மும்பை : 'குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது, 'ஆதார்' எண் விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா மாநில அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிரான மனுவை, மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. 'பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும் போது, ஆதார் எண்ணை கட்டாயம் கொடுக்க வேண்டும்' என, கடந்தாண்டு, மஹாராஷ்டிரா சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து, சமூக சேவகர் ஒருவர், மும்பை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தார்;
அதில் கூறப்பட்டிருந்ததாவது: குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் போது ஆதார் எண்ணை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்ற இந்த விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இன்னும் ஆதார் எண் வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு ஆதார் எண் பெறுவதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, மஹாராஷ்டிரா அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதிகள் ஏ.எஸ்.ஓகா, ஏ.ஏ.சயாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் எண் கிடைக்க வேண்டும் என்பதை ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் தான், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டத்துக்கு எதிரான பொதுநல மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE