அடிச்ச காசுல... பிடிச்ச அதிகாரிக்கு விழா!| Dinamalar

'அடிச்ச' காசுல... 'பிடிச்ச' அதிகாரிக்கு விழா!

Added : ஜூன் 28, 2016
Share
காலில் ரீபோக் ஷூ, டிராக் பேன்ட்ஸ் சகிதமாக, 'வாக்கிங்' போய் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். முதல் ரவுண்டை முடிக்கும் தருவாயில், சித்ராவின் போன் சிணுங்கியது.''ஹலோ...ஹலோ...ச்சே, ரேஸ்கோர்ஸ்லயே சிக்னல் கிடைக்க மாட்டேங்குது,'' சலித்துக் கொண்டாள் சித்ரா.''இது பரவாயில்லையே, சிக்னல்தானே பிரச்னை. நம்மூரு கவுன்சிலருங்க சிலபேரு கார்ப்பரேஷன் குடுத்த, சி.யு.ஜி., போனை
'அடிச்ச' காசுல... 'பிடிச்ச' அதிகாரிக்கு விழா!

காலில் ரீபோக் ஷூ, டிராக் பேன்ட்ஸ் சகிதமாக, 'வாக்கிங்' போய் கொண்டிருந்தனர் சித்ராவும், மித்ராவும். முதல் ரவுண்டை முடிக்கும் தருவாயில், சித்ராவின் போன் சிணுங்கியது.
''ஹலோ...ஹலோ...ச்சே, ரேஸ்கோர்ஸ்லயே சிக்னல் கிடைக்க மாட்டேங்குது,'' சலித்துக் கொண்டாள் சித்ரா.
''இது பரவாயில்லையே, சிக்னல்தானே பிரச்னை. நம்மூரு கவுன்சிலருங்க சிலபேரு கார்ப்பரேஷன் குடுத்த, சி.யு.ஜி., போனை பயன்படுத்தறதே இல்லைன்னு புகார் கிளம்பியிருக்கு. ஜனங்க அவங்க வார்டு பிரச்னைகளை கவுன்சிலர்கள்ட்ட சொல்றதுக்கு கொடுத்த போனை, அவங்க எடுபிடிகதான் யூஸ் பண்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.
''ஏய்... எங்கிட்டயும் ஒரு கார்ப்பரேஷன் மேட்டர் இருக்கு,'' என, சித்ரா ஆரம்பித்தாள்.
''நம்ம கார்ப்பரேஷன்ல, அஞ்சு பேருக்கு, 'இசட்.எஸ்.ஓ.,' (மண்டல சுகாதார அலுவலர்) போஸ்டிங் போட்டு, 'சி.எம்' ஆர்டர் போட்டாங்க. ஆனா, நாலு மாசமாகியும் அவங்களுக்கு பணியிடம் ஒதுக்கல. 'இசட்.எஸ்.ஓ.,' போஸ்டிங்குல இன்சார்ஜா இருக்கறவங்க, உயர் அதிகாரிகளுக்கு ரொம்ப நெருக்கமாம்.
''அதிகாரிக்கு காய்ச்சல்னா, வீட்டுல இருந்து கஞ்சி கொண்டு வந்து கொடுக்கறாங்களாம். 'கப்பம்' வசூல் பண்ணி கொடுக்கறாங்களாம். அதனால, யாருக்கு போஸ்டிங் போடணுமோ அவங்களுக்கு போடாம, 'டம்மி'யான ஆளுகள, 'இசட்.எஸ்.ஓ.,'வா போட்டிருக்காங்க. அதனாலதான் டெங்கு கொசு ஒழிப்புல பெரிய சொதப்பலாயிடுச்சு,'' என்றாள்.
குறுக்கிட்ட மித்ரா, ''கார்ப்பரேஷன்ல எதுதான் உருப்படியா நடக்குது? குப்பையையே கடத்துறாங்கன்னா பார்த்துக்கோ,'' என்றாள்.
''அட கருமமே... இது எங்கே மித்து?''
''கார்ப்பரேஷனுக்கு சப்போர்ட்டா, சாலிட்வேஸ்ட் மேனேஜ்மென்ட் திட்டத்துல, காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் சிலபேரு செயல்படுறாங்க. உப்பிலிபாளையம் கார்ப்பரேஷன் இடத்துல அவங்க சேர்த்து வச்சிருந்த, 40 ஆயிரம் ரூபா மதிப்புள்ள பாலித்தீன் குப்பைய, ஆளுங்கட்சி ஆளுக, ராத்திரியோட ராத்திரியா கடத்திட்டாங்களாம். இந்த கடத்தலுக்கு வார்டு கவுன்சிலரும் உடந்தையாம்,'' என்றாள் மித்ரா.
''எல்லாம் காசு பணம், துட்டு, மணி, மணி...'' பாடத்துவங்கினாள் சித்ரா.
''இன்னொரு சுருட்டல் சமாச்சாரம் இருக்கு...இது தி.மு.க., சுருட்டல்,'' என்றாள் மித்ரா.
''அவங்க, எலெக்ஷன்ல தோத்ததுக்கு காரணத்தை கண்டுபிடிச்சுட்டாங்களா?''
''கரெக்டா பாயின்டை பிடிச்சுட்டே. தி.மு.க., சார்புல கோயமுத்தூர்ல போட்டியிட்ட கவுண்டம்பாளையம் பையா கவுண்டர், பொள்ளாச்சி தொகுதி தமிழ்மணி தவிர, பாக்கியுள்ள எட்டு தொகுதி வேட்பாளருக்கும், தேர்தல் செலவுக்கு கட்சி மேலிடம் ஒன்றரை கோடி ரூபா குடுத்திருக்காங்க,'' என்றாள் மித்ரா.
''அப்புறம் ஏன் தோத்தாங்களாம்?''
''ஸ்லம் ஏரியால ஓட்டுக்கு, 300 ரூவா சப்ளை செய்ய சொன்னாங்களாம். ஆனா, பல வேட்பாளருங்க, பகுதி செயலாளருங்க, பூத் கமிட்டிக்கு மட்டும் கொஞ்சம் கொடுத்துட்டு, பல லட்சம் ரூபாய அப்படியே சுருட்டிட்டாங்களாம். இது பத்தி, அதிகாரப்பூர்வமா புகார் போனதனால, மேலிடத்திலிருந்து வந்து விசாரிச்ச மஸ்தான், செலவு கணக்கு விவரத்த கேட்டு, தலைமைக்கு அனுப்பியிருக்காராம். சிங்காநல்லுார்ல ஜெயிச்ச கார்த்திக் மட்டும் தப்பிச்சிட்டாராம். மற்ற வேட்பாளருங்க மேல 'ஆக்ஷன்' இருக்கும்னு கட்சி வட்டாரத்துல பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
அப்போது அங்கே கிராஸ் ஆன ஒருவர், ''சரியா காலைல பத்தரை மணிக்கு ரெண்டு பேரும், ரிஜிஸ்ட்ரார் ஆபீசுக்கு வந்துருங்க. அங்க முடிச்சுரலாம்...,'' என்று போனில் யாரிடமோ பேசினார்.
''ரிஜிஸ்ட்ரார் ஆபீசுன்னு சொன்னவுடனேதான் ஞாபகத்துக்கு வருது. பத்திரப்பதிவு துறை புது டி.ஐ.ஜி., 'ஷாக்' ஆயிட்டாராம்,'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
''ம்ம்....மேல சொல்லு,'' ஆவலானாள் மித்ரா.
