""அவரோட செயல்பாட்டை நேரில் பார்த்து அதிசயத்து போயிட்டாங்க; இவரைப் போயி தப்பா நெனைச்சிட்டோமேன்னு,'' வருத்தப்பட்டிருக்காங்க என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள் சித்ரா.
இஞ்சி டீ கொடுத்து உபசரித்து மித்ரா, ""என்னக்கா? யாரு? எதுக்காக வருத்தப்பட்டாங்க. கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்,'' என, விஷயத்தை கிளறினாள்.
"டீ'யை வாங்கி ஒரு சிப் அருந்திய சித்ரா, ""மத்திய ஜவுளித்துறை அங்கீகாரத்தோடு, டில்லியில "நிப்ட்' கல்லூரி இயங்குது. இதன் "போர்டு மெம்பரா', ஏற்றுமதியாளர் சங்க தலைவர் இருக்காரு. அக்கல்லூரி அங்கீகாரம் வாங்கி, பின்னலாடை தொழிலுக்காக, 20 வருஷத்துக்கு முன்னாடி, முதலிபாளையத்துல, நிப்ட்-டீ கல்லூரி உருவாக்குனாரு.
""ஆரம்பத்துல, டில்லி கல்லூரியை பின்பற்றி பாடத்திட்டங்களை செயல்படுத்துனாங்க. நாளடைவில் முக்கியத்துவம் கொடுக்கமா விட்டுட்டாங்களாம். அதனால, "நிப்ட்-டீ' கல்லூரியோட அங்கீகாரத்தை ரத்து செய்யப் போறாம்னு, கோதாவுல இறங்கிட்டாங்க, டில்லிக்காரங்க. என்னை செய்றதுனு தெரியாம, திருப்பூர்க்காரங்க கையை பிசஞ்சுட்டு இருந்திருக்காங்க. கல்லூரிய இப்ப நிர்வாகிக்கறவங்க, எதிரணியை சேர்ந்தவங்க. இதை பொருட்படுத்தாம, தான் உருவாக்கிய கல்லூரியை சிக்கல்ல இருந்து மீட்கனும்னு, தலைவரு, தானே களமிறங்கியிருக்கார்.
""டில்லிக்காரங்களையும், திருப்பூர் நிர்வாகிகளையும் வரவழைச்சு, நட்சத்திர ஓட்டலில் பேச்சு நடத்தியிருக்காங்க. திருப்பூர் கல்லூரி சேவை நோக்கத்துல செயல்படுது; வர்த்தக நோக்கம் இல்லைங்கறதை தெளிவா விளக்கியிருக்காரு. இதை கேட்ட டில்லிக்காரங்க, அசந்து, "அங்கீகாரத்தை ரத்து செய்ய மாட்டோம்'னு உறுதி கொடுத்துட்டு போயிருக்காங்க. மலைபோல வந்த சிக்கல், பனிபோல மறைஞ்சுபோச்சுனு நிம்மதி அடைஞ்சிருக்காங்க. பகைமையை மறந்து, பிரச்னையை பேசி தீர்த்ததை பார்த்து, இவரை போயி, எதிரியா நினைச்சுட்டோமேனு, மனசுக்குள்ள நொந்துக்கறாங்க,'' என்றாள்.
""அடடே... அப்புறம் என்னாச்சு?,'' என, விடாப்பிடியாக மித்ரா கேட்க, ""ரெண்டு தரப்பும் ஒன்னாகிடுவாங்கன்னு நெனைக்கிறேன்,'' என்றாள் சித்ரா.
""அப்போ, இந்த வருஷம் எலக்ஷன் நடக்காதா?,'' என, மித்ரா கேட்க, ""வெள்ளி விழா தலைவர், நிறுவன தலைவரா மாறிடுவாரு. மத்த பதவிகளுக்கு, ஏகமனதா தேர்வாகிடுவாங்க. இந்த தடவை, மாற்றத்துக்கான அணிக்காரங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்க; அதனால, எலக்ஷனுக்கு வாய்ப்பில்லைன்னு பேசிக்கிறாங்க. இனி, தொழில் துறையை சேர்ந்தவங்க ஒற்றுமையா செயல்படுவாங்கன்னு நம்பிக்கை பிறந்திருக்கு. ஆனா, ரெண்டு தரப்பிலும், "உள்ளடி' வேலைபார்க்கறவங்களும் இருக்காங்க; அவங்க "சும்மா' இருந்தா, எல்லாம் "சுபமா' நடக்கும்,'' என்றாள், சித்ரா.
""அதெல்லாம் சரி, உள்ளாட்சி எலக்ஷன் எப்படி இருக்கும்னு சொல்லவே இல்லையே,'' என, மித்ரா கேட்க, ""நேரடி மேயர் தேர்தல் இல்லைன்னு அறிவிச்சிட்டாங்களே, அதனால, "மாஜி' வி.ஐ.பி.,க்கு ஏகப்பட்ட வருத்தம். அமைச்சரா இருந்துட்டு, கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடுறாதான்னு, "ஈகோ' தடுக்குது, அப்படியே ஜெயிச்சாலும், மேயர் வேட்பாளரா, கட்சி தலைமை அறிவிக்கணுமே, இல்லேன்னா, மண்டல தலைவர் பதவியை மட்டுமே கைப்பத்த முடியும். அதனால, வாரிய தலைவர் பதவியை வாங்க முடியுமான்னு, பல வழிகள்ல முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு.
""அதே நேரத்துல, ரெண்டாம் கட்ட தலைவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம். எப்படியாவது, "சீட்' வாங்கணும்னு, கட்சி தலைமைக்கு தங்களது சுய விவரங்களை பட்டியலிட்டு, கடிதம் அனுப்பிக்கிட்டு இருக்காங்க. யார் யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதோ, தெரியலை,'' என்றாள் சித்ரா.
""எதிர்க்கட்சி தரப்பு ரொம்பவும் அமைதியா இருக்கே,'' என, மித்ரா குடைந்தெடுக்க, ""அவுங்களுக்கு என்ன? தி.மு.க., தரப்பு சந்தோஷத்துல இருக்கு. கவுன்சிலரா ஜெயிச்சா போதும், தோழர் கட்சிக்காரங்களையும், முரசு கட்சிக்காரங்களையும் கைகோர்த்து, மண்டல தலைவர் பதவியை கைப்பத்துறதுக்கு முயற்சி பண்ணலாம்னு, கூட்டல் கழித்தல் கணக்கு போட்டுக்கிட்டு இருக்காங்க,'' என்ற சித்ரா, மித்ராவை அழைத்துக்கொண்டு காய்கறி மார்க்கெட்டுக்கு கிளம்பினாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE