மகுடஞ்சாவடி : 'பேஸ்புக்'கில், தன் புகைப்படம் ஆபாசமாக சித்தரிக்கப்பட்டு வெளியானதால், அதிர்ச்சியுற்ற இளம்பெண் நேற்று தற்கொலை செய்து கொண்டார்.சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே, மேட்டூர் புவனகணபதி தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை, 46; தறி தொழிலாளி. அவரது மகள் வினுபிரியா, 21; பி.எஸ்சி., பட்டதாரி. இவர் படிப்பை முடித்துவிட்டு, பெற்றோருக்கு உதவியாக, வீட்டில் இருந்து வந்தார். அவர், மேட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.அப்போது அவர், பேஸ்புக்கில் கணக்கு துவக்கி, பலரிடம் நட்பு பாராட்டி உள்ளார். இந்நிலையில், கடந்த, 16ம் தேதி வினுபிரியாவின், 'மார்பிங்' செய்யப்பட்ட புகைப்படம், அரை நிர்வாண கோலத்தில், பேஸ்புக்கில் பரவியது.
இது குறித்து, மகுடஞ்சாவடி போலீஸ் ஸ்டேஷனில், அவரது பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார், இவர்களை அலைக்கழிப்பு செய்ததாக கூறப்படுகிறது. நீண்ட போராட்டத்துக்கு பின், சைபர் கிரைம் போலீசார் விசாரித்தனர். மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்தால் மனமுடைந்த வினுபிரியா, நேற்று காலை கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் மேற்கொண்ட சோதனையில், வினுபிரியா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர். அதையடுத்து, அவரின் உடல், சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது பிணவறையில், இருந்த வினுபிரியாவின் உடலை, உறவினர்கள் வாங்க மறுத்தனர். இந்த நிலையில், அங்கு வந்த தமிழ்நாடு மனித உரிமை கட்சியின் மாநில தலைவர் பூமொழிக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து, வினுபிரியாவின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது: ஜூன், 16ம் தேதி என்னுடைய மொபைல் போனுக்கு, 'ராங் கால்' வந்தது. அதில் பேசியவன், உன் மகளை அடக்கி வைக்க மாட்டியா... என, ஆபாசமாக திட்டினான். என் தங்கை மகன், ஜூன், 17ம் தேதி, என் மகள் வினுபிரியா போட்டோ, பேஸ்புக்கில் ஆபாசமாக வந்திருப்பதாக தெரிவித்தான். நானும் அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். என் பெண்ணும் அதைப் பார்த்து கதறி அழுதார்.எந்த பையன் மீதும் சந்தேகம் இருக்காண்ணு பெண்ணிடம் கேட்டேன். அவள் இல்லை என தெரிவித்து வந்த நிலையில், தினம் தோறும், புதிதாக படத்தை அப்லோடு செய்து கொண்டு இருந்தனர். குடும்பத்துடன் சென்று, ஜூன், 19ம் தேதி, சேலம் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தோம். அவர் சங்ககிரி டி.எஸ்.பி., கந்தசாமியிடம் கொடுக்கச் சொன்னார். டி.எஸ்.பி.,யோ, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தனிடம் கொடுக்கச் சொன்னார். அவரிடம் போனால், சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் கொடுக்கச் சொன்னார். புகாரை பெற்ற சைபர் கிரைம் போலீசார், இந்த, பேஸ்புக் கணக்கை உடனே முடக்க முடியாது. ஆஸ்திரேலியாவில் தான், அதன் லிங்க் இருக்கு. அங்கு சொல்லி தான் முடக்க முடியும். இதற்கு, 10 முதல், 15 நாள் ஆகும் என, கூறினர். என் பொண்ணு ரொம்ப மனம் உடைந்து போய் இருந்தா. நாங்க எஸ்.பி., அலுவலகத்துக்கு வந்த பின், வீட்டை பூட்டி விட்டு, துாக்கு போட்டு இறந்து விட்டாள். அவள் இறந்த ஒரு மணி நேரத்தில், அந்த கணக்கு முடக்கப்பட்டு விட்டது. இந்த செயலை முன்பே செய்திருந்தால், என் பெண் பிழைத்து இருப்பாள். என் மகளின் இறப்புக்கு காரணம் போலீஸ் தான். என் பெண்ணுக்கு நடந்த கொடுமை, வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. அந்த குற்றவாளிகளை கைது செய்யும் வரை, என் மகளின் உடலை வாங்க மாட்டேன். என் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து, பேஸ்புக்கில் படம் வெளியிட்டவர்களை பிடிக்க வேண்டும் என்பதற்காக போலீசாருக்கு, 2,000 ரூபாயும், மொபைல் போனும் வாங்கிக் கொடுத்தேன். கண்டு பிடிக்க முடியாமல், அலட்சியமாக இருந்ததால், என் பெண் இறந்து போயிடுச்சு. இப்ப போலீசார், விசாரிக்க வராங்க, இந்த நாடு நாசமா போச்சு, எந்த பெண்ணும் நிம்மதியாக வாழ முடியாது.இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறினார். இப்பிரச்னையை சமூக நல அமைப்புகளும் கையில் எடுத்து போராட தயாராகி உள்ளன.
எஸ்.பி., அமித்குமார் சிங் கூறியதாவது: பேஸ்புக் ஐ.டி., கண்டறியப்பட்டு வருகிறது. வழக்கின் விசாரணைக்காக போலீசார் லஞ்சம் பெற்றதாக, அவரின் பெற்றோர் யாரும் என்னிடம் புகார் அளிக்கவில்லை. புகார் அளிக்கும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
'என்னை நம்புங்கள்...': தற்கொலை செய்து கொள்வதற்கு முன், வினுபிரியா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவது: முதலில், என்னை மன்னித்து விடுங்கள். என் வாழ்க்கை முடிந்தபின், நான் வாழ்ந்து என்ன செய்யப்போகிறேன். எனக்கு வாழ பிடிக்கவில்லை. அம்மா, அப்பாவே என்னை நம்பாதபோது, நான் உயிரோடு இருந்து, என்ன பிரயோஜனம்; அவர்களே என்னை பற்றி கேவலமாக பேசுகின்றனர். சத்தியமாக சொல்றேன், என் போட்டோவை, நான் யாருக்கும் அனுப்பவில்லை; எந்த தப்பும், நான் செய்யவில்லை. என்னை நம்புங்கள். மீண்டும் ஒருமுறை சாரி... சாரி...இவ்வாறு எழுதியுள்ளார்.
போலி 'பேஸ்புக் ஐ.டி.,' உருவாக்கம் : வினுபிரியாவின் பெயரில், 'மைதிலி வினுபிரியா' போலி ஐ.டி., உருவாக்கப்பட்டு, அந்த பெயரில், மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. முதல் முறை, படம் அனுப்பப்பட்ட நிலையில், எந்த எதிர்ப்பும், போலீஸ் நடவடிக்கையும் இல்லாததால், மீண்டும் மீண்டும் பலமுறை மார்பிங் படம் அனுப்பி உள்ளனர். போலீசாரின் மெத்தனப்போக்கே, வினுபிரியாவின் தற்கொலைக்கு காரணம். இந்த நிலையில், வினுபிரியா, மேட்டூர் அருகே, காவேரி நகரைச் சேர்ந்த முகம்மது சித்திக், 21, என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்பட்டது. அவரிடம் போலீசார் விசாரித்ததில், 'நான், அது போன்ற தவறான செயலில் ஈடுபடவில்லை' என, மறுத்துள்ளார்.