''கோவை பத்திரப்பதிவு உயரதிகாரி ஒருத்தரு ரிட்டயர் ஆனதுக்கு, 'சென்ட் ஆப் பார்ட்டி' நடத்த, சில சப்-ரிஜிஸ்ட்ராருங்க கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்துல இருக்கற, 57 சப்- ரிஜிஸ்ட்ரார் ஆபிசுலயும் தலா, 50 ஆயிரம் ரூவான்னு, 20 லட்ச ரூபாய் கலெக்ட் பண்ணியிருக்காங்க. ஜென்னி கிளப்ல பெருசா 'பேர்வெல் பார்ட்டி' நடத்தி, ரிட்டயர்டு ஆபீசரே அசந்து போற மாதிரி, ஒரு காம்ப்ளிமென்ட் குடுத்துருக்காங்க. இந்த விவகாரம், புதுசா நெல்லைல இருந்து வந்துருக்கற நேர்மையான டி.ஐ.ஜி.,க்கு தெரிஞ்சு போச்சாம். இப்ப எல்லா சப்- ரிஜிஸ்ட்ரார் ஆபிசருங்களும் கதிகலங்கி போயிருக்காங்களாம்,'' என்று முடித்தாள் சித்ரா.
''ரொம்ப டயர்டா இருக்குக்கா,'' என்றபடி ரேஸ்கோர்ஸ் சிமென்ட் பெஞ்சின் மீது அமர்ந்தாள் மித்ரா.
அப்பகுதியில் இடிந்து மோசமான நிலையில் இருந்த, ரேஸ்கோர்ஸ் அரசு குடியிருப்புகளை பார்த்த சித்ரா, ''உனக்கு தெரியுமா மித்து, வீட்டு வசதி வாரியத்துல விற்பனை பத்திரம் வாங்கணும்னா, சென்டுக்கு ஒரு லட்சம் அழுதாதான் கிடைக்குதாம். கணபதி, காந்திமாநகர், வீரகேரளம் பகுதி சைட்டுகளுக்குதான் இவ்வளவு டிமாண்டாம்,'' என்றாள்.
''அடப்பாவிங்களா...அதுக்கு ரூரல்ல நாலு சென்டு வாங்கிப் போட்டுறலாமே... அது சரி, புதுசா வந்துருக்கற 'இ.இ.,' நல்லமாதிரின்னு சொல்றாங்க. அவரு இருக்கும்போதே இப்படி நடக்குதா?'' என்று கேட்டாள் மித்ரா.
''அதுக்குதானே புரோக்கர்க இருக்காங்க. அதிகாரிங்க சப்போர்ட்டோட செந்தில்குமார்ங்கற புரோக்கர் வாரத்துக்கு, பத்துலருந்து 20 டீட் வரைக்கும் முடிச்சுக் குடுக்கறாராம். வர்ற பணத்துல பாதி, இங்க இருக்கற மேனேஜருக்கு போயிருதாம். இதுக்குன்னு டிரைவர், அசிஸ்டென்டுன்னு ஒரு குரூப்பே இருக்குதாம்,''
சித்ரா சொல்லிக் கொண்டிருக்கும்போதே, எதிரெதிரே வாக்கிங் சென்று கொண்டிருந்த இருவர், ''டேய்... ஸ்ரீதர், எப்படியிருக்கே ரொம்ப நாளாச்சு பார்த்து...வா, வாக்கிங் போயிட்டே பேசலாம்,'' என்றபடி சென்றனர்.
''நாமளும் இன்னொரு ரவுண்டு போகலாம்... எந்திரி,'' என்ற மித்ரா,
''செலவு செஞ்ச பணமெல்லாம் போச்சேன்னு, புலம்புறாராம் மக்கள் தொடர்பு துறையில ஒரு அதிகாரி,''
''சென்னைக்கு மாத்துனாங்களே...அவரா?''- கேட்டாள் சித்ரா.
