்கிகளை இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (116)
Reply
Reply
Reply