''கரெக்ட்...அவரேதான். கலெக்டர் ஆபீசுல இருக்கும்போது, அவரோட ஆபீசுக்கு பால்ஸ் சீலிங், கலர்புல் கர்ட்டன்லாம் போட்டு 'ஜம்'னு மாத்தி வெச்சிருந்தார். எப்படியும் மூணு வருஷத்தை, இங்கயே ஓட்டிறலாம்னு நினைச்ச அவர, திடீர்னு சென்னைக்கு மாத்திட்டாங்க. ஆபீச மினுக்கறதுக்கு செலவு பண்ணுன, அத்தனை காசும் போச்சேன்னு, பிரெண்ட்ஸ்கிட்டலாம் புலம்பி தள்றாராம்,'' என்றாள் மித்ரா.
''காசுன்னா சும்மாவா பின்னே...? நம்மூரு தாலுாகா ஆபீசுகள்ல காசுன்னா பேயா அலையுறாங்க, கேள்விப்பட்டியா?'' என்றாள் சித்ரா.
''தாலுாகா ஆபீசுன்னாலே, பணம்தானே...இதுல புதுசா என்ன இருக்கு?'' என்ற மித்ரா, ''சரி, சொல்லு,'' என்றாள்.
''உள்ளாட்சித்தேர்தல் வர்றதால, ரேஷன்கார்டு கேட்டு வர்ற அப்ளிக்கேஷனையெல்லாம் சீக்கிரமா முடிச்சு, கார்டு குடுக்கணும்னு கவர்ன்மென்டும், உள்ளூர் மினிஸ்டரும் ஆர்டர் போட்டிருக்காங்க. இது போதாதா நம்ம அதிகாரிகளுக்கு? சில அதிகாரிங்க, ரேஷன் கார்டுக்கு வழக்கமா வாங்குற ரேட்டை ஆயிரத்துலயிருந்து, மூவாயிரமா உயர்த்திட்டாங்க. ஆனா, சொன்னபடி, புது கார்டையும் சீக்கிரமா குடுத்துர்றாங்களாம்,'' என்றாள் சித்ரா.
''என்கிட்ட ஒரு ஆர்.டி.ஓ., மேட்டர் வச்சிருக்கேன் கேளு,''
''ம்ம்...சொல்லு,'' என்று சுவாரஸ்யமானாள் சித்ரா.
''கோவை போக்குவரத்து துறையில, 'இணை'யா இருக்கிற ஆபீசர், இந்த பதவிக்கு வந்து மூணு வருஷத்துக்கு மேல ஆச்சாம். அவரு, மதுரை போக்குவரத்துத்துறை இணை கமிஷனராவும் இருக்காராம். இது மட்டுமா, மாநில போக்குவரத்து கமிஷனர் ஆபீசுல இணை கமிஷனர் (விதிகள்) பதவியையும் கூடுதலா கவனிச்சுட்டு வர்றாராம். எல்லாத்துக்கும் காரணம், துட்டுதான்னு ஆர்.டி.ஓ.,ஸ்லாம் கோரஸ் பாடறாங்க,'' என்றாள் மித்ரா.
அப்போது போன் வந்தது. ''ஹலோ... முருகா சொல்லுங்க.
அஞ்சலி செலுத்தவா, இப்பவே வந்துர்றோம்,'' என்று போனை 'ஆப்' செய்த சித்ரா, ''மித்து, மதுக்கரை யானை சாக, மயக்க மருந்து ஓவர் டோஸ் ஆனதுதான் காரணம்னு சொன்னேன்ல, அது உண்மைதானாம்.
இஷ்டத்துக்கு ஊசி போட்ட அந்த ஆபீசரு மேல ஆக்ஷன் எடுக்கணும்னு உள்ளேயே சில பேரு கொடி பிடிக்கறாங்களாம். சரி, வா நம்ம பங்குக்கு போய் அஞ்சலி செலுத்திட்டு வந்திருவோம்; வந்து குளிச்சிக்கலாம்,'' என்றாள்.
ஸ்கூட்டர் மதுக்கரையை நோக்கி பறந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X